2/20/2013

| |

இந்திய றோ வின் செல்லப்பிள்ளையான ஈஎன்டிஎல்எப் மீண்டும் கிளிநொச்சில் கால் பதித்துள்ளது.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி எனப்படுகின்ற பரந்தன் ராஜன் தலைமையிலான ஈஎன்டிஎல்எப் தனது முகவர் ஒருவரை கிளிநொச்சியில் களமிறக்கியுள்ளது. பிரித்தானியாவில் அவ்வியக்கத்தின் முக்கியஸ்தராவிருந்த தீபன் என்பவரே இவ்வாறு களமிறக்கப்பட்டுள்ளார். 

தீபன் தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியினுள் நுழைக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. சிறிலங்கா சுதந்திக்கட்சின் பெரும்புள்ளிகளுடன் கிளிநொச்சிப் பிரதேசத்தில் பிரசன்னமாகும் இவர்தானே சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கான கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொள்கின்றாராம். 

ஆனால் வன்னி மக்கள் புலிகளின் கோரப்பிடியிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கான கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக சர்வதேச பாடசாலை ஒன்றின் அதிபராகவிருந்து அரசியலில் நுழைந்துள்ள கீதாஞ்சலி கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


றோ வின் முகவரான இவரின் வருகை அரசியல் வட்டாரங்களில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இலங்கையின் அரசியல் மற்றும் சமூக அமைதியை குலைப்பதற்கு பல்வேறு உத்திகளை மேற்கொண்டுவரும் றோ வின் நிகழ்சி நிரலை தீபன் எவ்வாறு நிறைவேற்றப்போகின்றார் என்பது கூர்ந்து அவதானிக்கப்படவேண்டியதாகும். 

புலிகளியக்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதற்கு தமிழ் மாற்று இயக்கங்கள் மேற்கொண்ட சமூகவிரோத செயல்கள் காரணகர்த்தாவாக இருந்தது என்பது மறைக்க முடியாத உண்மை. மேலும் ஈஎன்டிஎல்எப் புலிகளுடன் ஒப்பந்த அடிப்படையிலேயே சமூகவிரோத செயற்பாடுகளில் இறங்கியிருந்தனர் என்பது பின்னாட்களில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை. 

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது மாற்று இயக்கங்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மனிதநேயமற்ற செயல்கள் மக்கள் புலிகளை ஆதரிக்க நிர்பந்தித்தது. அவ்வாறான செயற்பாடுகளுக்கு அப்போது ஈஎன்டிஎல்எப் அமைப்பு இழிபுகழ் பெற்றிருந்தது. அவ்வியக்கத்தின் மனிதவிரோத செயல்களை முன்னணியில் நின்று நிறைவேற்றியவர்களில் தீபனும் ஒருவர். இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறியபோது இந்திய இராணுவத்தினருடன் இந்தியா சென்ற இவர் பின்னர் பிரித்தானியா சென்று றோ வின் நிகழ்சி நிரலின்கீழ் பிரித்தானியாவில் செயற்பட்டுக்கொண்டிருந்தார் என்பதை கடந்த காலங்களில் பல்வேறு ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தது. 

 தமிழ் மக்கள் ஆயுதக்குழுக்களையும் வன்செயலாளர்களையும் வெறுக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறனவர்களின் பிரசன்னம் மக்களின் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்வதுடன் , தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் லாபங்களுக்கான போலிப்பிரச்சாரங்களுக்கும் வழிவிட்டுக்கொடுக்கின்றது.
எது எவ்வாறாயினும் தனிநபர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்படமுடியாதவை. ஆனால் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈபட்ட நபர்கள் , அதற்கான எவ்வித தண்டனைகளையும் அனுபவிக்காது பிரித்தானிய பிரஜா உரிமை மற்றும் பணப்பலத்தினை கொண்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற இடமளிக்கப்படுகின்றமை மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 
நன்றி -இலங்கைநெற் செய்திகள்