இலங்கையில் கடந்த வாரம் கொலைத் தாக்குதல் ஒன்றில் இருந்து உயிர் தப்பிய செய்தியாளர் ஒருவர், தாக்குதல் நடந்தது முதல் தனக்கு இலங்கையின் ஜனாதிபதி உதவியதாகக் கூறி, அவருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தினால் ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட அந்த அறிக்கை, ஜனாதிபதியின் இணையத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், ஃபராஸ் சௌகத் அலி என்னும் அந்தச் செய்தியாளர் தனது செய்திப் பணிகளை நியாயப்படுத்தியும் எழுதியுள்ளார்.
ஃபாரஸ் சௌகத் அலியின் வீட்டுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்த மூன்று பேர் அவரது கழுத்தில் சுட்டார்கள்.
தன்னுடைய காயங்கள் மிகவும் கடுமையானவை என்றும் அதனால் தான் இன்னமும் பொலிஸாருக்கு முழுமையான வாக்குமூலத்தை வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், தனக்கு மருத்துவமனையின் தனிப்பட்ட வகையில் பாதுகாப்பு வழங்கியதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவர் தனது கடுமையான கருத்துக்களை வெளியிடும் செய்திப்பணிகளுக்காகவே இலக்கு வைக்கப்பட்டதாக ஊடக உரிமை அமைப்புக்கள் கூறியுள்ளன. அண்மையில் இவர் ஊழல்கள் குறித்து எழுதிய சில கட்டுரைகளில் சில அதிகாரிகளையும் சம்பந்தப்படுத்தியிருந்தார்.
பணிகள் நியாயமானவை
ஆனால், இந்த அறிக்கையில் தான் இலக்கு வைக்கப்பட்டதற்கான நோக்கம் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.
தனது பணிகள் நியாயமானவையாக, சமமானவையாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து விசாரித்ததற்கு உத்தரவிட்டதற்காக அவர் ஜனாதிபதிக்கு நன்றி கூறியுள்ளார்.
இப்படியாக முன்னர் தொடர்ச்சியாக செய்தியாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட வேளைகளிலும் இலங்கை அரசாங்கத்தினால் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவை குறித்து எவரும் இதுவரை பிடிபடவில்லை.
இந்தத் தாக்குதல் அவரது செய்திப்பணியின் பாணியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அவர் பணியாற்றும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் கூறியுள்ளார்.
இந்த பத்திரிகையின் ஆசிரியர் ஒருவர் 4 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டது உட்பட இந்தப் பத்திரிகை எதிர்கொண்ட தாக்குதல்கள் கொடுமையானவையாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்தப் பத்திரிகையை கடந்த வருடம் மேல்மட்டத்தில் நல்ல தொடர்புகளைக் கொண்ட வணிகர் ஒருவரினால் வாங்கப்பட்டது.
அது தனது அரச எதிர்ப்புத்தொனியை குறைத்துக்கொண்டாலும், இன்னமும் சில புலனாய்வு செய்திக் கட்டுரைகளை அது பிரசுரித்துத்தான் வருகிறது. ஃபாரஸ் சௌகத் அலி இலங்கை மற்றும் பிரிட்டிஷ் ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கிறார்.