3/16/2013

| |

வைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம்

-எம்.ஆர்.ஸ்டாலின்-
vairamuththu4தலித் போராளியும் அகில இலங்கைத் தமிழ் பெளத்த காங்கிரசின் தலைவருமான வைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 03-03-2013 இல் பாரிஸ் நகரில் இடம் பெற்றது.பிரான்சில் இருந்து செயற்படும் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் ஏற்பாட்டின் பெயரில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சுமார் அறுபது வரையான சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு நிகழ்வுக்கு வலுச்சேர்த்தனர்.

கடந்த மாதம்(யாழ்ப்பாணத்தில் ) தனது தொண்ணூற்றி நான்காவது வயதில் காலமான  வைரமுத்து அவர்களுக்கு  புகலிடத்தில் இடம் பெறும் முதலாவது அஞ்சலிகூட்டமாக இந்நினைவேந்தல் கூட்டம் அமைந்திருந்தமை  குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வினை  தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் தொடக்கி வைத்து அறிமுகவுரையை ஆற்றினார்.

யாழ்ப்பாண மண்ணில் தலை விரித்தாடிய தலித் மக்களின் vairamuththuமீதான கடந்த கால ஒடுக்கு முறைகளை நினைவு கூர்ந்த தேவதாசன் ஆதிக்க சாதியினரின் அடக்கு முறைகளை உடைத்தெறிய பலவித போராட்டங்களை தலித் மக்கள் மேற்கொண்டிருந்தமையை விபரித்தார்.அதில் ஒரு வடிவமாகவே சாதியத்தை கட்டிக்காக்கும் இந்து மதத்தை உதறித்தள்ளி பெளத்தத்தை ஏற்று கொண்ட அம்பேத்கர் வழியில் நமது வைரமுத்து ஐயா  அவர்களும் பயணம் செய்தார் என தெரிவித்தார்.அதுமட்டுமன்றி சாதிக்கொடுமைகள் ,தீண்டாமை என்பவை இன்று வெவ்வேறு வடிவங்களை  அடைந்திருக்கின்றனவே அன்றி அவை ஒழிந்து விடவில்லை.இன்று வடகிழக்கில் ஏட்டிக்கு போட்டியாக எழுந்து நிற்கின்ற கோயில் கோபுரங்களே அதற்கு சாட்சியங்களாக கூறமுடியும். .கோயில்கள் இருக்கின்றதென்றால் அங்கே  ஆசாரங்கள் இருக்கும் .அவை சாதியத்தையே வளர்க்கும் என தேவதாசன் தெரிவித்த கருத்துக்கள் புறம்  தள்ள முடியாதவை.ஒருகாலத்தில் ஒப்பீட்டு ரீதியாக சாதிய கொடுமைகள் குறைவாக இருந்த கிழக்கு மாகாணத்தில் கூட இன்று அதிகரித்து வரும் இந்துத்துவ ஆகம வாழ்வியல் முறைகள் ஆபத்தானவை வெறுக்கத்தக்கன,என தெரிவித்த தேவதாசன்  மேலும் பல விடயங்களை தொட்டு பேசினார்.இறுதியாக அன்று சாதிய ஒடுக்கு முறையில் இருந்து   தப்பிக்கும் முயற்சியில்  சுமார் நூறு இளைஞர்கள்  பெளத்தத்தை தழுவி வட  இலங்கையில் இருந்து புறப்பட்டு தென்னிலங்கை நோக்கி பயணமானமை,அதற்கு இந்த வைரமுத்து ஐயாவே முன்னோடியாகவிருந்தமை .என்பன  போன்ற பலவித வரலாற்று  குறிப்புகளை எடுத்துரைத்ததோடு அந்த புரட்சிகர இளைஞர்களில் ஒருவராக  இருந்த தோழர் யோகரெட்ணம் அவர்களை உரையாற்ற அழைத்தார்

