தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையகத்தில் 29-12-2012 அன்று இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்தில் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் ஆற்றிய தலைமை உரை
பகுதி 2
பவ்ரல் மற்றும் சி.எம்.இ.வி ஆகிய உள்ளிட்ட உள்நாட்டு தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் இரண்டும் இணைந்து வடகிழக்கில் நடைபெற்ற தேர்தல் இரத்துச் செய்யப்பட வேண்டுமெனவும், அப்பகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் விடப்பட்ட கோரிக்கையை தேர்தல் சட்டத்தில் இடமின்மையால் தேர்தல் ஆணையாளரால் அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட முடியவில்லை. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில்தான் இலங்கை தமிழரசுக்கட்சி தமிழரை பெரும்பான்மையாகக் கொண்ட 23ஆசனங்களில் 22ஆசனங்களை கைப்பற்றியது. மேலும் மிகப்பிரபல்யமான தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை துஷ்பிரயோகம் செய்து வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர்.
2004ம் ஆண்டு மாசி மாதம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கலைக்கப்பட்;டிருக்க வேண்டும். அதைவிடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர்களுள் ஒருவராக செயற்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வன் அதே பெயரில் தமிழ் தேசிய சுட்டமைப்பை மீண்டும் பயன்படுத்தி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 2 ஆசனங்களையும் ரெலோவிற்கு 2 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும், சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கும் தலா ஒரு இடத்தையும் கொடுத்து 06 இடங்களை தமக்கு எடுத்துக் கொண்டனர். இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை மக்களுக்கு காட்டி 22 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி ஆறு ஆண்டு காலங்கள் பாராளுமன்ற ஆசனத்தில் வீற்றிருந்தனர். அத் தேர்தலில் வென்றவர்கள் பின்தள்ளப்பட்டு தோல்வியுற்றவர்கள் வென்ற புதினம் இத்தேர்தலில்தான் நடந்தேறின. 1983ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் காலஎல்லை நீடிக்கப்பட்டபோது 18 உறுப்பினர்கள் தம் பதவிகளை இராஜினாமா செய்து மக்களின் ஜனநாயக உரிமைக்கு மெருகூட்டி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு புகழை தேடித்தந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு புகழைத் தேடித் தந்தவர்களில் திரு. சம்பந்தன் அவர்களும் நானும் அடங்குவோம். இந்தப் பாரம்பரியத்தை திரு. இரா.சம்பந்தன் ஏன் கடைபிடிக்கவில்லை. தந்தை செல்வாவின் நாமத்தைகூட உச்சரிக்கும் தகுதி தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கோ செயலாளர் மாவை சேனாதிராசா அவர்களுக்கோ இல்லை.
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு 2010ம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகவே தொடர்ந்து செயற்பட்டனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தினரையும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரையும், ரெலோ இயக்கத்தினர் இருவரையும் மற்றும் வன்னி, மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சிலரையும் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்த பின்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்காது கடந்த தேர்தல் வரையும் அதே பெயரில் செயற்பட்டனர். தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் இயங்குகின்ற இலங்கை தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இதுவே காரணம். தமிழ் மக்களை தொடர்ந்தும் தவறாக வழிநடத்தாது இலங்கை தமிழரசுக் கட்சியினர் மிகக் கண்ணியமான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பென அழைப்பதை நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மையான வரலாறு அப்பாவி தமிழ் மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டு விட்டது. தெரிந்தோ, அப்பாவித்தனமாகவோ, சில புத்திஜீவிகள,; அரசியல் ஆய்வாளர்கள், பல்கலைகழக மாணவர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள் போன்றோரால் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பை 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென நம்பவைத்து தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை தூண்டினர். உண்மையில் இந்த தேசிய கூட்டமைப்பானது 2001ம் ஆண்டு எனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை அநேகர் மறந்து விட்டனர். இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. 06 ஆண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் தமது கடமைகளை செய்யாதபடியினால் அவர்களுக்கு நல்லதொரு பாடத்தை புகட்டவென காத்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு வேண்டிய கடமைகளை செய்ய தலைமையின் அனுசரணையின்மையால் பல்லாயிரக்கணக்கான உறவினர்களையும், பலகோடி பெறுமதிமிக்க சொத்துக்களையும் இழக்கநேர்ந்தது என்பதை உணர்கின்றனர்.
