மட்டக்களப்பு மாவட் டத்தின் பட்டிருப்புத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக சாணக்கியன் இராஜபுத்திரம் இராசமாணிக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சித் தலைவராகப் பதவி வகித்த எஸ். எம். இராசமாணிக்கத்தின் பேரனாவார். நேற்று முன்தினம் இவர் அலரி மாளிகையில் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
முன்னாள் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவராகவும் பதவி வகித்த எஸ். எம். இராசமாணிக்கம் ஏற்கனவே எழு வருடங்கள் சமஷ்டிக் கட்சியின் சுயேட்சை உறுப்பினராகவும் அதன்பின்னர் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக 13 வருடங்களும் பதவி வகுத்துள்ளார்.
இராசமாணிக்கத்தின் உறவினர்கள் பலர் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் செயற்பட்டுள்ளனர். 1987 ல் இந்திய அமைதிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட சக்கரவர்த்தி இராசமாணிக்கம் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் உறவினராவார்.
கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற சாணக்கியன் பின்னர் அவுஸ்திரேலியாவில் சதர்ன் குவின்டன் பல்கலைக்கழகத்தில் வணிகப் பிரிவில் பட்டம் பெற்றவராவார். இவர் தமது சமூக சேவையினால் பிரதேச மக்களின் அபிமானத்தைப் பெற்று புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பர்னாந்து நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவரும் தமக்குரிய நியமன கடிதத்தை ஜனாதிபதி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். ஸ்ரீல. சு. க. பொதுச் செயலாளர் அமை ச்சர் மைத்திரிபால சிரிசேனவும் இந் நிகழ்வில் கலந்துகொண்டார்.