1/31/2013

| |

கிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் விவசாயம் பெரும் பாதிப்பு

இலங்கையில் அண்மையில் பெய்த கடும் மழையின் காரணமாக நெற்பயிர்கள் பெரும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் பரப்பில் பயிர் செய்யப்பட்டிருந்த நெல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை தெரிவிக்கிறது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கூடுதலான பாதிப்புகளும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் முதல் முறையாக செவ்வாய்கிழமை(29.1.13) பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினர்.
இம்மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிர் செய்யப்பட்டிருந்த நிலையில், அறுபது முதல் எழுபதாயிரம் ஏக்கர் பரப்பில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட விவசாயத்துறையின் துணை இயக்குநர் ஹரிஹரன் தெரிவித்தார்.
இதன் காரணமாக மாவட்ட அளவில் நெல் உற்பத்தியிலும் 60 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடையலாம் என்றும், அது தேசிய அளவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறுகிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளாக மழை வெள்ளத்தின் காரணமாக நெல் பயிர்கள் அழிந்து வருகிறது எனவும் ஹரிஹரன் சுட்டிக்காட்டுகிறார்.
இந்நிலை தொடருமானால் விவசாயிகள் தமது தொழிலை கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று மாவட்ட விவசாய அமைப்புகளின் செயலர் திருநாவுக்கரசு கூறுகிறார்.
மழை வெள்ளத்தை விட நீர்ப்பாசனக் குளங்கள் திறந்து விடப்படுவதன் காரணமாகவே அழிவுகளும், இழப்புகளும் ஏற்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு போதிய இழப்பீட்டை அரசு வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.