2/15/2013

| |

காதலர் தினத்தைக் கொண்டாடும் ஜேவிபி

மார்க்ஸிஸ்ட் கட்சியாக தம்மைக் கூறிக்கொள்ளும் ஜேவிபி கொழும்பில் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளது.
ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியில் இளைஞர்களின் உரிமைக்காகப் போராடி, உயிர் துறந்த ஒரு பாதிரியாருக்காகவே இந்த காதலர் தினம் கொண்டாடப்படுவதாகக் கூறும் ஜேவிபி, ஆகவே அதனை முதலாளித்துவத்தின் ஒரு அம்சமாகப் பார்க்க முடியாது என்று கூறுகிறது.
இலங்கையில் தொழில் மற்றும் கல்வி வசதி இன்றி, தமது உரிமைகள் மறுக்கப்பட்ட இளைஞர்களுக்காக தாம் இந்த தினத்தை கொழும்பில் கொண்டாடுவதாக அந்தக் கட்சி கூறுகின்றது.தொழிலாளர் தினத்தை இன்று பல முதலாளிமாரும் கொண்டாடும் நிலையைப் போன்று, காதலர் தினமும் முதலாளித்துவத்தின் ஒரு கூறு என்று பார்க்கும் கருத்தும் தவறானது என்று கூறுகின்ற ஜேவிபியின் இளைஞர் அணியின் தேசியக்குழு உறுப்பினரான மருங்கன் மோகன் அவர்கள், இப்படியான தவறான கருதுகோள்களை மாற்றுவதும் தமது இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு நோக்கமாகும் என்றும் கூறுகிறார்.
திருமணம் மற்றும் காதல் என்பவை இன்று பணத்தின், சொத்தின் அடிப்படையில்தான் விளங்கப்படுவதாகக் கூறும் மோகன் அவர்கள், ஆகவே எதிர்காலத்தில் சாதி, இன வேற்றுமை இல்லாத, சொத்துக்களின் அடிப்படையில் அல்லாத, ஒரு உண்மையான காதலுக்காகத்தான் தாம் போராடுவதாகவும் கூறுகிறார்.