2/13/2013

| |

வடகொரியா அணு குண்டு சோதனை

பாதுகாப்புச் சபை உடன் கூடியது
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா நிலத்துக்கு அடியில் நேற்று வெற்றிகரமாக மூன்றாவது அணு குண்டு சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரியாவின் நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு ஐ.நா. பாதுகாப்புச் சபை உடன் கூடியது.
வட கொரியாவின் அணு ஆய்வு தளத்தில் நேற்றுக்காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டது அவதானிக்கப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் அணு குண்டு சோதனை மேற்கொண்டதை வடகொரியா உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து வட கொரியாவின் செயலுக்கு சர்வதேச சமூகம் உடனடியான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைப்பு விடுத்ததோடு வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும் கண்டனத்தை வெளியிட் டுள்ளது.
எனினும் செய்மதியை நிறுவும் தமது அமைதியான திட்டத்திற்கும் தமது இறையாண்மை உரிமையையும் மறுக்கும் அமெரிக்காவின் ‘மூர்க்கத்தனமான’ எதிர்ப்பை இலக்குவைத்தே இந்த அணு குண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வட கொரிய அரச ஊடகம் அறிவித்துள்ளது. எனினும் இந்த சோதனை மிகப் பாதுகாப்பாகவும், மிகச் சரியான முறையிலும் நடத்தப்பட்டது. இந்த சோதனையால் இயற்கைச் சூழலில் எந்தவித மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை என்று வடகொரிய அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இந்த அணு குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்வை உலகெங்கும் உள்ள நில அதிர்வு மையங்கள் பதிவு செய்தன. இது ரிச்டர் அளவு கோளில் 4.9 புள்ளிகள் என்ற அளவில் இந்த நில அதிர்வு இருந்தது.
இதனால் வட கொரியாவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக முதலில் கருதப்பட்டது. ஆனால் பின்னரே இது அணு குண்டு சோதனை என்பது தெரிய வந்தது. நிலத்துக்கு அடியில் ஒரு கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த அணு குண்டு வெடிப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது. “உயர் மட்ட அணு ஆயுத சோதனை வெற்றியளித் துள்ளது.
கடந்த முறைகளை விடவும் வெடிக்கும் திறன் கொண்டதாக இந்த சோதனை அமைந்திருந்தது. இதன் போது சிறிய மற்றும் லேசான அணு குண்டு வெடிக்கச் செய்து சோதனை செய்யப்பட்டது” என்று வடகொரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் பாரிய வெடிப்புடன் கூடிய சிறிய ரக அணு குண்டு என வடகொரியா அறிவித்துள்ளது அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வடகொரியா நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையில் பொருத்துவதற்கு அளவான அணு குண்டை தயாரிக்க முற்படுவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடகொரியா கடந்த 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளிலும் அணு ஆயுத சோதனை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.