ஏ.பி.எம்.இத்ரீஸ்
நேற்றிரவு ரிஸானாவின் தூக்குத்தண்டனையை கேள்விப்பட்டதிலிருந்து என்னால் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாமல் இருந்தது. காலையில் நமது கலாச்சாரக் காவலாளிகள் விடுத்த அறிக்கைகளை வாசித்த போது அழுவதா? சிரிப்பதா? என்ற திரிசங்கு நிலையில் இருந்து இது தொடர்பான என் தரப்பு அபிப்பிராயங்களை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன். குற்றங்களுக்கான தண்டனை முறைகளே ஒரு மதத்தின் மையக் கருத்தாக இருக்க முடியாது. அதிகபட்சம் குற்றம் என்னும் நோயைக் கட்டுப்படுத்தும் ஒரு தற்காலிக மருந்தாக, ஏற்பாடாக மட்டுமே கருத முடியும். சில குற்றங்கள் பரவலாகக் காணப்பட்டு அவற்றை உடனே தடுக்க வேண்டிய நிலையில் அதிகபட்ச கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படலாம். ஆனால் குற்றத்தைத் தடுப்பது முக்கியமே தவிர தண்டனைகளை என்றென்றைக்குமான தீர்வுகளாக கட்டிக் காக்க வேண்டும் என்று இஸ்லாம் என்றுமே சொன்னதில்லை.
அல்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள், “இறை நம்பிக்கை கொண்டவர்களே! கொலை வழக்குகளில் பழிவாங்கல் உங்கள் மத்தியில் வழக்கமாக உள்ளது. கொலை செய்தவன் சுதந்திர மனிதன் என்றால் அந்த சுதந்திரமான மனிதனும், கொலை செய்தவன் அடிமை என்றால் அந்த அடிமையிடமும் கொலை செய்தவள் ஒரு பெண் என்றால் அந்தப் பெண்ணிடமும் பழிவாங்கலாம். கொலை செய்தவனுக்கு கொல்லப்பட்டவனின் சகோதரனால் சலுகை அளிக்கப்பட்டால் பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும்.” (2.178)
மேலே எடுத்தாளப்பட்ட அல்குர்ஆன் வசனத்தில் பலவிடயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. முதலாவதாக அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த பலிக்குப் பலி கொள்கையை குர்ஆன் ஏற்றுக் கொள்கின்றது. ஒரு சுதந்திர மனிதன் – ஒரு சுதந்திர மனிதன். அடிமைக்கு – அடிமை. பெண்ணுக்கு – பெண் கொல்லப்பட வேண்டும் என்னும் முறையில் பலிக்குப்பலி அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அந்தத் தளத்திலேயே நின்றுவிடவில்லை. பழங்குடிச் சமுதாயச் சூழலைக் கடந்த ஓர் உயர்ந்த உன்னதமான பண்பாட்டை அதனுடன் சேர்த்து அல்குர்ஆன் கூறுகின்றது. அதாவது அல்குர்ஆன் இங்கே தண்டனைக் குறைப்பை ஊக்குவிக்கின்றது. அல்குர்ஆனில் சமூக வழக்கம் (உர்பு-மஃரூப்) சொல்லாடல்கள் இடம்பெறுவதால் அக்காலத்தில் அறேபியாவில் பழங்குடிகள் மத்தியில் காணப்பட்ட ரத்த ஈட்டுப்பணம் செலுத்தும் வழக்கம் பரவலாக இருந்தமை இதன் மூலம் தெரியவருகின்றது. எனவே அல்குர்ஆன் இங்கே அதைத்தான் மேலும் ஊக்குவிக்கின்றது. இறைவன் வழங்கும் சலுகை எனவும் இறைவனின் கருணை எனவும் அதனை வர்ணிப்பதன் மூலம் அறத்தின் உயர்ந்த மட்டத்திற்கு அதை உயர்த்துகின்றது. இவ்வாறு நடப்பு நிலமைகளில் விரும்பத்தக்க விசயங்களாக இருந்தால் அவற்றை அல்குர்ஆன் ஏற்றுக் கொள்கின்றது. அது மட்டுமன்றி மன்னித்து நட்டஈடு பெறுவதை, ஓர் உயர்ந்த அற ஒழுக்க மதிப்பை அதற்கு வழங்கி அதை மேலும் உயர்த்திப் பேசுகின்றது.
