2/15/2013

| |

வடக்கில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளால் பயன்படுத்தாத நிதி 569 மில்லியன் ரூபா திறைசேரி திரும்பியது


வட மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் நிர்வாகத்தின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களால் பயன்படுத்தப்படாத 569 மில்லியன் ரூபா அபிவிருத்தி நிதி திறைசேரிக்கு திரும்பி வந்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்றுத் தெரிவித்தார்.
வடக்கிலுள்ள வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இந்நிதியை அவர்கள் பயன்படுத்தாததாலேயே அவை திறை சேரிக்குத் திரும்பி வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி குறிக்கப்பட்ட காலப் பகுதிக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும். இல்லாவிடில் அந்நிதி தானாகவே திறைசேரிக்குத் திரும்பி விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை அரசாங்கம் மீளப் பெறுதில்லை. மாறாக ஒதுக்கப்படும் நிதி உரிய காலப் பகுதியில் பயன்படுத்தப்படாவிட்டால் அது தானாகவே திறைசேரிக்குத் திரும்புவது வழமை. அதுவே சட்ட ஏற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.