ஆப்கானில் அமெரிக்காவின் எதிர்கால நிலை குறித்து தீர்மானிக்க ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயி நேற்று அமெரிக்கா விஜயம் மேற்கொண்டார்.
மூன்று நாள் விஜயமாக அமெரிக்காவை சென்றடைந்த ஹமீத் கர்சாயி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்திக்கவுள்ளார்.
ஆப்கான் நகரங்கள், கிராமங்களில் இருந்து அமெரிக்க துருப்புகள் முழுமையாக வெளியேற வேண்டும் என ஹமீத் கர்சாயி வலியுறுத்தி வருகிறார். எனினும் 2014 ஆம் ஆண்டுடன் ஆப்கானில் இருந்து வெளிநாட்டு துருப்புகள் முழுமையாக வெளியேற அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹமீத் கர்சாயி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது ஆப்கானில் முழுமையான அதிகார கையளிப்பு மற்றும் இருநாட்டு உறவு குறித்து ஒபாமா ஆலோசிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் ஆப்கான் படைகளுக்கான இராணுவ உதவியை அதிகரிக்க ஜனாதிபதி கர்சாயி கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா கடந்த 2011 இல் ஆப்கானுக்கு 120 பில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது. எனினும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த உதவிகளை அதிகரிப்பதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.