அடிமை முறை விசயத்திலும் இது பொருந்தும். அடிமை முறையை ஒரு கட்டத்தில் இஸ்லாம் அனுமதித்தது. ஆனால் அடிமைத் தனத்தை ஓர் நிலையான அமைப்பாக அல்லது என்றைக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க வடிவமாக இஸ்லாம் என்றுமே கூறியதில்லை. முதலாவதாக, அடிமைகள் மனித நேயத்தோடு நடத்தப்பட வேண்டும் என்றும் தாங்கள் உண்பதையும் உடுப்பதையுமே அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என இஸ்லாம் விசுவாசிகளை வற்புறுத்தியது. மேலும் அடிமைகளுக்குரிய தண்டனையைப் பாதியாக்க் குறைத்த்து. அடுத்த கட்டத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அடிமைகளை விடுவிப்பதை மிகப் பெரும் தர்ம்மாக ஊக்குவித்தது. மேலும் விசுவாசிகள் செய்த பாவங்களுக்கு குற்றப் பரிகாரமாக அப்பட்டியலில் முதன்மையானதாக அடிமைகளை விடுவிப்பதைக் கட்டாயமாக்கியது. இந்தப் பின்புலத்திலிருந்து பழிக்குப்பழி என்ற கருத்தாக்கத்தையும் (கிஸாஸ்) ஏனைய குற்றங்களுக்குக் கூறப்படும் சில தண்டனைகளையும் இந்த நோக்கிலேயே நாம் பார்க்க வேண்டும். ஒரு போதும் இவை மாற்றப்பட முடியாதவையாக, நெகிழ்ச்சியே அற்றதாக கருத வேண்டியதில்லை. பழிக்குப்பழி என்பது 21 ஆம் நூற்றாண்டிலும் பழங்குடி தன்மையிலும் காட்டுமிராண்டி மனோபாவமும் கொண்ட சஊதி சமூகத்திற்கு சரியானதாகத் தென்படலாம். ஆனால் அதுதான் மிக உயர்ந்த நீதியோ, மிக உன்னதமான இஸ்லாத்தின் அறக்கோட்பாடோ அல்ல. ஆனால், நம்நாட்டு முல்லாக்களும் கலாச்சாரக் காவலாளிகளும் பழங்குடிகளின் பிற்போக்குவாத வழக்கங்களை இஸ்லாத்தின் உன்னத இலட்சிய விதிகளாக இன்னும் கருதிக் கொண்டிருப்பதுதான் கவலையளிக்கிறது.
இஸ்லாம் மன்னிப்பையே அதிகம் விரும்புகின்றது. இறைவன் கருணையாளன், அளவற்ற அன்பாளன் என்றே அல்குர்ஆனின் முதல் வசனமே தொடங்குகின்றது. உலகிலுள்ள எல்லா மதங்களும் மத போதகர்களும் அன்பையே வலியுறுத்திப் பேசியுள்ளார்கள். மாபெரும் கருணையின் வடிவமான அல்லாஹ்வை விசுவாசிக்கும் முஸ்லிம்கள் அந்தப் பண்பையே தமது சமூக அரசியல், சட்ட நடவடிக்கைகளிலும் பின்பற்ற வேண்டும்.
ஒரு பழங்குடிச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் தண்டனை பற்றிய கருத்தியல், நிலவுடமைச் சமூகத்தில் மாறுபடலாம். அவ்வாறே நிலவுடமைச் சமூத்தில் நிலவும் தண்டனைகள் பற்றிய கருத்தாக்கம் தற்கால ஜனநாயக சமூகங்களின் கருத்தியிலிலிருந்து வித்திசாயப்படலாம். இஸ்லாம் குறிப்பிடும் இந்த தண்டனை முறை இஸ்லாத்திற்கு முந்தியே பபிலேனிய, ஆப்ரகாமிய சமூகங்களில் புழங்கி வந்தவைதான். ஆனாலும் இந்த எல்லா சமூக அமைப்புகளிலும் இந்தத் தண்டனை முறைகள் இருந்ததற்கான அடிப்படை நோக்கம் குற்றங்களைத் தடுப்பதே. சமூகத்தைப் பாதுகாப்பதே. குற்றவாளிகளை சீர்திருத்தவே. ஏற்பட்ட இழப்புகளுக்கு நட்டஈடு பெறுவதே என்றால் மிகையான கூற்று அல்ல. இந்த அடிப்படைப் புரிதல் இருந்தால்தான் இஸ்லாம் கூறும் ‘ஹுதூத்’ என்னும் குற்றங்களுக்கான தண்டனைகளையும் நோக்க வேண்டும்.
