2/18/2013

| |

வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை


வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.

தூக்கு தண்டனைக்கு எதிரான கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கருணை மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இடைக்கால தடையுத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதிகள் ஏ.ஆர்.தவே மற்றும் விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கன்னிவெடி தாக்குதலின் போது காவல்துறையினர் 22 பேர் உயிரிழந்த வழக்கின். குற்றவாளிகளான வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், மற்றும் பிலவேந்திரன் ஆகிய நால்வருக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இவர்களின் கருணை மனுவினை ஜனாதிபதி பிரணப் முகர்ஜி, கடந்த 11 ஆம் திகதி நிராகரித்தார்.

இதனையடுத்து கர்நாடகாவில் உள்ள பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் 4 பேருக்கும் எந்த நேரத்திலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நாளை மறுதினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நால்வரும் புதன்கிழமை வரை தூக்கிலிடப்படக்கூடாது என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.