2/02/2013

| |

மத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்: ஸர்மிளா ஸெய்யித்

Sarmila

விஸ்வரூபம் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரும் இஸ்லாமியர்களின் கோரிக்கையின் காரணத்தை முழுமையாக விளங்காத சிங்கள நண்பர் ஒருவர் தற்செயலாக அதுபற்றிக் கேட்டார். ‘இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதால்’ என்றேன். ‘சொல்றேன் என்று தப்பா நினைக்காதே.. இவர்கள் இப்போது நடந்து கொள்வது மட்டும் ஜனநாயகமா?’ என்றார் நண்பர்.
இந்தக் கேள்வி யாரோ ஒரு சிங்களவரினுடையது மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழுகின்ற இஸ்லாமியர் அல்லாத அனைவரினுடையதும்தான்.
சில இஸ்லாமியர்களினுடையதாயும் இருக்கலாம். விஸ்வரூபம் திரைப்படத்தின் உப்பு, காரம் தெரியாமலே இலங்கையில் தடை செய்தாயிற்று. தமிழகத்தில் அனைத்திந்திய ஜமாஅத் தடை செய்யக் கோரியதன் எதிரொலியாக இலங்கையிலும் அது செய்யப்பட்டது. தடையுத்தரவை நீக்குவதா வேண்டாமா என ஆலோசிப்பதற்காக உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களுக்கு அத்திரைப்படம் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் காண்பிக்கப்பட்டிருந்தது. உலமாக்கள் புத்திஜீவிகளால் அந்தத் திரைப்படம் பார்க்க முடியுமாக இருந்தால் சாதாரண மக்களுக்குத் தடை செய்வதிலுள்ள நியாயமென்பது பிரத்தியேகமானது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மிக உறுதியாக இருக்கின்ற உலமாக்கள் திரைப்படம் பார்க்க முடியுமா என்பது மற்றொரு கேள்வி; விமர்சனத்திற்குரியது.
நாம் எத்தனையோ சினிமாக்களைப் பாத்திருக்கிறோம். மிகக் குரூரமானதும் நெஞ்சை நெருக்குவதுமான சமூகக் கொடுமைகளையும் பார்த்து ரசித்துவிட்டு எதுவுமே நடவாதது போல திரையரங்கிலிருந்து வெளியேறி விடுகின்றோம். ஏனைய சமயங்களைக் கேள்விக்குட்படுத்துகின்ற குறிப்பாக இந்து சமய வரலாற்றுப் பாரம்பரியக் கதைகளையும் பாத்திரங்களையும் விமர்சிக்கின்ற, பாரம்பரியங்களை உடைத்தெறிகின்ற சினிமாக்களும் வந்துதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் மிக ஆரோக்கியமான விமர்சனங்கள், கருத்தியல்களால் சமூகவியலாளர்களும் சமயத்தவர்களும் அவற்றை எதிர்கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆரோக்கியமான விவாதங்களுக்கும், கருத்தியல் வெளிக்கு முன்வரவும் தயாரில்லாதவர்கள். சினிமாவில் சித்தரிப்பதால் ஒன்றும் கிழிந்துவிடப் போவதில்லை என்று தம் வேலையைப் பார்க்கத் திராணியற்றவர்கள். ஒரு சினிமா வந்துதான் சமுதாய மாற்றம் வந்துவிடப் போகின்றது என்றால், சினிமா பார்த்துத்தான் சமூகம் சீரழிந்துவிடப் போகிறதென்றால் இதுவரை வெளிவந்த இலட்சக்கணக்கான சினிமாக்களால் உலகம் மகத்தான அளவில் சீரடைந்திருக்கவேண்டும். அல்லது சீரமைக்கவே ஒண்ணாதளவில் சின்னாபின்னமாகியிருக்க வேண்டும். பத்தில் ஒன்றாகச் சும்மா வரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிக‌ள் உலகத் தரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றனர். அர்த்தமற்ற எதிர்ப்பே, அப்படி என்னதான் அதில் இருக்கின்றதென்று பார்ப்பதற்கு தூண்டச் செய்துள்ளது. தடையிட்டால் என்ன எங்காவது இணையத்தில் டௌவ்ண்லோட் செய்யலாமா, எவ்வளவு கொடுத்தாவது பிளக்கில் வாங்கலாமா என்று எல்லாரையும் பைத்தியம் பிடிக்கச் செய்திருக்கின்றனர் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.
மேலைத்தேய நாடுகள் தங்களைத் தீவிரவாதிகளாகக் காண்பிக்கச் சதிகள் செய்வதாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சுயப் பிரச்சாரம் செய்து வருகின்ற சூழலில் சமீபத்தில் ரிஸானா றபீக் என்ற சிறுமிக்கு சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை உலகத்தின் மனசாட்சிக்குப் பேரிடியாக அமைந்திருந்தது.