உண்மையில் இஸ்லாம் பழங்குடிச் சமூகத்தில் தோன்றிய மதமாகும். ஆனாலும் இறுக்கமான பழிவாங்கும் மனோபாவம் கொண்ட கட்டுப்பட்டித் தனமான பழங்குடிக் கட்டுக்களை களைந்து ஒரு பொதுமையான முன்மாதிரிச் சமுதாயத்தை உருவாக்க அது முயல்கின்றது என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய இஸ்லாமாகும். இறையியல் தளத்தில் மானுட சமூகத்தின் சமத்துவம், மானுட ஒற்றுமையிலும் இஸ்லாம் மிகவும் வலுவான நம்பிக்கையை வைத்துள்ளது. இருந்தாலும் சமூகவியல் தளத்தில் அடிமை முறையை அது ஒரேயடியாக ஒழித்துவிடவில்லை. அடுத்து வரும் தலைமுறைகளும் வருங்கால சமூகங்களும் அதை அழித்தொழிக்கும் படியும் அதற்கான உந்துதலளிக்கும் போதனைகளையும் விட்டுச் சென்றுள்ளது.
அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் நம் காலத்தில் எந்த முஸ்லிமும் மாற்றுக் கொண்டிருக்க முடியாது. அப்படி இருக்க குர்ஆனில் விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில தண்டனை முறைகளை ஒழிப்பதை மட்டும் ஏன் ஒருவர் எதிர்க்க வேண்டும். அடிமை முறையை சமூகவியல் நோக்கில் பார்க்க முடியும் போது தண்டனை முறைகளையும் சமூகவியல் நோக்கில் ஏன் பார்க்கக்கூடாது. பத்ரு யுத்தக் கைதிகளை நடத்தியதிலிருந்து நஜ்முத்தீன் அர்பக்கான் வரை சிறைக் குற்றவாளிகளுக்கு காலத்திற்கேற்ற அணுகுமுறைகளை பயன்படுத்தியதை ஏன் நாம் மறந்துவிடுகிறோம். அப்படியான கண்ணோட்டம் அடிமை விசயத்தை அல்லாஹ்வின் கருத்துக்கு இசைவானதென்றால் தண்டனை முறை மட்டும் எப்படி அல்லாஹ்வின் கருத்துக்கு மாறானதாக இருக்க முடியும்.
‘பழிவாங்குதல் என்னும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு இருக்கின்றது’ (2.179) என்று அல்குர்ஆன் கூறுகின்றது. பழிக்குப் பழிவாங்குவதே வாழ்வின் அறுதியும் இறுதியுமான குறிக்கோள் அல்ல. பழிக்குப்பழி எனும் கருத்தாக்கம் ஒரு பழங்குடிச் சமூகத்தின் அக்கால சமூகவியல் கண்ணோட்டம் மட்டுமே. அதை அல்குர்ஆன் குறிப்பிடுகிறது அவ்வளவுதான். அது இறைவனின் கருணை, இரக்கம் போன்ற நிலையான கருத்தாக்கம் அல்ல. சமூகங்களின் கருத்தாக்கங்களைவிட இறையியல் கருத்தாக்கங்கள் இஸ்லாத்தில் உயர்ந்தவை. சட்டம், அரசியல், பொருளாதாரம் போன்ற விடயங்கள் கால, சமூக, இட வர்த்தமானங்களுக்கேற்ப மாறக்கூடியவை. இறையியல் கருத்துக்களே மாறாதவை. எந்தச் சமூகவியல் கருத்துக்களாக இருந்தாலும் அநியாயமாக, கொடூரமாக, ஒடுக்குவதாக, சுரண்டுவதாக இருந்தால் அவை எதனுடனும் இஸ்லாம் சமரசம் செய்து கொள்ள விரும்புவதில்லை. இதுதான் இஸ்லாத்தின் பல்பரிமாணத் தன்மையாகும். விளிம்பு நிலை இஸ்லாம் என்ற கருத்தாக்கத்தின் விளைவே இதுதான்.