செல்வாக்குமிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வழி காட்டியவர்களே இப் பேரழிவுகளுக்கும், சொத்துக்களின்; இழப்புக்களுக்கும் பொறுப்பாளியாவர்கள். இழந்த உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெற்றுத்தர வேண்டிய நட்டஈட்டை பெற்றுத்தருவதில் தவறிவிட்டனர். அப்பாவி மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தக் கூடாதெனவும் அவர்களை விடுவிக்கும்படியும் சர்வதேசமே வேண்டிநின்ற போதும் அம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும், அவர்கள் மீது மிக மிக அக்கறை காட்டவேண்டிய இவர்கள் மௌனம் சாதித்தனர். அன்று பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒரு புது உறுப்பினர்தான் அதை செய்ததாக உண்மைக்குப் புறம்பான ஒரு புதுக்கதை கூறுகிறார். இந்தப்பாவத்தில் எனக்கு பங்கில்லை. புலிகளையும், அரசையும் ஒரு பொது அமைப்பை வைத்து மக்களை விடுவிக்கும்படியும் கேட்டிருந்தேன். மனித கேடயமாக பாவிக்கப்படும் மக்களை விடுவிக்காவிட்டால் மூன்று இலட்சம் மக்களின் சாபத்துக்கு ஆளாவீர்கள் என தம்பி பிரபாகரனுக்கும், இம்மக்களை காப்பாற்றுங்கள் அன்றேல் உங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும், இனியேதும் ஒரு அப்பாவி உயிர் தன்னும் பறிக்கப்படக்கூடாதென ஜனாதிபதியையும் கேட்டிருந்தேன். இந்த ஆறு ஆண்டுகள் வன்னியில் இடம்பெற்ற அத்தனை மரணங்கள், யுத்தத்துக்கு ஆட்சேர்த்தல், பிள்ளைகளை பறிகொடுத்த அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல் போன்ற அனைத்துக்கும் இவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
திரு சம்பந்தன் அவர்கள் தமிழரசுக்கட்சி தலைவராகவோ, அன்றேல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்தும் வடகிழக்கு மாகாண தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக தன்மையை இழந்துவிட்டார். கடைசி நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கும்படி தவறாக வழிகாட்டியவர்கள் தமது செயற்பாட்டை நியாயப்படுத்துவார்களா? திரு சம்பந்தன் அவர்கள் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பை சில ஆசனங்களை வெற்றிபெற வைத்தமைக்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் இவர்கள் அனைவரினதும் ஒன்றிணைந்த முயற்சியால் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 65119 வாக்குகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியவில்லை. திரு. சம்பந்தன் அவர்கள் கூறியதுபோல் தாம் சரத்பொன்சேகாவிற்கு பெற்றுக்கொடுத்த 113873 வாக்குகளோடு ஒப்பிடுகையில் சில உண்மைகள் தெரியவருகின்றன. கடும் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பொறுப்பற்ற முறையில் பிரச்சாரம் செய்தவர்கள் நடந்துகொண்ட முறையே. புத்திஜீவிகள் எனவும் பல்கலைகழக மாணவர்கள் எனவும், சுதந்திர ஊடகவியலாளர்கள் எனவும் கூறிக்கொண்டவர்கள் சில ஊடகவியலாளர்களுடன் இணைந்து யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் திரைமறைவில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தாது மறைத்துவிட்டனர். காயமுற்ற விடுதலைப் புலிகள் போராளிகளின் மரணங்கள், இறுதிக்கட்டப் போரின் போதும் சிறுவர்களைப் போராளிகளாக பலவந்தமாக சேர்க்கப்பட்டமையும் முற்றுமுழுதாக மக்களுக்கு மறைத்து விட்டனர். முல்லைத்தீவில் குடியிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு இவ்விடயங்கள் கொண்டுவரப்பட்ட போதும் யுத்தக்காலத்தில் இவ்வாறான இழப்புக்கள் தவிர்க்கமுடியாததென்று கூறியுள்ளார். இறுதியாக வன்னியில் அவர் நீர்இறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்கினார் என அறியப்படுகிறது.
