2/14/2013

| |

தீவுக்காலையில் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தீவுக்காலை கிராமத்தில் இருந்து பல கஷ்டங்களின் மத்தியிலும் கல்விமேம்பாட்டில் ஆர்வம் செலுத்தி பல்கலைக்கழகத்திற்கு சென்றவர்களுக்கும் , தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்தவர்களுக்குமாக சாதனையாளர் பாராட்டு விழா ஒன்றினை தீவுக்காலை இளம்பிறை சனசமூக நிலையத்தின் தலைவர் அவர்களின் தலைமையில்  ஏற்பாடு செய்யப்பட்டு 2013.02.12 திகதி  மிகவும் சிறப்புற நடைபெற்றது.
 
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு . வே.ஜெகதீசன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக பிரதேச செயலகத்தின் கணக்காளர் திரு.கணகரெட்னம் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி திரு குணாளன் , மகாசக்தி நிறுவனத்தின் தலைவர் , பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
 
சாதனை படைத்த சாதனையாளர்களை கௌரவித்ததுமட்டுமல்லாமல்  அவர்களை கற்பித்த ஆசான்களுக்கும், சாதனையாளர்களை மிகவும் திறம்பட வழிநடாத்திய பெற்றோர்களையும் இத் தருணத்தில் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் பதக்கங்களும் நினைவு சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது. விஷேடமாக  தீவுக்காலை கிராமத்தில் இருந்து முதல் முதலில் பல்கலைக்கழகம் சென்று கிராமத்திற்கு பெருமை  சேர்த்துத்தந்த முதல் மாணவியான திருமதி கணகம்மா அவர்களும் கௌரவிக்கப்பட்டார் .
இங்கு மாணவர்களை பாராட்டி உரையாற்றிய பிரதேச செயலாளர் இங்கு அதிதிகளாக வருகை தந்துள்ள நாங்கள் அனைவருமே மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து குப்பி விளக்குகளின் வெளிச்சத்துடனே எமது கல்வி நிலையில் உயர்வடைந்தோம் ஆனால் இப்போது அரசின் அதிஉயர் சிந்தனையின் பிரகாரம் நாட்டின் அனைத்து மக்களிற்கும் மின்சார வசதிகளையும் ஏற்படுத்தயுள்ளது  என கூறி எமது நாட்டின் வறுமை நிலையினை போக்க வேண்டுமானால் சிறார்களாகிய உங்கள் கல்வி நிலையின் உயர்வில்தான் அது தங்கி இருக்கின்றது என்று கூறினார்.