1/20/2013

| |

தமிழர்களின் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி, புனானை முதலிய தமிழர் எல்லைக் கிராமங்களை முஸ்லிம் பிரதேச செயலகங்களுடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வ அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவிபரம் கீழே தரப்பட்டுள்ளது.
அரசியல் இலாபங்களுக்காக சமூகங்களுக்கிடையில் இனவிரிசல் ஏற்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது
சமீபநாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் வகுப்பது தொடர்பில் சில இணக்கமற்ற தன்மைகளும் முரண்பாடுகளும் தோன்றி வருவதனை அவதானிக்க முடிகிறது. தமது சுயநல அரசியல் தேவைகளுக்காக இனங்களுக்கிடையில் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் ஈடுபடுவதனையும் இதனூடாக விரும்பத்தகாத மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு பாதகமான செயற்பாடுகள் நடந்தேறி வருவதையும் ஒரு பொறுப்பு மிக்க மக்கள் கட்சி என்ற வகையில் நாம் இதனை வன்மையாக கண்டிப்பதுடன் வேதனையும் அடைகின்றோம்.
நீண்டகாலமாக நடைபெற்ற யுத்தத்தினால் பலமாக இருந்த தமிழ் முஸ்லிம் சகோதர உறவுகள் சிதைக்கப்பட்டு ஒருவரை ஒருவர் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் கரும் பக்கங்களை எல்லாம் கடந்து வந்திருக்கின்றோம். ஒரே மொழி பேசி ஒரே மண்ணில் பன்நெடுங்காலமாக வாழ்ந்து வந்த தமிழ் முஸ்லிம் உறவுகளுக்கடையில் விரிசல் ஏற்படுத்தப்பட்ட அக்காலம் எமது இரு சமூகங்களின் வரலாற்றுப் பக்கங்களில் கரும்பக்கங்களாகும்.
அதிஸ்டவசமாக கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு அமைக்கப்பட்ட எமது கடசித் தலைமையிலான முதலாவது மாகாண சபையின் ஊடாக  வரலாற்றில் என்றும் இல்லாதவாறு பலப்படுத்தபட்ட தமிழ் முஸ்லிம் உறவை கட்டியெழுப்ப நாம் அடித்தளமிட்டோம். எமது கடசித் தலைவர் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களது நிருவாக காலப்பகுதியில் இனரீதியாக தனக்கு தீங்கிழைக்கப்பட்டதாகவோ அல்லது வஞ்சிக்கப்பட்டதாகவோ எம்மை நோக்கி  சுட்டு விரல்  நீட்ட எந்த முஸ்லிம் சகோதரனின் மனட்சாட்சியும் இடம் கொடுக்காது. அவ்வாறு அரும்பாடுபட்டு நாம் கட்டியெழுப்பிய இனநல்லுறவை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக சில சுயநல அரசியல்வாதிகள் சீர்குலைப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
புதிய தேர்தல் திருத்த விதிமுறைகளுக்கமைய நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்த்திற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான எல்லைகளை வகுப்பது தொடர்பில் மத்திய அரசு கவனமாகவும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும்.இதனை நாம் ஜனாதிபதியின் கவனத்திற்கும் பொருளாதார அபிவிருத்தி, பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர்களின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளோம்.
தமிழ் மக்கள் காலங்காலமாக பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளை முஸ்லிம் பிரதேசங்களுடன் இணைத்து தமிழ் மக்களை சிறுபான்மையாக்குவதையோ, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளை தமிழ் பிரதேசங்களுடன் இணைத்து முஸ்லிம்களை சிறுபான்மைகளாக்குவதiயோ விடுத்து, ஒரு சமூகத்தின் இனப்பரம்பல் தனித்துவம் பாதிக்காத வகையில் இவ் எல்லைகள் வகுக்கப்பட வேண்டும். அதில் அரசியல் தலையீடுகளோ அழுத்தங்களோ இருக்கக் கூடாது. அனைத்து முஸ்லிம் கட்சிகளும் அரசுடன் இணைந்து அமைச்சர்களாக இருக்கின்றார்கள் என்பதற்காக அரசியல் அழுத்தங்களின் ஊடாக தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் தனித்துவங்கள் மற்றும் எல்லைகள் பறிக்கப்படுவதனை நாம் ஒரபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ் எல்லைகள் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படாத நிலையில், அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக தமிழ் முஸ்லிம் மக்கள் இனமுரன்பாடுகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது. இது தொடர்பில் எமது கட்சித் தலைமை அரச தரப்புடனும் குறித்த அமைச்சர்களுடனும் ஏற்கனவே கலந்துரையாடி  உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் விரிவாக பேச்சுவார்த்தை நடாத்த உள்ளோம். நாம் எக்காரணம் கொண்டும் எமது மக்களின் எல்லை பறிக்கப்படுவதையோ, தனித்துவம் பாதிக்கப்படுவதனையோ ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
எனவே தமிழ் முஸ்லிம் மக்கள் தங்களுக்கிடையிலான புரிந்துணர்வை விட்டுக் கொடுக்காமல் இனவாத சுயநல அரசியல் வாதிகளது கருத்துக்களை நிராகரிக்க வேண்டும். இயல்பு வாழ்க்கை சீர்கெடாமலும் மட்டக்களப்பின் அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையிலும் நிதானமாக சிந்தித்து செயற்படுமாறு நாம் அன்பாக வேண்டுகின்றோம்.
பூ.பிரசாந்தன்
பொதுச் செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி