* நாட்டில் சகல மக்களும் சம உரிமை, சம கௌரவத்தோடு வாழ்வதே சிறந்த தீர்வு
* அபிவிருத்தியும் நல்லிணக்கமும் உலகக் குற்றச்சாட்டுக்களுக்குச் சிறந்த பதில்
* பெற்ற சுதந்திரத்தை காக்கும் கடமை எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு
* ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கு கௌரவமளிக்கிறோம்
இன, மத பேதங்களை ஏற்படுத்தும் செயற்பாடு நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்குச் சமனானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இன ரீதியாக நாட்டைப் பிரிப்பது சாத்தியமற்றது எனத் தெரிவித்த ஜனாதிபதி; அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் நாட்டில் சகல மக்களும் சம உரிமை சமகெளரவத்தோடு வாழ்வதே சிறந்த தீர்வு எனவும் குறிப்பிட்டார்.
இன, மத பேதங்கள் நாட்டை அழிவுக்கே இட்டுச் செல்லும் எனக் குறிப்பிட்ட அவர்; ஒற்றுமையாக வாழ்ந்தால் இன, மத பேதங்களுக்கு இடமில்லை எனவும் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று நடைபெற்ற இலங்கையின் 65வது சுதந்திர தின நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி; புலம்பெயர் அமைப்புக்களை நம்புவதை விடுத்து அயலிலுள்ளவர்களை நம்புமாறும் கேட்டுக் கொண்டார்.
ஒற்றுமையாக சகல இன, மத மக்களும் வாழ்ந்து நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதே சர்வதேச ரீதியில் நாட்டுக்கு எதிராக எழும் விமர்சனங்களுக்குப் பதிலாகும். உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபையோ அதன் ஆதரவு நாடுகளோ தலையிட முடியும் என ஐ. நா. சபையின் சாசனத்தில் எங்கும் குறிப்பிடவில்லை என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் 65வது சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் நேற்று திருகோணமலை பிரட்ரிக்கோட்டை முன்றலில் கோலாகலமாக நடைபெற்றன. கடும் மழையின் மத்தியிலும் நிகழ்வுகள் தடையின்றி சிறப்பாக நடந்தேறின.
அமைச்சர்கள், ஆளும்கட்சி, எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுத்தூதுவர்கள், வெளிநாட்டு உள்நாட்டு ராஜதந்திரிகள், முக்கியஸ்தர்கள், மதத்தலைவர்களுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி.
இலங்கையின் வெளிநாட்டுக்கொள்கை சிறப்பாகவுள்ளது. வெளிநாடுகளுடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. ஆசியா, ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் புதிய உறவுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படும் கொள்கைகளுக்கு பதில் வழங்க வேண்டுமானால் நாட்டின் அபிவிருத்தி சக வாழ்வை கட்டியெடுப்புவதன் மூலமே அதனைச் செய்ய முடியும்.
பிரசாரங்கள், ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் தகவல்களை நம்பவேண்டாம். 1948ல் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்ததோடு ஐக்கியநாடுகள் சபையில் சமமாக அமர்வதற்கு எமக்கு வாய்ப்புக்கிடைத்தது. அதில் அங்கம் வகிக்கும் நாடுகள் அதன் விஞ்ஞாபனத்திற்கேற்ப செயற்படுவதற்குக் கட்டுப்பட்டுள்ளன. அதே போன்று உள்நாட்டு விவகாரங்களில் தலையிடு வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கோ அல்லது அதன் உறுப்புரை நாடுகளுக்கோ உரிமைகள் உள்ளதாக எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நான் வெளிப்படுத்துகிறேன்.
எப்போதும் ஐ. நா. வின் விஞ்ஞாபனத்துக்கு மதிப்பளிக்கும் நாடு இலங்கை, பலமுள்ள நாடானாலும் பலமில்லாத நாடானாலும் சரி ஐ. நா. வில் அங்கம் வகிக்கும் சகல நாடுகளும் அதற்கு மதிப்பளிக்க வேண்டி யது அவசியம். எமது நிலைப்பாடும் அதுவே.
இன பேதம், மத பேதங்கள் நாட்டின் அழிவுக்கே வந்திடும். எவரேனும் இலங்கையில் மீண்டும் இனபேதம் மதபேதத்தை தூண்டுவார்களானால் அவர்கள் தமது மதத்திற்காகவன்றி பிரிவினை வாதத்திற்கே செயற்படுகின்றனர் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
இன்று கொழும்பில் மட்டுமன்றி வடக்கு கிழக்கு தெற்கு என நாட்டின் சகல பிரதேசங்களிலும் சகல இன, மத மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக வாழ்வதைக் குறிப்பிட முடியும். திருகோணமலை இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். அம்பாறையிலும் அவ்வாறே வாழ்கின்றனர்.
