இலங்கையின் 65வது தேசிய சுதந்திர தினம் இன்று திருகோணமலை நகரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் பல் வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளன. “சுபீட்சமான தாய் நாடு- ஒளிமயமான நாளைய தினம்” என்ற தொனிப் பொருளில் சுதந்திர தின பிரதான வைபவம் இம்முறை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு முன்பாக உள்ள கடற்கரையோரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.
சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாகக் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் மிகப் பிரமாண்ட மான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நகர் முழுவதும் தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது.
சுதந்திர தின பிரதான வைபவத்தை முன்னிட்டு திருகோணமலை உட்பட அதனை அண்மித்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நான்காயிரத்திற்கும் அதிகமான பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் டி. எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்,
கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பலர் இதில் கலந்துகொள்கின்றனர். இதுதவிர வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சின் செயலாளர்கள், அரச உயர் அதிகாரிகள் என்ற அடிப்படையில் 2500 பேரும், மதத் தலைவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் என்ற அடிப்படையில் ஐயாயிரம் பிரமுகர்களும் இதில் கலந்துகொள்கின்றனர். பாதுகாப்புப் படைகளின் சார்பில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம், பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன், சிவில் பாதுகாப்பு படைப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் உட்பட 200க்கு மேற்பட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
முப்படைகளின் தளபதிகளின் வருகையைத் தொடர்ந்து 8.33க்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் வருகையும் அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநரின் வருகையும் இடம்பெறும்.8.40க்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் வருகைத் தொடர்ந்து 8.41க்கு பிரதமர் டி.எம். ஜயரட்ணவின் வருகை இடம்பெறும்.
இதனைத் தொடர்ந்து குதிரை படையணி சூழ 8.45 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வருகை இடம்பெறும்.
முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபரினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதான மேடைக்கு அழைத்து வரப்பட்டதை அடுத்த 8.50 மணிக்கு மங்கள வாத்தியங்களுக்கு மத்தியில் தேசியக் கொடியை ஏற்றி இன்றைய சுதந்திர தின பிரதான வைபவத்தை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைப்பார். இதன் போது திருகோணமலை மாவட்டத்திலுள்ள எட்டு பாடசாலைகளிலிருந்தும் சகல மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவிகள் 100 பேர் தேசிய கீதத்தை இசைப்பர். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியை வாழ்த்தி ஜயமங்கள கீதம் பாடப்படும்.
தேசத்தின் சுத்தந்திரத்திற்காக போராடிய முன்னோர்கள் மற்றும் படை வீரர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து 9.11க்கு ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் 21 மரியாதை பீரங்கி வேட்டுகளும் தீர்க்கப்படும்.
இதனைத் தொடர்ந்து திருமலை பிரட்ரிக் கோட்டைக்கு முன்பாகவுள்ள கடற்கரையோரத்திலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு இலங்கையின் 65வது தேசிய சுதந்திர தின உரையை நிகழ்த்துவார். ஜனாதிபதியின் 30 நிமிட நேர உரையைத் தொடர்ந்து மரியாதை அணிவகுப்பு ஆரம்பமாகும்.
சம்பிரதாய முறைப்படி இம்முறையும் இராணுவம் , கடற்படை, விமானப்படை, பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர், இளைஞர் படையணி மற்றும் தேசிய மாணவர் படையணியின் மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெறவுள்ளன. இம்முறை நடைபெறவுள்ள மரியாதை அணிவகுப்பில் முப்படைகள், பொலிஸ் இளைஞர், கெடற் படையணிகளைச் சேர்ந்த 4400 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
2075 இராணுவ வீரர்கள், 450 கடற்படை வீரர்கள், 5000 விமானப்படை வீரர்கள், 450 பொலிஸார், 350 சிவில் பாதுகாபப்பு படை வீரர்கள், 300 இளைஞர் படையணியினர் மற்றும் 325 தேசிய மாணவர் படையினர் இதில் அடங்குவர்.
இராணுவம்
திருகோணமலையிலுள்ள இராணுவத்தின் 22 வது கட்டளைத்தளபதி பரிகேடியர் அருண வண்ணிஆராச்சி தலைமையில் இராணுவ மரியாதை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. 1500 வீரர்கள் இதில் கலந்து மூன்று உயர் அதிகாரிகளும், 47 அதிகாரிகளும் சகல படைப்பிரிவுகளையும்பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொள்ளவுள்ளனர்.கடற்படை
கொமடோர் ரசிக திஸாநாயக்க, கொமடோர் சாமேன் ஆகியோரின் தலைமையில் கடற்படை அணிவகுப்பில் 450 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
விமானப்படை
எயார் கொமடோர் ரவி ஜயசிங்க தலைமையில் 500 விமானப்படை வீரர்கள் விமானப்படைக்கு கிடைக்கப்பெற்ற ஜனாதிபதி வர்ண கொடிகளுடன் கலந்து கொள்கின்றனர்.
பொலிஸ்
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமல் தலைமையில் 400 பொலிஸார் அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளதுடன் பொலிஸாரின் பழைய பாரம்பரிய உடையணிந்த இரண்டு பேண்ட் வாத்தியக்குழுக்களும் பங்கு கொள்ளும்.
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் நான்காவது சுதந்திர தினம் இதுவாகும்.
இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி நேற்றுக் காலை திருமலை சமுத்திரவியல் அருங்காட்சியகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
அதனையடுத்த திருகோணமலை மாவட்டத்தின் பெருமளவிலான பிரதேசங்களுக்கு நீர் வழங்கும் பாரிய நீர் வழங்கல் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக முக்கிய பிரமுகர்கள் நேற்றைய தினமே திருமலைக்கு வருகை தந்திருந்தனர். நகரின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.