இனப்பிரச்சனை தீர்விற்கு இந்திய அரசியல் முறைக்கொத்த ஒரு தீர்வை முதன்முதலாக முன்மொழிந்ததும், முன்வைத்ததும் நானே. 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் குறிப்பாக மிக முக்கியமான இரு வேட்பாளர்களிடம், தேர்தல் பிரச்சாரத்தின்போது இனப்பிரச்சனையை முன்வைக்காது தேர்தல் முடிந்தபின்னர் எல்லா வேட்பாளர்களும் இணைந்து இனப்பிரச்சனை தீர்விற்கு முடிவெடுக்கலாமென ஆலோசனை வழங்கியிருந்தேன். பலராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதான இந்திய அரசியல் முறைமையை நான் முன்வைத்தேன். இது சம்பந்தமாக மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக இருந்தபோதும், ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் இதுபற்றி பேசியுள்ளேன். அதுமட்டுமன்றி பல மட்டங்களிலும் உள்ள பலருடனும் இதுபற்றி பேசினேன். நான் தொடர்பு கொண்டவர்களுள் பிரதம மந்திரி, அமைச்சர்கள், கட்சித்தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், சமயப்பெரியார்கள், வணக்கத்துக்குரிய ஆண்டகைகள், மகாநாயக்கர்கள், பல்வேறு இனப்பிரமுகர்கள் போன்ற பலரும் அடங்குவர். என் ஆலோசனைக்கு எவ்வித எதிர்ப்பும் நான் எதிர்கொள்ளவில்லை. இந்திய அரசின் முறைமையை நான் முன்வைத்தமைக்கு முதலாவது காரணம் சமஷ்டி ஒற்றையாட்சி போன்ற சொற்பிரயோகங்களை விரும்பாதவர்களை திருப்திப்படுத்தும். இரண்டாவதாக பாக்கு நீரிணைக்கப்பால் உள்ள எட்டு கோடி தமிழர்களை அமைதிப்படுத்தும். இன்னும் பலவற்றில் மூன்றாவதாக அன்று இந்தியாவில் அமைந்திருந்த இந்த அமைப்பு முறையாகும்.
பெரும்பான்மை இந்துக்களை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அயல் நாடுகளான இஸ்லாமிய நாடுகளுடன் முரண்பாடுகள் இருந்தபோதும் மிகவும் மதிக்கப்படுகின்ற ஓர் இஸ்லாமியர் ஜனாதிபதியாக விளங்கினார். இந்தியாவின் மக்கள் தொகையில் சீக்கிய மக்கள் இரண்டு வீதமாக இருந்தும், சீக்கியர்களில் சிலர் காலிஸ்தான் நாட்டுப்பிரிவினையை கோரியிருந்தும் இன்று பிரதமராக இருப்பவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஒர் சீக்கியராவார். தவிரவும் தமிழர், இஸ்லாமியர், சிங்களவர் எமது மதங்களான பௌத்தமும், இந்துமதமும் எமது கலாச்சாரம், பண்பாடு அத்தனையும் இந்தியாவிலிருந்து இங்கு வந்தவையே. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டுப்பிரிவினையை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது. இன்னுமொரு முக்கியமான விடயம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பிரிவினைக்கோரிய தமிழ்நாட்டில் அக்கோஷம் நிறுத்தப்பட்டு இன்று பிரிவினைப்பற்றி பேசுவதை ஒட்டுமொத்தமாக எல்லோரும் நிறுத்தி விட்டனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டின் சூழ்நிலைக்கேற்ப சில மாற்றங்களோடு இந்திய முறையிலான அரசியலமைப்பை பல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயிருந்தது. ஆனால், இலங்கை தமிழரசுக்கட்சி மட்டும் பொறுப்பேற்று விடுதலைப்புலிகளுடன் பேசியோ அல்லது அவர்களை இணங்கவோ வைத்திருந்தால் அந்தத் தீர்வை ஏற்றுக்கொள்ளக்கூடிய பொன்னான வாய்ப்புக்கிட்டியிருக்கும். இலங்கை தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் விடுதலைப்புலிகளின் முகவர்களாக செயற்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல சந்தர்ப்பங்களை இழந்தபின் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும், கோடிக்கணக்கான சொத்துக்களும் அழிக்கப்பட்டபின் இந்திய அமைப்புமுறை பற்றி பேசுகிறார் திரு. சம்பந்தன் அவர்கள். அதுவும்கூட அரைமனதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எனது ஆலோசனையை ஏற்றிருந்தால் எமது மக்களின் பல்வேறு இழப்புக்களை தவிர்;த்திருக்கலாம். இதுவரை காலமாக மௌனமாக இருந்துவிட்டு, 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி கல்முனையில் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கும் கூட்டத்தில் இந்த ஆலோசனை முதற்தடவையாக முன்வைத்தது. இத்திட்டம் என்னாலேயே முன்வைக்கப்பட்டதென்றோ அல்லது இத்திட்டத்திற்கு எனது ஆதரவும் உண்டென்றோ பத்திரிகையோ அல்லது திரு.சம்பந்தனோ வெளிப்படுத்தவில்லை. ஜனாதிபதியால் ஏற்கனவே இத்திட்டம் வெளிப்பட்டதென மட்டும் திரு.சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அது உண்மையா?.