1999 ஆம் ஆண்டு துருக்கிய அரசு குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவரான அப்துல்லா ஒச்சலானுக்கு மரணதண்டனை விதித்தது. மரண தண்டனை, மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் நீண்ட காலமாக உலகெங்கிலும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலானுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னரே அது குறித்த விவாதங்கள் உலகெங்கிலும் முனைப்புப் பெற்றன. ஐரோப்பிய யூனியனின் நெருக்குதல் காரணமாக 2001ஆம் ஆண்டு துருக்கிய அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக மரண தண்டனையை முற்றிலும் கைவிட்டது. சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், குவைத், பர்மா போன்ற இஸ்லாமிய நாடுகளில் மரண தண்டனை மாற்ற முடியாத சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மிகப் பலமான மதஅடிப்படையே இச்சட்டங்கள் நடைமுறையில் இருப்பதற்கான காரணங்களாகின்றன.
மரண தண்டனைக்கு எதிரான இயக்கமும் மனித உரிமைகள் சார்ந்த அக்கறைகளும், குரல்களும் முக்கியத்துவம் பெற்றுள்ள சமகாலத்தில் ரிஸானா றபீக் சிறுமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பல தளங்களில் விவாதிக்கப்பட வேண்டியதும், மனித உரிமைகளுக்கான அறைகூவல்களுக்கு பலமான பின்னடைவு என்பதும் ஏற்க வேண்டியவையே.
ரிஸானா றபீக்கிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த கவலைகளை, அந்தச் செய்தி அளித்த ஏமாற்றங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலை சமீப காலங்களில் காணக்கூடியதாக இருந்தது. இஸ்லாமிய ஷரீஆ சரியா என்ற விவாதங்கள் எழுந்தன. இது மிக இயல்பானது, ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்புக்கு விவாதங்கள் கருத்தியல்கள் மிக இன்றியமையாததாகின்றது. இதன்போதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பொங்கி எழுந்தனர். றிஸானா றபீக்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியோ, பிழையோ யாரும் அது பற்றி மூச்சுவிடக்கூடாது, அது இஸ்லாமிய ஷரீஆ, அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது வாதமாக இருந்தது. மேனியில் வடுக்கள் தெரியக்கூடிய ஈச்சம் பாயில்தான் முஹம்மது படுத்துறங்கினார்; ஒட்டகத்தில் பயணித்தார். ஷரீஆவை அப்படியே பிசகாமல் பின்பற்றுவதாக கூப்பாடு போடுகின்றவர்கள் ஈச்சம் பாயில் படுத்து ஒட்டகத்தில் பயணிக்கலாமே!
இஸ்லாத்திற்கு எதிரான கருத்தொன்று எழும்போது அதனை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாக, எதிர்கொள்வதற்கான பக்குவமற்றவர்களாகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களை நிரூபித்து வருகின்றனர். இலங்கையில் மட்டுமல்ல, ஆசிய நாடுகளில் வாழும் முஸ்லிம் இயக்கத்தவர்கள் எதிர்த்தலில் ஒரே பொதுக்குறியைக் கொண்டவர்கள்தான். தமிழகத்தில் நக்கீரன் இதழில் றிஸானாவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை மிகக் கொடுமையானது என்று எழுதியதற்காக மனுஷ்யபுத்திரனுக்கு மிருகபுத்திரன் பட்டமளித்து அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தமிழக அரசியலில் முன்னிலையில் இருக்கும் கருணாநிதி, றிஸானாவின் மரணதண்டனையைக் கண்டித்தார் என்பதற்காக அவருக்கும் ஏச்சுப்பேச்சு. எதிர்கருத்தாளரை எப்படி எதிர்கொள்வதென்பதும், தனிமனிதனுக்கு இருக்கத்தக்க கருத்துச் சுதந்திரத்தையும், சமூகத்தில் தனிமனிதர்களுடைய வகிபாகத்தையும் இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மறுக்கின்றதையுமே இவை காட்டுகின்றன. ஈழத்திலும் இது தொடர்பான பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றன.
மிகத்தொன்மையான வரலாற்றைக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏதோ நேற்றுத் தோன்றிய மதம் என்பது போலும், தப்பபிப்பிராயங்கள் ஏற்படுத்தச் சதிகள் நடக்கின்றன என்பதாகவும் வரிந்து கொண்டு செயற்படுவது கேலிக்கூத்தாகி ஏனைய சமூகத்தவர்கள் முகம்சுளிக்கின்ற குரோதத்தை ஏற்படுத்துகின்ற நிலைக்கு வந்துள்ளது.
