1/27/2013

| |

நாங்கள் புலிகளுடன் இணைந்து வேலை செய்வோம். சுவிட்சர்லாந்தில் குமார் குணரட்ணம்.

ஜேவிபி யிலிருந்து பிரிந்து சென்று தனியாக கட்சி ஒன்றை தொடங்கியுள்ள குமார் குணரட்ணம் இன்று சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றை நடாத்தினார். அச்சந்திப்பில் தனது கட்சியின் கிளை அமைப்பான 'சம உரிமை இயக்கம்' தொடர்பான கொள்கை விளக்கம்இடம்பெற்றது. 

சந்திப்பில் கேள்வி நேரத்தின்போது ' ஜேவிபி யிலிருந்து குமார் குணரட்ணம் பிரிந்து சென்ற பின்னர் புலிகள் அமைப்புடன் நெருக்கமான உறவுகள் பேணப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக கேட்கப்பட்டதுடன், அவ்வமைப்பு தொடர்பான சம உரிமை இயக்கத்தின் நிலைப்பாடு என்ன எனவும் அவ்வமைப்புடன் இணைந்து செயற்படுவீர்களா?' எனவும் நபர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

கேள்விக்கு பதிலளித்த குமார் குணரட்ணம் : ' புலிகள் தமது அமைப்பை ஏற்றுக்கொண்டால் அவர்களுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம்' என தெரிவித்தார்.

சம உரிமை இயக்கம் இனவாதத்திற்கு எதிராக போராடுவதே தமது இலக்குகளில் ஒன்று எனத் தெரிவிக்கின்றது. மறுபுறத்தில் இலங்கையிலே சிங்கள , முஸ்லிம் மக்களை அவர்களது குடிமனைகளினுள்ளும் வணக்க ஸ்தலங்களினுள்ளும் புகுந்து படுபாதகமாக இனப்படுகொலைகளை மேற்கொண்டு இழிபுகழ் பெற்ற புலிகளியக்கம் சம உரிமை இயக்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுடன் இணைந்து செயற்பட சம்மதம் என்கின்றனர். அதாவது அது அப்பட்டமான இனவாத இயக்கமாக இருந்தாலும் சம உரிமை இயக்கதை ஏற்றுக்கொண்டுவிட்டால் அங்கு சம உரிமை எல்லாம் காற்றுடன் சங்கமித்துவிடும் என்கின்றார் குமார் குணரட்ணம்.

மேலும் 'நீங்கள் முக்கிய பங்காளியாக இருந்த ஜேவிபி இலங்கையிலே இனவாதத்திற்கு பெயர் போன அமைப்பாக உள்ளது. அவ்வியக்கத்திலிருந்து பிரிந்து வந்த பின்னர் இனவாதத்திற்கு எதிராக போராடப்போவதாக கூறுகின்றீர்கள், அவ்வியக்கம் இனவாதிகள் என்ற காரணத்திற்காகவா அவ்வியக்கத்திலிருந்து வெளியேறினீர்கள்' என்று கேள்வி எழுப்பப்பட்டபோது 'அதுவும் ஒரு காரணம்' எனப்பதிலளித்தார். 

நன்றி -இலங்கைநெற்