திரு. சம்பந்தன் அவர்களின் இத்தகைய விபரீதப்போக்கே தமிழ்மக்கள் இந்நிலைமைக்கு தள்ளப்பட்டமைக்கு காரணமாகும். இது என்னுடைய திட்டமென முழு உலகமும் அறிந்திருந்தது. இதுசம்பந்தமாக ஜனாதிபதி அவர்கள் எவ்வித கருத்தும் கூறியதாக நான் அறியவில்லை. அவ்வாறுதான் ஜனாதிபதி அவர்கள் கூறியிருந்தாலும்கூட ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நான் அவரை கேட்டுக்கொண்டதன் நிமித்தமாகவே இருந்திருக்கும். திரு. சம்பந்தன் அவர்களின் சுயநலப்போக்கிற்கு இதுவொரு சிறந்த உதாரணமாகும். என்னைப் பொறுத்தவரையில் திரு. சம்பந்தன் மூலமாகவோ வேறெவர் மூலமாகவோ சிறுபான்மையினருக்கு ஏற்புடைய ஒரு தீர்வை காண்பதே பிரதானமானது. புத்திஜீவிகள், சுதந்திர எழுத்தாளர்கள், பல்கலைகழக மாணவர்கள், அச்சு ஊடகவியலாளர்கள் என்மீது வெறுப்புக் கொண்டுள்ளார்களா? அப்படியிருப்பின் அதற்குரிய காரணமென்ன? நடைபெறும் எதற்கும் தனக்கே புகழ் கிட்டவேண்டுமென திரு.சம்பந்தன் அவர்களும், பத்திரிகைகள் ஏதேனும், தாம் விரும்பும் எவருக்கேனும் புகழ்தேட வேண்டுமென எண்ணலாம். எனக்கு வேண்டியதெல்லாம் எமது மக்களின் பிரச்சனைக்கு ஓர் தீர்வும், துரோகியென எனக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பட்டம் நீக்கப்பட்டு நிம்மதியாக இறக்க வேண்டுமென்பதே.
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு சிறந்த வழியென கூறியவர்கள் தமது கூற்றை வாபஸ்பெற வேண்டும். சிறந்ததோர் தீர்வையடைதற்குப் பதிலாக இத்தகைய சம்பவங்கள் இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தும். எவருக்கேனும் எம்மீது வெறுப்பு இருப்பின் எனது அரை நூற்றாண்டுகால அரசியலுடன் தமது குரோத மனப்பான்மையை கலக்கவிடக்கூடாது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2006 மே 25ம் திகதி வெளியாகிய ஆங்கில தினசரியாகிய டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. “இந்நாட்டில் இன்றுள்ள மிக சிறியளவிலுள்ள ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகளில் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் அவர்களும் ஒருவராவர். ஏனையோர் கொல்லப்பட்டும், விலைக்கு வாங்கப்பட்டு விடுதலைப் புலிகளால் மௌனிகளாக்கப்பட்டுள்ளனர். வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள் மக்களை கொல்வதில்லை, எவருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை, எவரையும் கொலை செய்யவோ, வெறுப்படையவோ தூண்டுவதில்லை. அவர் பிள்ளைகளைக் கடத்தி ஆயுததாரிகளாக ஆக்குவதில்லை. தம்மக்கள் மீது வரி வசூலிப்பதுமில்லை. அவர் இன்று ஈடுபட்டுள்ள பணி ஜனநாயக முறையில் நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண சிரமப்பட்டு உழைப்பதே. அவரின் கனவெல்லாம் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுடனும், கிராமவாசிகளுடனும் சுதந்திரமாக நடந்து திரியவே”. யாராவது பல்கலைகழக மாணவர்களை அல்லது புத்திஜீவிகளை அல்லது அரசியல் ஆய்வாளர்களை அல்லது சுதந்திரமாக எழுதுவோரை, பத்திரிகையாளர்களை எவரையேனும் புண்படுத்தியுள்ளேனா என்று பார்ப்பதற்காக இத் தலையங்கத்தை