2/28/2013

| |

'தேவையற்ற தீர்மானம்' - ஜெனிவாவில் இலங்கை அமைச்சர்

மஹிந்த சமரசிங்க ( ஆவணப்படம்)ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும் அது ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க கூறியுள்ளார்.
புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் தரப்புவாதங்களை முன்வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மனித உரிமைகள் நிலமைகள் தொடர்பில் இலங்கை ஏற்கனவே உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்ட நிலையில் இந்தத் தீர்மானம் தமது அபிப்பிராயப்படி தேவையற்ற ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் போருக்கு பின்னர் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை மிகவும் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பின் எஞ்சியுள்ள தரப்பினர், சில மேற்கு நாடுகளில் இலங்கைக்கு எதிராக பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களது தவறான தகவல்களுக்கு சர்வதேச சமூகத்தில் சில பிரிவுகள் எடுபட்டுவிட்டதாகவும் கூறியுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், அதனால், இலங்கை பக்கசார்பான, சமநிலையற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு
இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறு என்றும், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை இறுதிப் போர் நிகழ்வுகள் குறித்தும், சானல்4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தின் உண்மைத்தன்மை பற்றியும், ஏனைய பல விடயங்கள் குறித்தும் இலங்கை இராணுவ தளபதியால் நியமிக்கப்பட்ட ஒரு விசாரணை மன்றம் ஆராய்ந்து தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறது என்றும் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அந்த விசாரணை மன்றம் தற்போது தனது இரண்டாவது கட்ட நடவடிக்கையாக, சானல் 4 ஆவணப்படம் குறித்த புலனாய்வுகளை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
திருகோணமலை மாணவர்கள் படுகொலை மற்றும் ஏசிஎஃப் கொலைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும், அதற்கு சிரேஷ்ட அரச சடத்தரணிகளின் குழு ஒன்று உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால சிபாரிசுகள் குறித்த விடயத்தில், அவற்றில் சில ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காணிகள் குறித்த பிரச்சினைகளின் தீர்வுக்காக காணி ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் குறைக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் நடமாட்டத் தடை எதுவும் கிடையாது என்றும், வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு, வழமை நிலைமைக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், 75 வீதமான கண்ணிவெடிகளை இலங்கை இராணுவம் அகற்றிவிடதாகவும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் விடுதலைப்புலிகளை இலக்கு வைப்பதற்கான ஒரு ஏற்பாடு அல்ல என்றும் அது முன்னாள் போராளிகளுக்கான நல ஏற்பாடு என்றும் அவர் அங்கு தனது நீண்ட உரையில் கூறியுள்ளார்.