மட்டக்களப்பு - கல்லடிப் பாலம் எதிர்வரும் 22 ஆம் திகதி மக்களின் பொதுப் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த பாலத்தை திறந்து வைக்கவுள்ளார்.
1200 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடிப் பாலம் ஏற்கனவே ஒடுக்கமாக அமைந்திருந்ததால் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால் இப் பாலத்தின் ஊடான போக்குவரத்தின் போது கால தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது இப் பாலம் இரு வழிப்போக்குவரத்தை மேற்கொள்ளக் கூடியவாறு அகலமாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள பழைய பாலத்திற்கு சமாந்தரமாக புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லடிப் பாலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.