பலதடவைகள் படித்துப் பார்த்தேன். இவர்கள் தமது எழுத்துமூலமும், பேச்சுமூலமும், பிரச்சார மூலமும் 56 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட என்னைத் தோற்கடிக்க வடகிழக்கே உள்ள தமிழ்மக்களை ஏன் ஈடுபடுத்தினார்கள்? கிளிநொச்சி தொகுதியில் முதன் முறையாக 1960ம் ஆண்டும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற, உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் அத்தனையிலும் போட்டியிட்டுள்ளேன். கிளிநொச்சி (கரைச்சி) கிராமசபையின் தலைவராக 1965ம் ஆண்டும் 1968இல் கிளிநொச்சி பட்டினசபையின் தலைவராகவும், கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினராக 1970;,1977 ஆம் ஆண்டும். தெரிவு செய்யப்பட்டேன். பாராளுமன்றத்தின் கால எல்லையை பொதுசன வாக்கெடுப்பு மூலம் மேலும் ஆறு ஆண்டுகள் நீடிக்க அரசு எடுத்த முயற்சியை எதிர்த்து திரு சம்பந்தன் உட்பட பதினாறு பேர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தோம்.
ஜனநாயக குரலுக்கு செவிசாயுங்கள் என்ற தலைப்புடன் அப்பத்திரிகையின் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “ஜனநாயகவாதியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு வீரசிங்கம் ஆனந்தசங்கரி மீண்டும் ஓர் கடிதம் வரைந்துள்ளார். இத்தடவை தமிழ்நாடு முதலமைச்சர் கலாநிதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களை இலங்கையின் இனப் பிரச்சனைத் தீர்வுக்கு இந்திய முறையிலான அதிகாரப்பகிர்வை இலங்கை அமுல்படுத்த அவரின் ஆதரவை கோரியுள்ளார். கட்சிகளின் ஒத்துழைப்போடு இனப்பிரச்சனைக்கு ஓர் தீர்வுக்கான முயற்சிக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் உதவ முயற்சிக்கின்றார்”.
இலங்கை சுதந்திரமடைந்து 2007ம் ஆண்டு மாசி 4ம் திகதி 59வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய விழாவில் ஜனாதிபதியாக தெரிவானதன் பின் இரண்டாவது தடவையாக அவ்விழாவில் கலந்துகொண்ட அவர் தனதுரையில் கூறியதாவது “தமிழ் இஸ்லாமிய மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமையோடு அவர்களின் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புனிதமான எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும். நான் மொரக்ஹாகந்த மகா சமுத்திர அங்குரார்ப்பண விழாவில் கூறியதை மீண்டும் வற்புறுத்துகின்றேன். அது என்னவெனில் பயங்கரவாதத்தை ஒழிக்க மிகச்சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ்மக்களுக்கு நியாயம் வழங்குவதே. அதற்கு தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்கள் தயாராகவுள்ளனர். இரத்தவெறிபிடித்த புலிகளின் கோரிக்கைக்கிணங்க நாம் தயாராக இல்லை. ஆனால் நியாயமாகவும், நேர்மையாகவும் செயற்படுவதாக இருப்பின் குறைந்தபட்சம் திரு. ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் கோரிக்கைக்கு இணங்கியாக வேண்டும்.”. ரூபவாஹினியிலும் வேறு தொலைகாட்சிகளிலும் இவ்வுரை ஒளிபரப்பப்பட்டது. இதில் கவனிக்கப்பட வேண்டிய எனது நிலைப்பாடு இந்திய முறையிலான ஆட்சி என்பதே. டக்ளஸ் அவர்களின் பிரேரணை வேறு நிலைப்பாடு என்னுடைய ஒத்ததல்ல.