முரண்பாடுகளை இல்லாதொழிப்பதே ஜனநாயகத்தின் இலட்சியம். இஸ்லாம் என்பதே சமாதான வழி மார்க்கம். இஸ்லாத்தின் முன்மாதிரி முஹம்மது மன்னிப்பை நல்லிணக்கத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தியவர். இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நல்லிணக்கம் என்றால் எப்படி இருக்கும் என்று கேட்கின்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். ஏனைய சமூகங்களைப் பற்றிய எந்த அக்கறையும் அவர்களுக்கிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு மூடிய சமூகமாக, தொட்டாற்சிணுங்கி சமூகமாக, தொட்டதெற்கெல்லாம் கண்டனம், ஆர்பாட்டம், போஸ்டர் என கிளர்ந்தெழுகின்ற சமூகமாக நலிந்த சமூகமாக இஸ்லாமிய சமூகத்தை அடிப்படைவாதிகள் மாற்றி வருகின்றனர்.
பலநூறு பேரை கொத்து, கொத்தாக் கொன்று, கிராமங்கள் பலவற்றை அழித்து அட்டூழியம் புரிந்த ‘சுமாமா’ என்ற அராஜகனை முஹம்மது மன்னித்ததாக இஸ்லாமிய வரலாறு சொல்கிறது. சுமாமாவைத் துன்புறுத்தவோ குறைந்தபட்சம் திட்டவோ செய்யவில்லை என ஸஹீஹ_ல் புகாரி என்ற ஹதீஸ் கிரந்தம் கூறுகிறது. தன் இளைய தந்தையின் ஈரலைச் சப்பித் துப்பிய ஹிந்தாவையே மக்கா வெற்றியின்போது முஹம்மது மன்னித்தார் என்று இன்னொரு ஹதீஸ் கூறுகிறது. அக்கிரமங்களில் ஈடுபட்டவர்களை முஹம்மது மன்னித்தாரென்றால் றிஸானா றபீக் போன்ற அறியாச் சிறுமிகளை மன்னிக்க முடியாதா என்ன?
ரிஸானா 2005ஆம் ஆண்டு சவூதி அரேயியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற சிறுமி. நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்தாள் என்று 2007ஆம் ஆண்டு சவூதி அரேபிய அரசாங்கம் தீர்ப்பு வழங்கியது. 2013 ஜனவரி 09ஆந் திகதி சிறுமி றிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரேபியாவினுடையது மதஅடிப்படைச் சட்டம் எனில் முஹம்மதின் முன்மாதிரியை கைவிட்டதை யாரும் விமர்சிக்கக்கூடாது என்கிறார்களா அடிப்படைவாதிகள்?
மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் றிஸானா றபீக் 5 ஆண்டுகள் சிறையில் இருந்தாள். அவளை விடுவிப்பதற்கு இஸ்லாமிய சமூகம் முயற்சி எடுத்ததா? மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்றுள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி இஸ்லாமிய சமூகம் ஆராய்ந்ததா? பொருளாதாரத்தை ஈட்ட பெண்கள் நாடு கடந்து செல்கின்றளவு இருக்கின்ற சமூகத்தேவை குறித்தும், அது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எப்போதாவது அக்கறைப்பட்டுள்ளார்களா? பணிப்பெண்கள் என்ற பெயரில் அரபு நாடுகளில் பாலியல் அடிமைகளாகச் சிக்கிக் கிடக்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களை மீட்கவும், மறுவாழ்வளிக்கவும் அடிப்படைவாதிகளிடமுள்ள தீர்வுதான் என்ன? இஸ்லாமிய சமூகத்துக்குள்ளே புரையோடிக் கிடக்கின்ற சமூகக் கொடுமைகளுக்காக அக்கறைப்படாத அடிப்படைவாதிகள் யாராவது கருத்துக் கூறும்போது, எழுதும்போது, சினிமாவில் சித்தரிக்கும்போது மட்டும் இது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கச்சைகட்டிக் கொண்டு வந்துவிடுவது ஏன்?
இத்தகைய முரண்பாடான சூழ்நிலையினிடையே முஸ்லிம்கள் தீவிரவாதிகளைப் போன்று செயற்படுகின்றார்கள் என்று மேலைத்தேய நாடுகள் என்ன உள்நாட்டுக்குள்ளேயே குரல்கள் எழுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லையே.
பல்லின சமூகத்திற்குள் வாழுகிறோம் என்பதையே பல தருணங்களில் மறந்துவிடுவதும், இன்றைய செயற்பாடுகள் எதிர்கால சந்ததிகளை எவ்வளவு தூரம் பாதிக்கக்கூடும் என்பது குறித்ததுமான விரிவான நோக்குகளும் சிந்தனைகளும் இல்லாமலேயே இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிக‌ள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் மேலும், மேலும் பாதிக்கப்படுவது இஸ்லாமிய சமூகம் என்பதே கவலைக்குரிய விடயமாகும்.
-கீற்று-