தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அமெரிக்காவின் கைப்பொம்மையாக இயங்கி வந்திருக்கின்றார் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உள்வீட்டு இரகசியங்களை இவரை பயன்படுத்தி கொழும்பில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் அறிந்து வந்திருக்கின்றார்கள் என்றும் விக்கிலீக்ஸ் மூலம் அதிரடித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொழும்பில் அமெரிக்க தூதுவராக இருந்த ஜெப்ரி லன்ஸ் ரீட்டால் சம்பந்தருக்காக பரிந்து வெளியுறவு அமைச்சின் தலைமைக் காரியாலயத்துக்கு 2004 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவுக்கு செல்ல முதல் நாள் விசாவுக்கு விண்ணப்பித்து இருக்கின்றார் சம்பந்தன். குடும்ப அங்கத்தவர்களை சந்தித்தல், தமிழர் கலாசார விழாவில் பங்கெடுத்தல் ஆகியன இவரின் பயணத்துக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டு இருந்தன.
ஆயினும் இவருக்கான விசா நிராகரிக்கப்பட்டு உள்ளது என தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவால் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இவர் உள்ளார் என்று தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவு அமைச்சுத் தலைமைக் காரியாலயத்தால் அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் சம்பந்தருக்காக வக்காளத்து வாங்கி வெளியுறவுத் தலைமைக் காரியாலயத்துக்கு எழுதிய அவசர கடிதத்திலேயே சம்பந்தர் அமெரிக்காவுடன் நீண்ட கால தொடர்பு உடையவர், புலிகளுடன் மிக நெருக்கமான அரசியல் தொடர்புடைய தமிழ் தேசிய கூட்டமைப்பு, சம்பந்தன் ஆகியோரை பயன்படுத்தித்தான் புலிகளின் உள்வீட்டுச் சங்கதிகளை தூதரகம் அறிந்து வருகின்றது என்று குறிப்பிட்டு உள்ளார்.
புலிகள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு, எனவே நாம் புலிகளுடன் சந்திப்பு மேற்கொள்ள முடியாது, இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தர் ஆகியோரை பிரதானமாக வைத்துத்தான் சமாதான முன்னெடுப்பு விவகாரங்கள் உட்பட புலிகளின் நிலைப்பாடுகளை அறிய முடிகின்றது எனவே இவரை கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்கி, இவருக்கு விசா வழங்க ஆவன செய்யுங்கள் இவரது பயணத்துக்கான வசதிகளை நாம் அப்போதுதான் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். ”இவ்வாறு இக்கடிதத்தில் முக்கியமாக உள்ளது.