மேலும் ஆசிரியர் தலையங்கத்தின் பகுதிகள் சுயவிளக்கமளிக்கின்றன. இலங்கை தமிழரசுக்கட்சி – தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தவேளையில் விடுதலைப்புலிகள்தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றுகூறி அவர்களின் முகவர்களாக செயற்பட்டனர். திருவாளர். இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் அந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருப்பார்களேயானால் தம்பி பிரபாகரன் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிர்களோடு பலகோடி பெறுமதியான சொத்துக்களும், பொதுச் சொத்துக்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். இலங்கை தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ்மக்களைக் காப்பாற்ற தவறியனவே அன்றி நானல்ல. அப்படியானால் இந்த புத்திஜீவிகளும், அரசியல் ஆய்வாளர்களும், சுதந்திரமாக எழுதுவோரும், தமிழ்ப்பத்திரிகையின் ஒரு பகுதியினரும் தமிழ்மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதே ஒரேவழியென, எந்த அடிப்படையில் மக்களை வழிநடத்தினர். கனடாவிலிருந்து செயற்படும் ஓர் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளருடைய ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிப்பெயர்த்து தேர்தல் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 5ம் திகதி ஒரு தமிழ் தினசரி வெளியிட்டிருந்தது. அவர்கள் கொடுத்திருந்த தலையங்கம் வடகிழக்கில் வாழும் தமிழ்மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதே ஒரேவழி என ஆலோசனை வழங்கியிருந்தது. இத்தினசரி திட்டமிட்டு என்னை தோற்கடிக்கும் நோக்கத்தோடு இவ்வாறு பிரசுரித்ததாக நான் கூறவில்லை. ஆனால் இது எங்கேயோ ஓரிடத்தில் உருவெடுத்த பச்சை துரோகமாகும். இது ஏன் நடந்தது? எப்படி நடந்தது? நீதியாகவும் நேர்மையாகவும் துணிச்சலுடனும் செயற்பட்ட ஓர் அகிம்சைவாதி, தனிமனிதனை வேட்டையாட அந்நிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இம் முயற்சியின் பின்னணி யார்? அவர்கள் எதற்காக இதைச் செய்தார்கள் என்பது பெரும் புதிராக உள்ளமையால் இது விசாரிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
கடந்த சில வருடங்களாக அடிக்கடி பல கொடூரமான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் நான் உட்பட மிகச்சிறிய எண்ணிக்கையினரைத் தவிர மற்றைய அனைவரும் மௌனம் சாதித்தனர். இத்தனை சக்திகளும் ஒன்றிணைந்து குறைந்தபட்சம் ஒரு சம்பவத்தையேனும் கண்டித்திருந்தால் பிரபாகரன் உட்பட பல ஆயிரக்கணக்கான உயிர்களையும், பலகோடி பெறுமதியான சொத்துக்களையும் காப்பாற்றியிருக்க முடியும். எல்லா சக்திகளும் ஒன்று சேர்ந்து, தமிழுக்கோ தமிழ்மக்களுக்கோ கடுகளவேனும் தீங்கு எண்ணாத என்னை அவர்களின் துரோகியாக அடையாளம் காட்டினர். தமிழர் விடுதலைக் கூட்டணியை தந்தை செல்வா ஆரம்பித்த காலம்தொட்டு இன்றுவரை அவரின் அகிம்சை அடிச்சுவட்டை பின்பற்றி வருகிறேன். உண்மையாகவும், விசுவாசமாகவும் உழைத்த எத்தனையோ இளைஞர்கள் அரச படையினரின் துப்பாக்கிக்குண்டுகளுக்கு பலியானார்கள். அவர்களின் தியாகம் இன்று கொச்சைப்படுத்தப்பட்டு வேலையற்றவர்களே ஆயுதம் தாங்கி போராடினார்கள் என்று வர்ணிக்கப்பட்டபோது அந்த நபரை ஒரு ஊடகமேனும் தட்டிக்கேட்காதது எந்தவகையில் நியாயமாகும்? எத்தனை அத்தகைய தலைவர்களை இழந்தோம். உதயசூரியன் கொடியை எமக்குதந்த தந்தை செல்வா அதேகொடியால் போர்த்தப்பட்டே தனது இறுதியாத்திரையை மேற்கொண்டார். தந்தையின் வரலாறும், அவரின் சாதனைகளும் இளைஞர்களின் தியாகங்களும் அன்னாரோடு விசுவாசமாக உழைத்த தலைவர்கள் ஆகியோரின் புனிதமான வீரவரலாறும் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு முக்கிய நிகழ்வுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு புதியதலைமுறையினருக்கு புதுக்கதை சொல்லிவருகிறது தமிழரசுக்கட்சி. இன்று சிலரால் புத்துயிர்கொடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி பழைய மிகமுக்கியமான வரலாற்றை மூடிமறைக்கிறது. தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக்கட்சி அவராலேயே செயலிழக்கப்பட்டிருந்தும் அக்கட்சிக்கு புத்துயிர் அளித்தமை தந்தை செல்வாவுக்கு ஏற்படுத்தப்பட்ட பெரும் அவமானமாகும்.
