இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற போர்க் குற்ற குற்றச்சாட்டுக்கள், நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை தகர்க்கும் நோக்குடனானவை என்று இலங்கையின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான சிறப்புத்தூதுவரான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
பிபிசி சந்தேசியவின் சரோஜ் பத்திரனவுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அம்னஸ்டி இண்டர்நாஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகியவற்றை பெயர் குறித்துப் பேசிய சமரசிங்க, இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் அமைப்புக்கள் விடுதலைப்புலிகளுடன் கைகோர்த்துச் செயற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தின் இறுதி வடிவம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே இலங்கையினால், அது குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியும் என்றும் மஹிந்த சமரசிங்க கூறியிருக்கிறார்.
தற்போதைக்கு கடந்த மார்ச் மாதத்தில் தாங்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்தார்களோ அந்த நிலையில்தான் இன்றும் இருப்பதாக கூறிய சமரசிங்க, இப்படியான தீர்மானம் தேவையற்ற ஒன்று என்பதுதான் தற்போதைக்கு தமது நிலைப்பாடு என்றும் கூறினார்.
இதுவரை அமெரிக்காவுடன் முறைப்படியான கலந்துரையாடல் எதனையும் தாம் அண்மையில் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா இந்த விடயத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது எம்றும் அவர் குறிப்பிட்டார்.