1/06/2013

| |

திரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீள் நினைவும்.

vayiramuththu-
-யோகரட்ணம்-l
எனது ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’என்ற நூல் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தபோது ஐயா வைரமுத்து மாஸ்டர் அவர்களும் அதில் கலந்துகொண்டது எனக்கு கிடைத்த மிகப்பேறாக நான் கருதுகின்றேன்.  வெகுவிரைல் இலங்கை சென்று அவரை உயிருடன் பார்க்கவேண்டும் என்ற எனது ஆவல் சிதைந்துபோனது. திரு.வைரமுத்து ஐயா அவர்கள் தலித் சமூகத்திற்காக செய்த பணிகளும், இப்படியான ஒரு மனிதன் எம்மத்தியில் வாழ்ந்தார்  என்பதும் வரலாற்றில் பதிவு செய்யவேண்டியது மிக அவசியம் என்பதாக நான் கருதுகின்றேன். அவர் பற்றிய சில தகவல்களை எனது நூலில் பதிவு செய்திருந்தாலும், அவருக்கான எனது இந்த நினைவஞ்சலியிலும்  எனது சில மீழ் நினைவுகள்….
1966ஆம் ஆண்டு காலப்பகுதியில் எம்மத்தியிலே நிகழ்ந்த ஒரு ஆயுதப்போராட்டம் பற்றிய தகவல்  பலருக்குத்தெரியாத சங்கதி. குறிப்பாக இன்றைய இளைய சந்ததியினர் அறியாத ஒரு வரலாறு. இந்தப்போராட்டமானது சிங்கள அரசிற்கும் தமிழ்போராளிகளுக்கும் இடையில் நிகழ்ந்த ஆயுதப்போராட்டம் அல்ல!மொழியால், இனத்தால், கலாச்சாரத்தால் ஒன்றுபட்டவர்கள் என்று பேசிக்கொள்ளும் தமிழ்பேசும் மக்களாகிய நாமே நமக்கெதிராக போராடிய காலம். இந்தப்போராட்டத்தாலும் உயிர் இழப்புகளும், உடைமை அழிவுகளும், இடப்பெயர்வுகளும் கூட நிகழ்ந்தது. யாழ்குடா நாடு பூராகவும் பதட்டம் நிலவிய காலம்அது. இந்து,கிறிஸ்தவ ஒடுக்குமுறைச் சாதியினரிடமிருந்து தம்மை விடுவிப்பதற்காக தலித் மக்களால் நிகழ்த்தப்பட்ட சமூகவிடுதலைப்போராட்டம். இதுவே முடியாட்சிகளுக்கு பிற்பாடு இலங்கையில் நிகழ்ந்த முதலாவது ஆயுதப்போராட்டம்.  இந்தக்காலப்பகுதியில்தான் திரு. வைரமுத்து ஐயாவுடன் நான் அறிமுகமாகின்றேன். அப்போது எனக்கு  வயது15 .
பொதுஇடங்களிலும்,ஆலயங்கள்,பாடசாலைகள்,தேனீர்க்கடைகள்,சலூன்,சலவைக்கடை,சுடலை போன்ற இடங்களிலும் தீண்டாமை நிலவியபோது அதற்கெதிராக நிகழ்த்தப்பட்ட சமூகவிடுதலைப்போராட்டமே ஆயுதப்போராட்டமாக பரிணமித்தது. சிறுபான்மைத் தமிழர் மகாசபை,தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி போன்றவைகளே இந்தப்போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்கள். இக்காலகட்டத்தில் திரு வைரமுத்து மாஸ்டர் அவர்கள் அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் முன்னணி உறுப்பினராக இருந்தார்.