குடத்தனை என்ற ஊரில் மண் அள்ளச்சென்ற ஒரு பல்கலைகழக மாணவன் உழவு இயந்திரத்துடன் தீயிட்டு கொலைசெய்யப்பட்டான் அப்போது அதனை ஆட்சேபித்தவன் நானே. பல்கலைகழக துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவண் கூல் இன் நியமனம் ஆட்சேபிக்கப்பட்டபோது அதனை எதிர்த்தவன் நானே. இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் நான் சம்பந்தப்பட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் நான் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் இந்திய முறையிலான ஒரு தீர்விற்கு இலங்கை அரசுக்கு வழங்கிய ஆலோசனைக்கு பெரும் வரவேற்பு உண்டென குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் தன் முடிவுரையில் குறிப்பிடுவதாவது “தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. ஆனந்தசங்கரி, இந்திய அரசியல்வாதிக்கு பெரும் பொறுப்புணர்வோடு எழுதியுள்ளாரென நாம் கருதுகின்றோம். ஏனெனில், அந்த ஜனநாயக தலைவருக்கு தென்னிலங்கையிலுள்ள ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய, முஸ்லீம் காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகளுடனும் நெருங்கிய உறவுண்டு.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் என்மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார் போல் தோன்றுகின்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எத்தகைய இன்னல்கள் ஏற்பட்டிருந்தபோதும் எனது கடமையை எனது நாட்டிற்கும், இந்த நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிப்புடனும், அக்கறையுடனும் செய்துள்ளேன். என்மீது அதிகம் நட்பு பாராட்டாத இன்னுமொரு தமிழ் தினசரி 2009ம் ஆண்டு நவம்பர் 3ம் திகதி தனது தலையங்கத்தில் என்னைப் பாராட்டி உள்ளது. இன்று நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பு நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும் பேதங்கள் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌ;வேறு நிலைப்பாடுகளை கொண்டிருந்தபோதும் நான் மட்டும் இனப்பிரச்சனை தீர்வுக்கு இந்திய முறையிலான தீர்வே சிறந்ததென தொடர்ந்தும் கூறிவருகின்றேன் என அப்பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.
இக்கட்டத்தில் எனது நடவடிக்கைகள் பற்றியும் வேறுசில முக்கிய விடயங்கள் பற்றியும் சிறுவிளக்கம்தர கடமைப்பட்டவன். தம்பி பிரபாகரனுடன் எனக்குள்ள உறவு திரிக்கப்பட்டு என்னை ஓர் ஜென்ம விரோதியாக பிரபாகரனை யார் நம்ப வைத்தார்களோ அவர்களில் பலர் இன்று அரசுடன் உறவாடுகின்றனர். பத்திரிகைகளை மிரட்டி என்னை துரோகியாக எடுத்துக்காட்டினர் என்பதால் பத்திரிகைகளுடன் நான் விரோதம் காட்டவில்லை. இன்று நிலைமை வேறு. சுதந்திரமாக அவர்கள் செயற்பட வேண்டும். தமிழ் மக்களை அழிவுப்பாதையிலிருந்து மீட்க வேண்டும். தலைவர் அமிர்தலிங்கம் பிரபாகரனின் உத்தரவின் பேரில் கொல்லப்படவில்லை. அவர் கடுகளவும் அதை விரும்பவில்லை. ஆனால் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை வைத்து இன்றும் பிழைப்பு நடத்தும் சிலரைப் பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாட்டின் நிலை தெரியாமல் பிற நாட்டிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென தப்பாக மக்களை