குடி, சூது, திருட்டு, கொலை, பாலியல் வன்முறை போன்ற பல சமூக சீர்கேடுகளை இஸ்லாம் கடைசிவரை எதிர்த்து வந்திருக்கிறது. இவை குர்ஆன் ஒழிக்க முயன்ற அக்காலச் சமூக சீர்கேடுகளாகும். ஆனால் அது எந்தப் பழங்குடிச் சமூகத்தில் தோன்றியதோ அச்சமூகத்தின் வழக்கங்களையும் அச்சமூகத்தின் சமூகவியல் பார்வையையும் இஸ்லாம் தவிர்த்துவிடவில்லை. ஏனெனில் அந்தத் தீமைகளை எதிர்கால சமுதாயங்களிலிருந்தும் மட்டுமல்ல, தனது சமகால சமூகங்களிலிருந்தும் ஒழிப்பதற்கான திட்டங்களை வகுத்தது. அன்று நிலவிய வழங்கங்களை ஒருவர் முற்றிலும் தவிர்த்துவிட்டாலும் அந்தத் தீமைகளை அவரால் அப்போதே ஒழித்துவிடவும் முடியாது. உதாரணமாக இன்று இருப்பது போன்று பொலிஸ் நிலையங்களோ, பாதுகாப்பு அதிகாரிகளோ, நிருவாக முறைகளோ இல்லாத பழங்குடிக் காலத்தில் பழிக்குப்பழி என்ற சட்டமுறைமைக்கான ஒரு இருப்பு தேவையானதுதான். அந்த வகையிலேயே அதை நோக்க வேண்டும். இஸ்லாம் நற்செயல் புரிவதற்கே முதலிடம் கொடுக்கின்றது. ஆனால் தீமைகளை வேரோடு களையாமல் அதைச் சாதிக்க முடியாது என்றும் நம்புகிறது. ஒரு பழங்குடிச் சமூகத்தில் நிலவிய பழிக்குப்பழி என்னும் கருத்தாக்கத்தை இதனால்தான் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. ஆனால் பழிக்குப்பழி அக்கால கருத்துநிலைதான். அதை ஏற்றுக் கொண்டாலும் அதனை எல்லாக் காலத்துக்குமான அறநெறியாக இஸ்லாம் உயர்த்திப் பேசவில்லை. கருணை, தயாளம் (இஹ்ஸான்), மன்னிப்பு (அப்ஃவு) ஆகியவையே நிரந்தர அறநெறிகளாகும்.
இஸ்லாத்தைப் பற்றிய மிக மோசமான சித்திரத்தை உலக சமூகங்களுக்கு மத்தியில் உருவாக்குவதில் இந்த ஹுதூத் தண்டனைகள் பற்றிய கருத்தாக்கம் முக்கியமானதாகும். கீழைத்தேய வாதிகள் இந்த விடயத்தை மிகவும் காரசாரமாக விமர்சித்துள்ளார்கள். அவற்றைப் படிக்கும் போது எனக்கு மிகுந்த கசப்புணர்வு அவர்கள் மீது வந்திருக்கிறது. ஆனால் இன்றைய சஊதி தாலிபானிசத்தைப் பார்க்கும் போது கீழைத்தேயவாதிகளின் விமர்சனங்களின் மீதான கொதிப்பு எனக்குள் அடங்கிப் போகிறது.
எழுபதுகளில் மத்தியகிழக்கில் எண்ணைப் புரட்சி ஏற்பட்ட போது, குறிப்பாக பாக்கிஸ்தான் போன்ற அரசுகள் தம்மை இஸ்லாமிய கிலாபத் அரசுகளாக அறிவித்துக் கொண்ட போது மேலைத்தேய எழுத்தாளர்கள் இஸ்லாத்தின் குற்றவியல் தண்டனைகள் குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஒட்டுமொத்த இஸ்லாத்தின் சாரமே இஸ்லாம் ஆட்சிக்கு வந்தால் பெரிய தலைப்பாகை கட்டிய ஒருவர் தனது கையில் பெரும் கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு ‘களவெடுத்தாயா? நீட்டு கையை. ஒரு வெட்டு’ என்கிற மாதிரியான ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். சமூகச் சூழலைக் கருத்திற் கொள்ளாமல் இந்தத் தண்டனைகளை கண்டிப்பாக அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எப்போது இஸ்லாம் நிறுவன மயப்பட்டு பரவ ஆரம்பித்ததோ அக்காலத்திலேயே நடந்தேறியுள்ளது. உலக அளவில் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் அமுலாக்கப்பட்டதற்கான