மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகள் மீளாய்வு செய்யப்பட்டு, மீள வரையறை செய்யப்படுகின்ற நடவடிக்கை அப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள சில தமிழ்ப் பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் அந்த ஹர்த்தால் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசங்களில் கவனஈர்ப்பு போராட்டங்கள் நடந்துள்ளன.
கடந்த வாரம் மட்டக்களப்புக்கு சென்றிருந்த பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் துனை செயலாளரொருவர் சிவில் அதிகாரிகளுடன் கூடி ஆராய்ந்து பிரதேசய செயலக எல்லைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுத்துள்ளார்.
அந்தத் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்பொருட்டே தமிழ்ப் பிரதேசங்கள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஹர்த்தாலும் கவன ஈர்ப்பும்
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தேச தீர்மானத்தின்படி தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலக நிர்வாகங்களிலுள்ள சில தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய காணிகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கோரளை மத்தி மற்றும் ஒட்டமாவடி பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்படுகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகர், செங்கலடி மற்றும் ஆரையம்பதி உட்பட சில தமிழ் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக அந்த பிரதேசங்களில் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம் என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்கள் மூலம் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, தமிழ் பிரதேசங்களில அழைப்பு விடுக்கப்பட ஹர்த்தாலுக்கு கல்குடா தொகுதி முஸ்லிமகளின் எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் வழமைக்கு மாறாக இன்று வெள்ளிக்கிழமை ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச முஸ்லிம்கள் தமது வியாபார நிலையங்களை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்குடா உலமா சபையினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
உத்தேச தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி இன்று வெள்ளிக்கிழமை ஒட்டமாவடி பிரதேச முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் ஐும்மா தொழுகையின் பின் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
உத்தேச எல்லை நிர்ணயத்துக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான வாசகங்களையும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தார்கள்.
இதேவேளை இந்த விவகாரத்தில் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வொன்றை காண்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமைச்சர் ஜோன் செனவிரட்னவின் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.