திரு. வைரமுத்து அவர்கள் தனது 30வது வயதிலேயே பல்வேறு ஆற்றல் உள்ளவராக திகழ்ந்தார். ஆங்கிலமும்,சிங்களமும் மிக சரளமாக பேசும் ஆற்றல் கொண்டவர். யாழ் ஸ்ரான்லி கல்லூரியின் ஆசிரியரகவும்  பணிபுரிந்தார்.கண்டி தியவத்தை நிலமையாகவும், 77 காலப்பகுதியில் கல்வி அமைச்சராகவும் இருந்தவர் திரு. நிசங்கவிஜயரட்ணா அவர்கள். இவர் திரு. வைரமுத்து மாஸ்டரின் மிக நெருங்கிய நண்பர். நிசங்கவிஜயரட்ணா அவர்களின் நட்பும் ஆலோசனையுமே 1948இல் அகில இலங்கை பௌத்த தமிழ் காங்கிரஸ் எனும் ஸ்தாபனம் தோன்றக் காரணமானது. இதற்கு திரு. வைரமுத்து அவர்கள் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
யாழ்மேலாதிக்க தமிழ் ஒடுக்குமுறை சாதியினரால் கல்வியும், படசாலை பிரயோகமும் மறுக்கப்பட்ட தலித் சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காகவும் வேலை வாய்ப்பிற்காகவும் மாற்று வழி கண்டுகொண்டவர் திரு வைரமுத்து அவர்கள். 1966களில் தமிழ் பௌத்த காங்கிரசின் உதவியுடன் பின் தங்கிய தலித் கிராமங்களான கரவெட்டி (கன்பொல்லை), புத்தூர்,அசசுவேலி போன்ற கிராமங்களில் பாடசாலைகள் அமைத்து அதன் திறப்பு விழாவிற்காக மல்வத்தை பீடாதிபதி மகாநயக்கர் வணபிதா விபஸ்தி தேரர் அவர்களும் வரவழைக்கப்பட்டார். கலவரம் ஏற்படலாம்  என்ற காரணத்தால் தனது நண்பரான பொலிஸ்மா அதிபர் திரு.இக்த மல்கொட மூலமாக பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தார் திரு. வைரமுத்து அவர்கள்.  இச்செய்தியை அறிந்த யாழ்மேலாதிக்க ஒடுக்குமுறைச் சாதியினருக்கு காதுகளில் ஈயம் உருக்கி ஊற்றிய வேதனையை கொடுத்தது. இதற்கெல்லாம் காரணம் இந்த ஜயாத்துரை (வைரமுத்து) தான் இவனுக்கு உதவியாக பொலிஸ்மா அதிபர் இருப்பதையும் அறிந்து கொதித்தனர். அப்போது யாழ் அரசாங்க அதிபராக இருந்தவர் திரு.வேணன் அபயசேகரா. இவர் யாழ்மேலாதிக்க சக்திகளுக்கு சார்பானவராகவும் இருந்தார். இவரூடாக வைரமுத்து மாஸ்டரின் நண்பரான பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றத்திற்கான பணிப்பு தந்தி மூலமாக அனுப்பப்பட்டது. இதை அறிந்த வைரமுத்து அவர்கள் கொழும்பு சென்று வணக்கத்துக்குரிய கெப்பிட்ட கெதர ஞானசீக தேரரை சந்தித்து விபரத்தை கூறினார். (கெப்பிட்ட கெதர ஞானசீக தேரரின் உற்ற நண்பராக இருந்தவர் திரு எஸ்.டபிள்யூ,ஆர்.டி. பண்டாரநாயக்கா)  அதன் விளைவாக பொலிஸ்மா அதிபரின்  இடமாற்றம் இரத்துச்செய்யப்பட்டு  அதற்கு பதிலாக யாழ் மேலாதிக்க சமூகத்திற்கு சேவகம் செய்து வந்த திரு. வேணன் அபயசேகரா யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டார்.
இவ்வாறான திரு.வைரமுத்து மாஸ்டர் அவர்களின் பணியும், யாழ்மேலாதிக்கத்திற்கு எதிரானபோராட்டத்தின் பின்னணியிலேயே மூன்று தமிழ் சிங்கள பௌத்த பாடசாலைகள் வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இதனூடாகவே பல தலித் மாணவ, மாணவிகள் கல்வி கற்பதற்கும், தொழில் வாய்ப்பு பெறுவதற்கும் அடிப்படைக்காரணமாக அமைந்தது.