காரணங்கள் மதம் சார்ந்தது என்பதைவிட அதிகமும் அரசியல் சார்ந்த்தாகவே நடந்தேறியுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியமாகும். நம் நாட்டில் தனிச் சிங்கள மொழிச்சட்டத்தை கொண்டுவந்து வாக்குவங்கிகளை அரசியல்வாதிகள் அதிகரித்துக் கொண்டதற்கு இச்செயலை ஒப்பிடலாம். நாம் மேற்கூறிய நாடுகளில் அரசியல், பொருளியல் கொந்தளிப்புக்கள் ஏற்பட ஆரம்பித்தன. அரை பிரபுத்துவ முதலாளிகள் தம்மை முஸ்லிம் ஆட்சியாளர்கள் என தம்மை ஆட்சிப் பொறுப்பில் நியமித்துக் கொண்ட போது இந்த சிக்கல்களிலிருந்து இவர்கள் மக்களின் கவனத்தைத் திருப்புதற்கு ஒரு வழியாக இஸ்லாமிய ஷரீஆ தண்டனை முறைகளை, இஸ்லாமிய வாழ்க்கையின் உன்னத இலட்சிய வடிவமாக அவற்றை அமுல் படுத்துவதையே கருதிச் செயற்பட்டனர். பெரும் கொள்ளையர்கள் தண்டிக்கப்படாமல் குட்டிக் குட்டி கொலையாளிகளும் குற்றவாளிகளும்தான் ஷரீஆ சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாத்தின் உண்மையான நோக்கையோ கருணைக்கும் மனிதாபிமானத்திற்கும் அது கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றியோ இந்த ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. இஸ்லாம் கூறும் ஆன்மீகத்தைவிட இதயமில்லாத வெறும் ஆண் மைய அரசியலையே அரசியல்வாதிகள் அதிக அக்கறை கொண்டிருந்தனர். இஸ்லாத்தை மிகுந்த உணர்ச்சிபூர்வமாக தம்மோடு பிணைத்துக் கெண்டிருந்த முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்துவது நல்ல அரசியல் பிழைப்பாக மாறியது. ஆனால் இந்த உண்மைகளை நாம் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.
மற்றொரு விடயத்தையும் உங்கள் சிந்தனைக்கு கவனப்படுத்தலாம் என நினைக்கின்றேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறேபியாவில் புத்துயிர்ப்பு வாதத்தை தோற்றுவித்த பிதாமகனாகக் கருதப்படும் முஹம்மத் பின் அப்துல் வஹாப் என்பவர்தான் இன்றைய சஊதி ஆரேபியாவின் இத்தகைய பிளவுண்ட இஸ்லாமிய அடிப்படைவாதத்தை, தாலிபானியத்தை இந்த நிமிடம் வரை கடைப்பிடித்தெர்ழுகுவதற்கான காரணமாகும். முஹம்மத் பின் அப்துல் வஹாப், இஸ்லாம் குறித்த ஒட்டுமொத்த பார்வையை, உலக நோக்கை அவர் முன்வைக்கவில்லை. மத்திய காலத்தில் ‘பாப்பரசருக்குரியதை பாப்பரசருக்குக் கொடுங்கள், சீஸருக்குரியதை சீஸருக்குக் கொடுங்கள்’ என்ற கிறிஸ்தவத்தைப் போல அப்துல் வஹாபும் தான் முன்னெடுத்த இஸ்லாமிய புத்துயிர்ப்புவாத செயல்வாதங்களையும் அதன் செயற்பாட்டாளர்களையும் அப்போதிருந்த பிரபுத்துவ குடும்பமான சுஊத் பரம்பரையினரிடம் அடகுவைத்துவிட்டார். அப்துல் வஹாபின் இஸ்லாமிய தாயிகள் தம்முடைய தஃவா என்னும் அறப்பணியை செய்ய வேண்டும், அவர்களுக்குரிய போஷிப்புக்களை சுஊத் பரம்பரை செய்ய வேண்டும். அவர்கள் செய்யும் அரசாட்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு இவர்கள் கட்டுப்பட வேண்டும். பாதிரியின் வயிற்றில் உருவாகும் கடைசி மன்னனையும் கொல்லுங்கள் என்று ரூஸோ சொன்னது போல அப்துல் வஹாபின் மாணவர்கள்தான் இந்தத் தாலிபான் சேகுகள் உருவாக காரணமானார்கள்.