வழிநடத்திய இரு பிரபல ஊடகவியலாளர்கள் இன்றாவது தமது தவறை உணர்ந்து பரிகாரம் தேடவில்லை. அவர்களின் சிபாரிசில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வரலாறு தெரியாது ஆயுதம் தாங்கி போராடியவர்கள் எல்லோரும் வேலையற்றவர்கள் என்றும், ஜெனீவா தீர்மானம் தன் முயற்சியால் உருவானதாகவும், மூன்று மாதங்கள் தான் வெளிநாட்டிலிருந்து இப்பணியில் ஈடுபட்டிருந்;ததாகவும், இவ்வாறு வேறுபல காரணங்களை ஒன்றுக்கொன்று முரணாக கூறும் போதேனும் அவரை கண்டித்திருக்கலாம். இவ்விரு வெளிநாட்டு எழுத்தாளர்களால்தான் இத்தகையோர் பாராளுமன்றம் சென்றனர். விடுதலைப் புலிகள்தான் பெரும்பாலானவர்களை சுட்டுக்கொன்றனர் எனக் கூறிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் போல செயற்படுகின்றவரும் அவரே. பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றும் விரைவில் வருவார் என வேறொருவர் தெரிவித்த ஒரு சில நாட்களுக்குள் திருகோணமலையில் 300இற்கு மேற்பட்டவர்களும், வேறு பலரும் கைது செய்யப்பட்டதும் அவரின் சிந்தனையற்ற பேச்சே இன்று பல்கலைகழக மாணவர்களும், வேறுபல அப்பாவிகளும் கைது செய்யப்படுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேரால் பலகோடி ரூபாய்களை பிறநாட்டில் சேகரித்து எந்த வகையில் செலவு செய்யப்பட்டது என்பது தெரியாத நிலை. அத்தகைய முன்சிந்தனையற்ற கூற்றுக்களால் ஏற்படும் குற்றம் குறைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி எத்தனை காலம் பங்கேற்க முடியும்? இது எமது கட்சிக்காரர் தினமும் கேட்கும் கேள்வியாகும். தமிழரசுக்கட்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்து பங்கேற்க முடியாது. நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தொடங்கி இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை நடந்தேறிய பல பேச்சுவார்த்தைகளில் ஒன்றிலாவது எம்முடன் ஆலோசனை நடத்தாத பட்சத்தில் தொடர்ந்து அவர்களுக்கு பல்லக்கு தூக்குவதா என்பதை அவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யுங்கள் என மக்களை வற்புறுத்தியவர்கள்தான் பதில் கூற வேண்டும்.
எது எப்படியிருப்பினும் எம்மை அவர்களது பல்லக்கு தூக்குபவர்களாக கணிக்காது இதயசுத்தியுடன் உண்மையை பேசி உழைக்க முழு ஒற்றுமையை தமிழ் தேசிய கூட்;டமைப்பிற்கு தொடர்ந்து வழங்க தமிழர் விடுதலைக்கூட்டணி தயாராக உள்ளது. தமிழரசுக்கட்சி தமது வெளிவராத உண்மைகளை மறவாது செயற்பட வேண்டுமென தந்தை செல்வாவின் ஆத்மா நிம்மதியின்றி அலைகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. எல்லா நேரமும் மக்களை ஏமாற்ற முடியாது. விரைவில் ஒருநாள் இந்த அனர்த்தங்களுக்கு பொறுப்பானவர்கள் தமது செயலுக்காக பெரும் இழப்புக்களை சந்திக்க வேண்டிவரும். எந்தவொரு தினசரியையும் நான் தனிப்பட்ட முறையில் குறைகூறவில்லை. ஊடகவியலாளர்களை பலிகொடுத்த அவர்களின் அச்ச உணர்வை கவனத்திலெடுக்க வேண்டும்.
பெரும்பான்மை மக்களை முறைப்படி உரிய உத்தரவாதங்களுடன் அணுகி அவர்களுக்கு ஏதும் ஐயமிருப்பின் அவ் ஐயத்தை போக்கக்கூடியதும், அவர்கள் ஏற்கக்கூடியதுமான இந்திய அரசியலமைப்பை ஏற்க வைக்க உதவுமாறு திரு. சம்பந்தன் அவர்களுக்கு ஆலோசனை கூற விரும்புகின்றேன்.
வணக்கம்
வீ.ஆனந்தசங்கரி
செயலாளர்-நாயகம்