இக்காலகட்டத்தில் தான் திரு வைரமுத்து மாஸ்டர் அவர்கள் யாழ் இந்துச்  சமூக மேலாதிக்கக் கலாச்சாரத்திற்குள் ஒரு கலகத்தை ஏற்படுத்தினார். 1968இல் படித்த தலித் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காகவும், சிங்களக் கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் அறிந்து 100 தலித் இளைஞர்களை பௌத்த மத மாற்றத்திற்காக காலி, மாத்தறை போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றார். (இது குறித்து அப்போது தந்தைபெரியாரும் பாராட்டியதாக வரலாறு கூறுகின்றது.) இந்த 100இளைஞர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பது எனக்குப் பெருமையே
பௌத்த மத மாற்றத்திற்காக நூறு இளைஞர்கள் தெற்கு நோக்கிய பயணம் என்ற செய்தி யாழ்மேலாதிக்க அரசியல் தலைமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. தீண்டாமை ஒழிப்புப் போராட்டமானது சாத்வீகமாகவும், ஆயுதப்போராட்டமாகவும் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் வைரமுத்து அவர்களின் பௌத்த மத மாற்றப் போராட்டம் என்பது மூன்றாவது போராட்ட அணுகுமுறையாக இருந்தது. சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினராக இருந்தபோதும் பௌத்த மத மாற்ற வழி என்பது வைரமுத்து அவர்களின் தனிப்பட்ட முயற்சியாகவே இருந்தது. தனது சொந்த செல்வாக்கையும்,சொந்த பணத்தையும் செலவு செய்து சமூகத்திற்காக உழைத்தவர் திரு.வைரமுத்து அவர்கள்.
வைரமுத்து அவர்களின் இவ்வாறான சமூகம் சார்ந்த பணிகளை பலர் திட்டமிட்டே இருட்டடிப்புச்செய்து வந்துள்ளனர். தீண்டாமைப் போராட்டம் குறித்து எழுதப்பட்ட ஒரு சில நூல்களில் பௌத்த மதமாற்றமும், சிங்கள மொழி அறிவிக்கான  அதன்பயன் பாடுகள் குறித்தும் ஒரு வரிகூட எழுதப்படவில்லை. அதிலும் சிலர் தாம் சார்ந்த கட்சி நலன் சார்ந்துதான் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும் சம்பவங்களையும் எழுதியுள்ளார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகவே உள்ளது.நான், வைரமுத்து மாஸ்டரின் இளையமகன் ரவிராஜ்(கனடா),ஜெர்மனியில்இருக்கும் தெய்வேந்திரம், பரிசில் இருக்கும் குணச்சந்திரன், புலேந்திரன், இலங்கையில் இருக்கும் மனோகரன் எல்லோரும் காலியில் உள்ள சிறீ ரட்ண சார யூனிவெசிற்றிப் பிரிவென வில் இருந்தோம். அங்கு அதிபராக இருந்தவர் கலாநிதி பத்தேகம கனேகம  சரணங்கர தேரர். இவர் சமசமாயக் கட்சியின் ஆதரவாளர். நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்த ஒரு நாள் எங்கள் கல்வி எவ்வாறு இருக்கிறது என்று பார்ப்பதற்காக திரு.வைரமுத்து மாஸ்டர் அங்கு வந்தார்.  அப்போதுதான் கலாநிதி பத்தேகம கனேகம  சரணங்கர தேரர் அவர்களுக்கும் வைரமுத்து ஐயா அவர்களுக்கும் உள்ள நட்பின் நெருக்கத்தை பார்த்து நாம் வியந்தோம். அதன் பிற்பாடு சந்திரவெல விகாரையில் முன்பிருந்ததைவிட எமக்கு ஆதரவும், மதிப்பும் உயர்ந்ததாகவே நான் கருதுகின்றேன்.