இங்கு இஸ்லாம் முன்வைக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மத்தியகாலத்தில் அரசியல்வாதிகளுக்குச் சென்றது போன்று சஊதியிலும் மன்னர் பரம்பரைகளுக்கு சார்பாக சரீஆச் சட்டம் பயன்படுத்தப்பட்ட அல்லது கோத்திர நலன்களுக்காக இசைவாக்கப்பட்ட வரலாற்றுப் பின்புலம் இப்படித்தான் தொடங்குகிறது. அதுதான் இன்று நாம் எதிர்நோக்கும் அல்லது இஸ்லாம் எதிர்நோக்கும் மிகப் பெரும் நெருக்கடியாகும். இஸ்லாத்தின் ஒட்டுமொத்தக் கருத்தியலும் அது மானுட சமூகங்கள் அனைத்துக்கும் பொதுமையாக முன்வைக்கும் எக்காலத்துக்கும் பொதுவான அறங்களும் சஊதி பழங்குடி, அரைபிரபுத்துவ சேகுமார்களின் கைகளில் குரங்கின் கை பூமாலையாக மாறியுள்ளது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. சஊதியின் குர்பானிகளுக்காக பிச்சைப் பாத்திரங்களை ஏந்திக் கொண்டிருக்கும் நம்நாட்டு ஏஜென்டுகளும் அவர்கள் கட்டிக் கொடுக்கும் பள்ளிவாயல்களில் தர்மகர்த்தாக்களாக மாறுவதற்கு துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் நமது கலாச்சார காவலாளிகளுக்கும் சஊதியின் இந்தப் பொட்டப் பக்கம் தெரிந்தாலும் தெரியாத்தைப் போல நடிக்கின்றார்கள். அவர்களுக்கு ஏழைத் தொழிலாளிப் பெண்ணான ரிசானாவின் உயிர் குர்பான் காசுக்கு முன்னால் துசு என்று நினைக்கிறேன். அறபுலக உலமாக்களின் மஜ்லிசுகளில் இலங்கையைப் பிரநிதித்துவப்படுத்துவர்களும் மௌனங்காப்பதற்கான காரணமும் சஊதியிலுள்ள நச்சரத்திர ஹோட்டல்களில் தூங்கி தமது துனைவியர்களுக்கு நகைகளை வாங்கிக் கொண்டு வழியில் உம்ரா செய்வது தடைப்பட்டுவிடும் என்ற பயந்தான். எனவேதான் அவர்கள் சமய சம்பந்தமில்லாத விடயங்களைப் பற்றி ரிசானாவின் கொலையில் வாக்குமூலங்களாக அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் கூறும் யுத்த தர்மங்களையே மறந்து குழந்தைகளையும் பெண்களையும் வயோதிபர்களையும் நோயாளிகளையும் இயற்கைச் சூழலலையும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி கொன்றொழித்த ஆட்சியாளர்களுக்காக ஜெனீவா சென்று வக்காலத்து வாங்கும் ஆலிம்சாக்களும் நிரம்பிய நம்நாட்டில் ரிசானா போன்ற ஆயிரக்கணக்கான வீட்டுப் பணிப்பெண்கள் இன்னுமின்னும் கொல்லப்படுவதையும் வன்முறைக்குள்ளாக்கப்படுவதையும் நம்மால் தடுத்து நிறுத்துவதற்கு எந்த செயல்வாதங்களும் இல்லையென்பது எப்படிப் போனாலும் இதற்குப் பின்னால் இருக்கும் கருத்தியல்களை புரிந்து கொள்வதிலேயே இன்னும் நாம் பலதசாப்தங்கள் பின்னுக்கே நிற்கிறோம். மேற்குலக மனித உரிமை அமைப்புக்கள் பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் அவர்கள் இதுகால வரை தமது மனித உரிமை அமைப்புக்களால் ஆயிரக்கணக்கான உயிர்களாவது காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் நாம் வாய்கிழியக் கத்தும் ஷரீஆ சட்டம் ஒன்றுமே தெரியாத அப்பாவி குழந்தைத் தொழிலாளியான ரிசானாவை கொன்றொழிப்பதிலேயே நியாயம் காணும் நமது பொதுப்புத்தியைத்தான் எங்குபோய் சொல்வது!
ஷரீஅ சட்டம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒரு வெள்ளைக்காரி ரிசானாவின் இடத்தில் இருந்தால் சஊதியின் ஷரீஅத் சட்டம் தனது முகத்தை எங்கே திருப்பிக் கொள்ளும்? அல்லது அமெரிக்கா, இந்தியா போன்ற பெரிய வல்லரசு சமூகங்களுடன் சஊதியின் ஷரீஅத் சட்டம் எப்படி சமரசம் செய்து கொள்ளும் என்பதை வரலாறு சொல்கிறது.
நன்றி.இத்ரீஸ் .எல்கே