ஓட்டமாவடியில் இன்று (18.1.2012) ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று (18.01.2013) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத செயற்பாட்டினைக் கண்டித்தே ஜும்ஆத் தொழுகையின் பின் இந்த கண்டனப் பேரணி இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கல்குடாக் கிளை ஏற்பாடு செய்திருந்த இந்தக் கண்டணப் பேரணியில் கல்குடாத் தொகுதியில் உள்ள 19 ஜும்ஆப் பள்ளிவாயல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
தற்போதுள்ள ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுக்குரிய முஸ்லிம் கிராமங்கள் கிரான் மற்றும் வாகரை ஆகிய தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ளது.
இந்த முஸ்லிம் கிராமங்களை முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இணைக்க கோரியும் தமிழ் தேசியக் கூடடமைப்பின் இன வாத போக்கை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரணியில் கலந்து கொண்ட மக்கள் அரசியலுக்காக இனவாதத்தைத்தூண்டாதே, இனவாதம் பேசி அரசியல் வளர்க்காதே, ஒற்றுமையாக உள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் உறவில் தழிழ் கூட்டமைப்பு பிளவை ஏற்படுத்தாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியதுடன் தமது முஸ்லிம் கிராமங்களையும் தமக்கு வழங்க வேண்டுமென இதன் போது வலியுறுத்தினர்.
இதன் இறுதியில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி.அன்சாரிடத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
இந்த மகஜரில் கோறளைப்பற்று மேற்கு செயலகப் பிரிவுக்கு சொந்தமான 05 கிராம சேவகர் பிரிவுகள் தற்காலிகமாக கிரான் பிரதேச செயலகப் பிரிவுடன் இணைக்கப்பட்டதை மீண்டும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைத்துத் தருமாரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவு வர்த்தகமானியில் அறிவிக்கப்படாமையால் பல பிரச்சினைகள் உள்ளதால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தை வர்த்தகமானியில் அறிவிப்பதோடு அதற்கான பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த மகஜர்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு விலாசமிடப்பட்டு ஒப்படைப்பதற்காக கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் ஆகியோரிடம் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கல்குடாக் கிளை பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.