ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் பேரவையில் நடந்துவரும் இலங்கை தொடர்பான விவாதம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இன்று விவாதம் நடந்தது.
இதில் திமுக, அதிமுக, பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இலங்கை அரசு தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து பேசினார்கள்.
குறிப்பாக, ஐநா மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை இந்த உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.
இவர்களின் இந்த கோரிக்கைகள் விமர்சனங்களுக்கு பதிலளித்த இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்கள், ''இலங்கையில் நடந்தவிடயங்களுக்கான பொறுப்பு கூறல் நடக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளை இந்த பொறுப்புக்கூறல் என்பது ஒரு நாட்டிற்கு உள்ளிருந்தே வருவது தான் சரியானது என்பது எனது கருத்து. அது தான் எதிர்பார்க்கும் பலன் தரும் என்பதும் எனது நம்பிக்கை. இந்தமாதிரியான அணுகுமுறை தான் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமல்ல, மற்ற தரப்பாராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருக்கும்'' என்றார்.
ஐநா தீர்மானம்
ஐநாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்பதை அறிவிக்கவேண்டும் என்று உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை குறித்து பதிலளித்த சல்மான் குர்ஷித், ''இந்த முறை நாம் எடுக்கவிருக்கும் இறுதி முடிவு என்னவென்று நான் இப்போதே அறிவிக்க முடியாது. நான் உங்களுக்கு இப்போது சொல்வது என்னவென்றால், இந்த தீர்மானத்தை கொண்டுவரும் நாடுகள், இலங்கை அரசுடன் பேசிய பிறகு, இலங்கை அரசில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக உணர்ந்தால், அத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரசு மற்ற நாடுகளை ஒப்புக்கொள்ளச் செய்யுமானால் நாங்கள் ஒருவிதாமான முடிவுக்கு வருவோம். மாறாக, இலங்கையில் நிலைமைகள் முன்னேறவில்லை என்கிற முடிவு எட்டப்படுமானால் நாங்கள் வேறுவிதமான முடிவுக்கு வருவோம் என்பதை மட்டும் உங்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.'' என்றார்.
இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் உருவான இலங்கையின் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று இலங்கை அதிபரின் சகோதரரே பகிரங்கமாக கூறியிருப்பது குறித்து இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்கிற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சல்மான் குர்ஷித், ''இலங்கை அரசானது பதிமூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்திற்கு அதிகமாக சென்று செயலாற்றவேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலை. அதை தொடர்ந்தும் வலியுறுத்துவோம். பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை ரத்துசெய்யவேண்டும் என்று இலங்கையில் கோரிக்கைகள் வெளிப்படுவது குறித்து இலங்கை அரசிடம் நாங்கள் பேசியபோது அந்த விவாதங்கள் ஜனநாயக நாட்டில் வெளிப்படும் பலதரப்பு கருத்துக்களின் ஒரு பகுதியே தவிர அது அரசின் இறுதியான கொள்கை முடிவல்ல என்று எங்களுக்கு சொல்லப்பட்டது.'' என்றார்.
சர்வதேச ராஜீய அரசியலில் அனுமதிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டு, நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் விதத்தில் இலங்கை அரசுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்கமுடியுமோ அவ்வளவு அழுத்தங்களை இந்தியா கொடுக்கும் என்று கூறிய சல்மான் குர்ஷித், இலங்கையுடன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் கருத்து வேறுபாடுகள், மனக்குறைகள், கடும் விமர்சனங்கள் இருந்தாலும் இலங்கையை இந்தியாவின் எதிரி நாடு என்று தம்மால் கருத முடியாது அப்படி கூறமுடியாது என்றும் அறிவித்தார்.