திருகோணமலையில் வெல்கம்வெஹர விஹாரையை அபிவிருத்தி செய்வதற்கு பெளத்தர்களைப் போன்றே இந்துக்களும் வரலாற்றில் தமது பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். கண்டி மீராமக்காம் பள்ளிவாசலுக்கு அஸ்கிரி விஹாரை தேரர்களே காணி வழங்கியுள்ளனர். மக்கள் ஒற்றுமையாக வாழும்போது இனம் மதம் என்ற பேதம் உருவாக மாட்டாது. இதனால் இனரீதியில் நாட்டைப் பிரிப்பது சாத்தியமான தொன்றல்ல. சகல இனங்களும் சம உரிமை சமகெளரவத்துடன் வாழவேண்டும் என்பதே எமது நோக்கம்.
தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி; நாட்டில் தென்பகுதியிலும் ஏனைய பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். திருகோணமலை இன ஒற்றுமைக்குச் சிறந்த உதாரணமாகும். தமிழ் இந்து மக்களும் சிங்களபெளத்த மக்களும் இணைந்து விஹாரைகளைக் கட்டிய வரலாறு உள்ளது. கண்டியில் முஸ்லிம் பள்ளிவாசலை அமைக்க பெளத்தர்கள் பங்களிப்புச்செய்துள்ளனர்.
மக்கள் ஒற்றுமையாக வாழும்போது இன, மத பேதங்களுக்கு அங்கு இடமிருக்காது.
இனபேதமும் மத பேதமும் நாட்டில் அழிவையே உருவாக்கும். எவறாவது பேதத்தைத் தூண்டினால் அது நாட்டில் பிரிவினையையே உண்டாக்கும். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது.
கலாசார ரீதியாக நாம் ஒற்றுமைப் பட்டுள்ளோம். சுதந்திரம் என்பது சுவர்க்க ராஜ்யமல்ல. அதனை பெற்றுக்கொள்ள நாம் பெரும் போராட்டங்களை எதிர்கொண்டுள்ளோம்.
முன்னர் வீதித்தடைகள் வழியாக நாம் மரண பயத்துடன் செல்கையில் பாதையில் இருக்கும் வழிகள் நமக்குத் தெரிவதில்லை. இப்போது தடைகள் நீக்கப்பட்டு சுதந்திரமாக வீதியில் செல்கையில் எமக்கு சொகுசு தேவைப்படுகிறது. அப்போது நாம் பார்க்காமல் நடந்தோம். இப்போது கொங்ரீட் போடப்பட்டுள்ளதா அல்லது காபர்ட்போடப்பட்டுள்ளதா எனப்பார்க்கிறோம்.
சுதந்திரம் என்பதும் அது போன்றதுதான் சுதந்திரம் கிடைக்க கிடைக்க முன்னேற்றமான வாழ்க்கையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். 1948ல் எமக்கு சுதந்திரம் கிடைத்தபோதும் 2008ல் இருந்து 2018 வரையான கால கட்டம் 1திlழி சுதந்திர முன்னேற்றயுகமாகும்.
அன்று சுதந்திரத்தின் போது டி.எஸ். சேனநாயக்க குறிப்பிட்ட விடயம் எனக்கு நினைவுக்கு வருகிறது. சுதந்திரம் என்பது துன்பங்களிலிருந்து மகிழ்ச்சிக்குப் பயணிப்பது என்று. துன்பங்கள் குறைந்து சுதந்திரம் கிடைப்பதே இதன் பொருள்.
சுதந்திரத்திற்காக இந்த நாட்டில் சகல அரசியல் கட்சிகளும் போராடியுள்ளன. இதனால் அரசாங்கத்துக்கு மட்டுமன்றி எதிர்க்கட்சிக்கும் நாம் மெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது.
சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும் நாம் வாழ்வைக் கட்டியெழுப்புவதிலும் எதிர்க்கட்சி ஒத்துழைப்பு நல்க வேண்டும். இது நாட்டிற்கு வழங்கும் பங்களிப்பாகும். இது தாய் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டியது என நான் கருதுகிறேன்.
பெளத்த மதம் உபதேசிப்பது போல் எமது நாட்டில் நாம் சுதந்திரமாகவாழும் உரிமை எமக்கு உள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
வரலாற்றுச்சிறப்பு மிக்க திருகோணமலை நகரில் நேற்று நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் வழமை போன்றே படை வீரர்களின் அணிவகுப்புக்கள் முவினத்தையும் பிரதிபலிக்கும் கலாசார பவனிகள் ஜனாதிபதியை கெளரவிக்கும் 21 பீரங்கி வேட்டுக்கள் என சிறப்பம்சங்கள் பலவும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.