vairamuththu1தோழர் யோகரட்ணத்தின் நினைவு பெட்டகத்தினை தரிசிக்கும் வாய்ப்பு  வைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வினூடாக மீண்டும் ஒரு முறை கிடைத்தது.யாழ்ப்பாண  மண்ணில் முதல் முறையாக பாடசாலைக்குள் நுழைய ஒரு தலித் மாணவன் 1905 வரைபோராட வேண்டியிருந்த வரலாற்று நிகழ்வில் தொடக்கி 1948 ல் உருவாக்கப்பட்ட அகிலஇலங்கைதமிழ் பெளத்த மகா சங்கம்,1956ம் ஆண்டு நல்லூர் ஆலையை பிரவேசம்,1962 கம்யயூனிச கட்சிக்குள் ஏற்பட்ட  பிளவுகள்,யாழ்ப்பாண மண் எதிர்கொள்ள நேர்ந்த சாதி எதிர்ப்பு போராட்டங்கள்,செல்லக்கிளி, மகேஸ்வரி போன்ற பெண் போராளிகளின் சாதனைகள் என நீண்ட அவரது உரை தமிழ் தேசிய மைய நீரோட்ட அரசியலினால் மறக்கடிக்கப்பட்ட தலித்மக்களின் வரலாற்று குறிப்புகளை தூக்கி நிறுத்தும் பணியில் நாம் என்றும் சோர்ந்துவிட கூடாது என்பதை எடுத்துரைத்தது.வைரமுத்து  ஐயாவுடனான அவரது அரசியல் அனுபவங்களை    அவர் எடுத்துரைத்த விதம் சபையிலிருந்த பலருக்கு வைரமுத்து ஐயாவுடன் வாழ்ந்த அனுபவத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அவரைத் தொடர்ந்து எம்.ஆர்.ஸ்டாலின் தனதுரையில் vairamuththu2யோகரத்தினம் தோழருடைய நூல் ஊடாகவே வைரமுத்து அவர்களுடைய களப்பணிகள் பற்றி அதிகம் அறிந்து கொண்டதாகவும் அந்த நூல் வெளியீட்டுக்காக 2011ல் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது அந்த மகானை நேரிடையாக சந்திக்க கிடைத்த வாய்ப்பை தன்  வாழ் நாளில் கிடைத்த அரிய கணங்களாக உணருவதாகவும் தெரிவித்தார்.அவரது பெளத்தம் நோக்கிய அரசியல் செயற்பாடுகளை அன்றையகால சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் எனவும் இன்றுள்ள தமிழ்-சிங்கள இனவாத அரசியல் கண்ணாடிகளுடன் அவரது பெளத்தம் நோக்கிய நகர்வுகளை நோக்கினால் பலருக்கு அவர் துரோகியாகவே தெரிவார்.ஏனெனில் இன்று பெளத்தம் என்பதை நாமெல்லாம் சிங்களவர்களுக்கு மட்டும் உரிய சொத்தாக விட்டு விலகி நிற்கின்றோம்.அனால் உண்மை அதுவல்ல பெளத்தம் தமிழர்களுக்கு மிக நெருக்கமாயிருந்த காலமொன்றிருந்தது.வட கிழக்கு பிரதேசங்களிலும் தமிழ் பெளத்தம் இருந்திருக்கின்றது யாழ்ப்பாணத்திலுள்ள பல கிராமங்களின் பெயர்கள் அதற்கு சாட்சி.தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் என் நாம் கொண்டாடும் சீவக சிந்தாமணியோ குண்டலகேசியோ இதுவெல்லாம் சமண,பெளத்த காவியங்களே.அதுமட்டுமல்ல இலங்கையில் பெளத்தம் இன்று ஒரு மதமாக சுருங்கிவிட்டது.உண்மையில் அது கடவுள் மறுப்பிலிருந்து உருவாகிய ஒரு சிந்தனை இந்து மதத்தின் ஏற்றத் தாழ்வு மிகு சாதிய சிந்தனைகளுக்கு எதிரான பெளத்தத்தை நாம் கையகபடுத்திகொள்ள வேண்டும் அதுவே எமது இந்துத்துவ சாதிய சீர்கேடுகளை அழித்தொழித்து சமுகத்தை சீர் செய்யும் வல்லமைகொண்டது.

vairamuththu3இன்று பொதுபலசேனா போன்ற சிங்கள கடும் போக்காளர்கள் முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கெதிராக செயற்படுவதற்கு பெளத்தத்தை பயன் படுத்துகின்றனர்.இவற்றையெல்லாம் நாம் கடுமையாக கண்டிக்க வேண்டும்.உண்மையான பெளத்தத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும்.ஆனால் இது ஓரிரு நாட்களிலோ ஓரிரு வருடங்களிலோ செய்ய கூடிய காரியமல்ல நாம் தீவிரவாதிகள் போல் சிந்திக்க முடியாது.ஒருசமுகமாற்றம் என்பது பல ஆண்டு கால அல்லது ஒரு நூற்றாண்டு கால வேலைத்திட்டமாகக் கூட இருக்கலாம்.என கூறி முடித்தார்.

அடுத்து உரையாற்றிய  சோபாசக்தி சாதி கொடுமைக்கெதிராக எவ்வளவோ காலமாக போராட்டங்கள் நடந்து கொண்டேயிருந்தாலும்   சாதியை ஒழிப்பது அவ்வளவு இலேசான காரியமாய் இல்லை என்பதையும் அதற்கான காரணமாக சாதியானது இந்து மதத்தோடு கோட்பாட்டு  ரீதியாக நன்கு பிணைக்கப்பட்டுள்ள விதங்களைப் பற்றியும் விளக்கினார்.இவைபற்றி முழுமையாக ஆய்வு செய்த அம்பேத்காரின்  பணிகளை நினைவு கூர்ந்ததோடு .  இலங்கையில் சாதி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த யாருமே இந்த இந்து மதத்தை கேள்விக்குட்படுத்த வில்லை என்பதோடு சாதியத்திற்கு எதிரா ஒரு இலட்சம் பக்கங்களுக்கு அதிகமாக எழுதிய அம்பேத்கரின் பெயரையும் கூட அவர்கள் உச்சரிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியதோடு இந்து மதத்தை ஒழிக்காது சாதியத்தை ஒழிப்பது சாத்தியமில்லை எனவும் குறிப்பிட்டார்.

