இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக் காலை புத்தகயாவுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். புத்தகயாவுக்குச் சென்ற ஜனாதிபதி, புத்தகயா விகாரையில் எழுந்தருளியுள்ள புத்த பகவானின் திருவுருவச் சிலைக்கு முன்பாக மலர்தூவி மற்றும் திருவிளக்கேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அநுராதபுரம் மஹாபோதியிலிருந்து கொண்டு செல்லப்பட்டு புத்தகயாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வெள்ளரசு விரூட்சத்தை சூழ போடப்பட்ட தங்க வேலியையும் ஜனாதிபதி திறந்துவைத்தார்.
ஏனைய மத குருமாருடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார். ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, ஜனாதிபதி செயலக பிரதம அதிகாரி காமினி செனரத் ஆகியோரும் இந்த விஜயத்தின்போது கலந்து கொண்டனர்.
நேற்று அதிகாலை ஜனாதிபதி சென்ற விமானம் புத்தகயா விமான நிலையத்தில் தரையிறங்கியது. புத்தகயா விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் வரவேற்றார். அங்கிருந்து அவர்கள் புத்தகயாவுக்கு சகல மரியாதைகளுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.