இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம்
நாடளாவிய ரீதியில் 2000 குளங்களைப் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் குளங்களைக் புனரமைக்க மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வருடம் வழங்க உலக வங்கி இணங்கியிருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திட்டப் பணிப்பாளர் எஸ்.கே.லியனகே தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் 2000 குளங்களைப் புனரமைக்கும் வேலைத்திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவால் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 654 குளங்கள் புனரமைக்கப் பட்டிருப்பதாகவும், எஞ்சிய குளங்களை விரைவில் புனரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திட்டப் பணிப்பாளர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
குளங்களைப் புனரமைக்கும் திட்டத்துக்கு உலக வங்கி இவ்வருடம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் அதிகாரிகள் இது குறித்த இணக்கப்பாட்டைத் தெரிவித்ததாகக் கூறினார்.
குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள விவசாயிகள் குளங்களை மையமாகக் கொண்டே தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். அவர்களின் ஜீவனோபாயத்துக்கு உதவும் வகையில் குளங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.