இந்து மதமானது சாதியத்தின் காவலனாகவும், பெளத்தம் சாதியத்துக்கு எதிரானதொன்றாகவும் இருப்பதாக எதிர் முரண்களை சுட்டி பேசியதை தொடர்ந்து கேட்டுகொண்டிருந்த பார்வையாளருக்கு மேற்படி பேச்சுகளை மறுதலித்த ஒரு உரை காத்திருந்தது.பிரான்சின் பெளத்த மதகுருவாக பணிபுரியும் கலாநிதி ஆனந்த தேரர் ஒரு சமய சமரச பேச்சாக இந்து மதத்தில் இருந்துதான் பெளத்தம் வந்தது.இரு மதங்களும் ஒரே சிந்தனைகளையே கூறுகின்றன.ஆங்கிலேயரின் சூழ்ச்சியே இந்து-பெளத்த முரண்பாடுகளை வளர்த்தது என்றவாறாக ஒரு மாமூலான பேச்சினை நிகழ்த்தினார்.ஒரு தலித்துவ பார்வையில் பெளத்தம் என்பதாக உரையாற்றுமாறு ஏற்பாட்டாளர்கள் அவரை முன்பே கேட்டிருந்தால் அவரது உரை பிரயோசனமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. எனினும் இறுதி நேரத்தில் அவர் பெளத்தத்தின் இரு பெரும் சூத்திரங்கள் மனிதர்களிடையே உள்ள ஏற்ற தாழ்வை மறுத்துரைப்பது பற்றி சிறிது விளக்கினார்.

மேலும் சுனில் ஆரிய ரெத்னா அவர்கள் எழுதிய தமிழ் பெளத்தம் எனும் நூல், இகிஷ்ஷிலி தர்மரெத்னாவின் தமிழ் மொழியில் வந்திருக்க கூடிய பெளத்த நூல்கள் போன்ற நூல்களின் அறிமுகம் தேரரின் உரையின் ஊடாக சிறிது கிடைத்தது.
மற்றும் தேரருடனான சில உரையாடல்களை தலித் சமுக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தனது வேண்டு கோள் ஒன்றுடன் ஆரம்பித்து வைத்தார்.சபையின் சார்பில் பொது பல சேனா என்கின்ற சில அமைப்புகளை பெளத்த தேரர்களே முன்னின்று நடாத்துவதை அவர் சுட்டிகாட்டியதுடன் இது போன்ற அமைப்புகளின் செயற்பாடுகள் மீதான சிறுபான்மை மக்களின் மன குறைகளை உங்களை போன்றவர்கள் அவர்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான ஹலால் தடைச்சட்டம் குறித்த கேள்வியையும் முன்வைத்தார்..அதற்கு பதிலளித்த தேரர் மேற்படி அமைப்புகளில் மிக சொற்பமான தேரர்களே ஈடுபடுவதாகவும் அவர்கள் சில தீய சக்திகளினால் வழிநடத்தப்படுவதகவும் விளக்கமளித்தார் .

இற்றைக்கு 40 வருடங்களுக்கு மேலாக பெளத்த சிந்தனை குறித்த தேடல்களும் பெளத்த மத மாற்றங்களும் பிரான்சில் நிகழ்ந்து வருகின்றது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெளத்த சிந்தனைகளால் கவரப்பட்டவர்கள் அதனை ஒரு இறையில்அற்ற ஆன்மிக சிந்தனையாக கருதுகின்றார்கள். அவவாறானவர்களின் தேடலில் இலங்கையிலுள்ள தேரவாத பெளத்தமானது பெளத்த நெறிமுறைகளுக்கு மாறாக வெறும் சிங்கள் தேசிய வாதத்தை வலியுறுத்தும் மதமாக இருந்துவருவதாக கருதுவது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள் என அசுரா அவர்கள் கேள்வி எழுப்பினார்.
மேற்குலகில்  தலாய் லாமா போன்றவர்களின் பிரச்சாரங்களின் தாக்கம் என்றும் மதத்தையும் அரசியலையும் கலப்பதை தம் போன்றவர்கள் ஏற்றுகொள்ள முடியாது என  தேரர் அளித்த பதிலிலிருந்து புதிய கேள்வியொன்று விஜியினால் எழுப்பப்பட்டது .
அப்படியானால் இலங்கையில் பெளத்தம் அரச மதமாக பேணப்படுவதையிட்டு உங்களைபோன்ற தேரர்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
ஆனந்த தேரர் சளைக்காது பதிலிறுத்தார் “அரசியல் வாதிகள் மதங்களை பயன்படுத்தி பாரபட்சமான ஆட்சிகளுக்கு நியாயம் கற்பிப்பதை நான் எதிர்க்கின்றேன் இவ்வாறான எனது தொடர்ச்சியான பணியின் காரணமாகவே நானும் பல ஆண்டுகளாக அகதியாக இங்கு வாழ்ந்து வருகின்றேன்”, என தேரர் பதிலளித்தார்.இந்த ஆனந்த தேரர் போன்று இன்னும் பலர் உருவாக வேண்டும் .