நாட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடிந்த மகத்தான பரிசு சுதந்திரமே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பது அனைவரது கடமையும் பொறுப்புமாகும் என தெரிவித்த ஜனாதிபதி: சுதந்திரமாக வாழ்வதற்குக் கிடைத்த உரிமையே மக்களுக்கான மாபெரும் பரிசு எனவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் எத்தகைய விமர்சனங் களை மேற்கொண்டாலும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டிய சகலதை யும் பெற்றுக் கொடுப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி 30 வருடங்களின் பின் பெற்றுக்கொண்ட சுதந்திரம் பாதுகாக்கப் பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் 2,550 மில்லியன் ரூபா செலவில் நிர் மாணிக்கப்பட்டுள்ளபுதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க, ஆளுநர் ஜீ.ஏ. சந்தரசிறி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வடக்கில் சிறப்பான சுகாதார சேவையை வழங்கி வருகிறது. யாழ். மாவட்ட மக்கள் மட்டுமன்றி கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட ஏனைய மாவட்ட மக்களுக்கும் இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. நான் அறிந்த வகையில் 5 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
நாம் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளுக்குச் சென்றோம். அபிவிருத்தி மற்றும் குறைபாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடினோம். தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டோம். சில சக்திகள் நாம் மேற்கொள்ளும் சிறந்த செயற்திட்டங்கள் பற்றி பேசுவதில்லை.
குறைபாடுகளை மட்டுமே வெளிக்காட்ட முயல்கின்றனர். இதுதான் மனித சுபாவம். இங்கு மட்டுமன்றி கண்டி, நுவரெலியா போன்ற பகுதிகளிலும் இதைத்தான் கேட்க முடிகிறது. இதுவொன்றும் புதிதல்ல.
கடந்த 30 வருடங்களாக வடக்கில் நிலவிய யுத்த சூழலால் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகளுக்குத் தடை ஏற்பட்டது. அதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. மீண்டும் சகஜ நிலையை ஏற்படுத்தக் கிடைத்தமை முக்கியமானதாகும். அதற்காக நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
இது போன்ற நவீன வைத்தியசாலைக் கட்டடத்தை அமைக்க உதவிய ஜப்பானிய அரசாங்கத்துக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். தீவிர சிகிச்சைப் பிரிவு, பத்து சத்திர சிகிச்சைப் பிரிவுகள், இரசாயனகூடம், வார்ட்டுகள், மற்றும் புற்று நோயைக் கண்டறியும் பிரிவு என பல பிரிவுகள் இக்கட்டடத்தில் அமைந்துள்ளன.
நோயற்ற மக்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கெல்லாம் மேலாக மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய உரிமையைப் பெற்றுக்கொடுத்துள்ளமையே மாபெரும் பரிசாகும்.
எமது அரிய செல்லமே எமது பிள்ளைகள். பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக அஞ்சி நடுங்கி ஒழிந்து வாழ்ந்த காலகட்டமொன்று இருந்தது. அவர்களுக்கான கல்வி, பாதுகாப்போடு ஆரோக்கியமான பிள்ளைகளை உருவாக்குவதே எமது நோக்கம்.
இங்கு வருவோருக்கும் வரப்பிரசாதமாக இந்த மருத்துவமனை சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக முன்னேற்றப்பட்டுள்ளது. இத்தகைய வளங்களை நாம் பாதுகாப்பது மிக அவசியம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி விடுத்த உத்தரவிற்கமைய யாழ். பல்கலைகழக மாணவர்கள் இருவர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி இந்நிகழ்வின் போது வெளியிட்டார்.