1/11/2013

| |

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவும்'

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  பூ.பிரசாந்தன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'தொடர்ந்து பெய்து வரும் அடைமழைக் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடையும் வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தம் காரணமாக பல பிரதேசங்களில் மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் உறவினர்களது வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இவர்களுக்கான உடனடி உதவிகளை பிரதேச செயலகம் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் நிதித் தேவைப்பாடு அதிகமாகவே உள்ளதாக உணர முடிகின்றது.
மட்டக்களப்பில் கடந்த 7ஆம் திகதி மாலை 4 மணி வரையான களநிலை அறிக்கையின்படி 158 கிராம சேவகர் பகுதிகளில் 38,177 குடும்பங்கள் 142,674 தனிநபர்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 40,983 குடும்பங்கள் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 6,098 குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவில் 345 கிராம சேவகர் பிரிவுகளிலும் அன்றாடம் தொழில்புரிந்து வாழ்வாதாரம் நடாத்திவரும் அனைவரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளமையினை கருத்திற்கொண்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதே சிறந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமானவர்கள் விவசாய, மீன்பிடி, சுயதொழில்களை நம்பி வாழ்பவர்கள். இவ்வாறான அனர்த்தங்களினால் இவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றது.  அத்தோடு இவர்களுக்கான நிவாரண சேவையும் உடனடியாக தேவைப்படுகின்றது.
எனவே மிக துரிதமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்'  என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும், கிழக்கு மாகாண சபை பிரதம செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.