மாகாணத்தில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது விசேட தேவை கருதி மாகாணசபையில் விசேட அமர்வை கூட்டுவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் அளித்துள்ளது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கே சபை ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாததந்த அமர்வின் போது தனிநபர் பிரேரணை சம்பந்தமான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.
மாகாணத்தில் அனர்த்தங்கள் ஏற்படும்போது விசேட தேவை எனக்கருதி மாகாணசபையின் தலைவியின் அனுமதியோடு விசேட சபை அமர்வை கூட்டுதல் வேண்டும் என்ற பிரேரணையை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை சமர்ப்பித்தார்.
அந்த பிரேரணையே சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. மாகாண சபை ஆரம்பித்து நான்கு வருடங்கள் சென்ற போதிலும் முதன் முறையாக இப்படி ஒரு பிரேரணையை அமைச்சர் உதுமாலெப்பை கொண்டுவந்தது மிகவும் வரவேற்கத்தக்கது என பிரேரணைக்கு ஆதரவளித்து பேசிய தமிழ் கூட்டமைப்பின் உறுப்பினர் இரா.துரைரட்ணம் குறிப்பிட்டார்.