2/26/2013

| |

முடிவுக்கு வரும் இலக்கிய குழப்பம்?தோழமையுடன் இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவினருக்கு..

வணக்கம்.
40வது இலக்கியச் சந்திப்புக் குறித்து நமக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை முடித்துக்கொண்டு நாமொரு பொது உடன்பாட்டை எட்டுவதற்காக இந்த வேண்டுகோளைப் பொதுவில் வைக்க விரும்புகின்றோம்.
40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கு நாம் விரும்புவதையும், இலங்கைக்கு சந்திப்புத் தொடர் எடுத்துச் செல்லப்பட வேண்டியதன் அரசியல் முக்கியத்துவத்தையும் நாங்கள் பாரிஸ் - 38வது இலக்கியச் சந்திப்பிலேயே வெளிப்படுத்தியிருந்தோம் என்பது அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட நீங்கள்அறிந்ததே. எனினும் அது குறித்த முடிவை கனடா - 39வது சந்திப்பில் எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.
கனடா சந்திப்பில் 40வது சந்திப்பை தீர்மானிக்கும் நிகழ்ச்சி நிரல் வந்தபோது நீங்களும் லண்டனுக்கு 40வது சந்திப்பை மின்னஞ்சல் மூலம் கோரியிருப்பது தெரிய வந்தது. அப்போது, பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் பங்குபெற்றியவரும் தற்போது இலங்கை இலக்கியச் சந்திப்பு குழுவிலிருப்பவருமான தோழர் கற்சுறா தலையீடு செய்து 40வது சந்திப்பு இலங்கைக்கும் கோரப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இரு கோரிக்கைகள் குறித்தும் விவாதித்து ஒரு முடிவை எட்டியிருக்க வேண்டிய கனடா இலக்கியச் சந்திப்பு, வருந்தத்தக்க முறையில் முடிவுகள் ஏதும் எடுக்காமலேயே 40வது சந்திப்பை எங்கே நடத்துவது என்ற முடிவை இலங்கைக்குக் கோரிய குழுவும் லண்டனுக்குக் கோரிய குழுவும் கலந்துரையாடி முடிவு செய்துகொள்ளட்டும் என அறிவித்தது.
அதைத் தொடர்ந்து நமக்குள் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. லண்டன் குழுவின் சார்பில் எங்களுடன் பேசுவதற்கு தோழர் ராகவனை நீங்கள் நியமித்தீர்கள். எனினும் துரதிர்ஷ்டவசமாக ஒரு முடிவு எட்டப்படாதது மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தைகளில் நீங்களோ இராகவனோ போதிய ஈடுபாட்டைச் செலுத்தவில்லை என்பதையும் வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கின்றோம். அதேவேளையில் லண்டனில் சந்திப்பை நடத்துவது குறித்து உங்களிடமிருந்து அறிவித்தல்கள் ஏதும் வெளியிடப்படாமலுமிருந்தது. எனவே மேலும் காலத்தைக் கடத்த விரும்பாத நாங்கள் இலங்கையில் 15 பேர்களும் புகலிடத்தில் 5 பேர்களும் கொண்டதான 40வது இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவை உருவாக்கி, வரும் யூலை மாதம் இலங்கையில் 40வது இலக்கியச் சந்திப்பு நடைபெறும் என அறிவித்தோம்.
எங்களது அறிவித்தல் வெளியாகிப் பல நாட்களிற்குப் பின்பு நீங்கள் லண்டனில் 40வது சந்திப்பை நடத்தப்போவதாக பொதுவில்அறிவித்திருந்தீர்கள். இது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. இலக்கியச் சந்திப்பு இரண்டாக உடைவதற்கான புறச்சூழல்கள் உருவாக்கப்பட்டன. இது விரும்பத்தகாதது.
அதன்பின்னும் முரண்களைத் தீர்ப்பதற்காக தோழர் ராகவனுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அது இந்நாள்வரை தொடர்கிறது. இந்தப் பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் ராகவன் பொறுப்புணர்வுடன் கூடிய வரவேற்கத்தக்க ஒரு பரிந்துரையை லண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவினருக்கும், இலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவினருக்கும் முன்னே வைத்தார். அவரது பரிந்துரையின் சாரம் கீழ்வருமாறு இருக்கிறது:
“இருதரப்பினரும் புரிந்துணர்வுடன் 40வது சந்திப்பை ஏப்ரலில் லண்டனிலும், 41வது சந்திப்பை யூலையில் இலங்கையிலும் நடத்துவதாக ஓர் உடன்பாட்டுக்கு வந்து அதைக் கூட்டறிக்கையின் மூலம் பொதுவில் அறிவிப்பது”.
தோழர் ராகவனின் பரிந்துரையை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். லண்டன் இலக்கியச் சந்திப்புக்கு எமது முழு ஆதரவை வழங்குவோம் எனவும் தெரிவிக்கிறோம். அதேபோன்று யூலையில் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலக்கியச் சந்திப்புக்கு நீங்களும் ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கையில் சந்திப்பு நடத்துவது குறித்து உங்களிற்கு அரசியல்ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதைப் பொதுவில் நீங்கள் வைக்க வேண்டும். அது உங்களது கருத்துரிமை. ஆனால் இந்தக் கருத்துரிமை இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலக்கியச் சந்திப்பைத் தடுப்பதற்கான அதிகாரத்தை உங்களுக்கு வழங்கிவிடாது என்றும், அது இலக்கியச் சந்திப்பின் சனநாயக மரபிற்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
எங்களது இந்த வேண்டுகோளை நீங்கள் பொதுநலனைக் கருத்தில்கொண்டு ஏற்றுக்கொள்வீர்கள் என்று உறுதியாக நம்புகின்றோம். தோழர் ராகவனின் பரிந்துரையின் அடிப்படையில் ஓர் கூட்டறிக்கையை வெளியிட்டு முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர உங்களை அழைக்கின்றோம். காலம் மிகக் குறுகியதாக இருப்பதால் முடிந்தளவிற்கு சீக்கிரமாக உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கின்றோம். நாங்கள் இந்த வேண்டுகோளைப் பொதுவெளியில் வைப்பதால் உங்களது பதிலும் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
தோழமையுடனும் வணக்கத்துடனும்
இலங்கை இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக்குழு (புகலிடப் பிரிவு)
- 25 பெப்ரவரி 2013.