அதேபோல் திரு. நிசங்க விஜயரட்ணவிற்கும், கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில்மத்தியூவிற்கும் உள்ள வைரமுத்து ஐயாவின் நட்பை நான் நேரில் பார்த்து வியந்திருக்கின்றேன். வைரமுத்து ஐயாவின் நண்பர்களான யாழ்அரச அதிபராக இருந்த திரு. லால் விஜயபாலாவினதும்,யாழ் பொலிஸ் அத்தியேட்சகர் எ.இ.ஆனந்தராசாவினதும் அறிமுகம் எனக்கு பெரிய உதவியாக இருந்தது.  என்னை சாதிப்பெயர் சொல்லி திட்டிய இன்ஸபெக்டர் ஒருவரை கண்டிப்பதற்காக இவர்களே எனக்கு உதவியாக இருந்தவர்கள்.
வடமாகாணத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த எவருமே விதானைக்கான பதவியை பெறுவதென்பதை கனவாகக்கூட பார்க்க அனுமதியில்லாத காலத்தில் முதல் முதலாக ஒரு தலித்தை விதானை ஆக்கிய பெருமையும் வைரமுத்து ஐயாவின் சாதனைகளில் ஒன்றாகும். தீவுப்பகுதியில் ஒரு விதானைக்கான வெற்றிடம் இருந்ததை அறிந்த வைரமுத்து அவர்கள் தெற்கு அரசியல் வாதிகளுடன் தனக்கிருந்த  நட்பின் காரணமாக  வை.சந்திரராசாவிற்கு அப்பதவியை பெற்றுக்கொடுத்தார்.
சமாதான நீதிவானாக  பதவி ஏற்பதென்பது அநேகமாக ஒரு நீதிவான் மூலமாகவோ, அல்லது ஒரு சட்டத்தரணி முன்நிலையிலேதான்  நடைபெறுவது வழமை. ஆனால் திரு.வைரமுத்து அவர்கள் சமாதான நீதிவானாக பதிவிப்பிரமானம் எடுத்தது திரு.நிசங்க விஜயரட்ணாவின் முன்பாக தலதாமாளிகையில். தமிழர்களில் வேறு எவருமே தலதாமாளிகையில் சமாதான நீதிவானாக  பதவிப் பிரமானம் எடுத்ததில்லை. வரலாற்றில் இதுவே முதலும் கடசியுமாக இருக்கும் என்றுதான் நான் கருதுகின்றேன்.
திரு.வைரமுத்து அவர்கள் தலித் சமூகத்திற்காக செய்த பணிகள் ஏராளம்.  பிரபல்யப்படுத்துவதற்காக அவர் எதையும் செய்ததில்லை. அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அவரின் தன்னடக்கத்தையும், திறமையையும் அறிந்து கொள்ளமுடியும். சிறுவயதில் சிலகாலம் அவரோடு  கைகோர்த்து பயணித்தவன் என்ற பெருமையும் எனக்குண்டு. 94வயது வரை வாழ்ந்த சாதனையாளன். நான் ஒரு முறை தொலைபேசியில் அவருடன் பேசும்போது நீ வரக்கே நான் இருப்பனோ தெரியாது என்று கூறியபோது, இல்லை ஐயா நான் கட்டாயம் உங்களை வந்து பார்ப்பேன் என்று உறுதி அளித்தேன். அவர் எனக்கு கூறிய ‘நீ வரேக்க நான் இருக்கமாட்டேன்’ என்ற உறுதிமொழியை அவர் காப்பாற்றியுள்ளார். நான் அவரை ஏமாற்றிவிட்டேன். இவ்வாறான ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதை எமது சமூகம் தலைமுறை தலைமுறையாக கொண்டாடவேண்டும்.
இயற்கையின் நியதியை யாரால் தடுத்துவிட முடியும். அவரின் ஆத்மா சாந்திபெற எமது சமூகம் சார்ந்து பிராத்திக்கின்றேன்.
உங்கள் நினைவு எங்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும் ஐயா
உங்கள் மாணவன்
யோகரட்ணம். (5-01-2013)