1/01/2013

| |

கிழக்கிற்கு சென்ற கொள்ளைக் கும்பல் பொலநறுவையில் மாட்டியது.

நேற்று சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் திருமலை-மட்டக்களப்பு வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டினுள் நுழைந்த ஆயுதம் தாங்கிய கொள்ளைக் கோஷ்டியினர் வர்த்தகரை வெட்டிக்காயப்படுத்தி கொள்ளையிட்டு திரும்பும் வழியில் பொலநறுவை பொலிஸ் சோதனைச் சாவடியில் மாட்டிக்கொண்டுள்ளனர். 

எழுவர் கொண்ட மேற்படி கொள்ளைக் கோஷ்டியினர் குணரட்ணம் ஹரிதரன் என்ற வர்த்தகரின் வீட்டினுள் நுழைந்து அவர்களை அடித்து துன்புறுத்தி கட்டி வைத்துவிட்டு அங்கிருந்த பணம் நகை என்பவற்றை கொள்ளையிட்டு செல்லும் வழியிலேயே இவ்வாறு மாட்டியுள்ளனர். 

இவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூவரையும் தேடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் வலை விரித்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் யாவரும் வவுனியா மற்றும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் வெறும் கொள்ளைக் கோஷ்டியை சேர்ந்தவர்களா? முன்னாள் புலிகளா? வேறேதும் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்களா என்பது தொடர்பாகவும் பொலிஸார் விசாரைணையை முடுக்கியுள்ளனர். 

இவர்கள் கொள்ளையிட்டு விட்டு திரும்பும் வழியில் குறித்த வர்த்தகரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சகோதரன் கொள்ளையர்களின் வாகன நம்பரை குறித்து பொலிஸாருக்கு வழங்கியதை அடுத்து நாடுமுழுவதும் உசார் நிலையில் இருந்த பாதுகாப்பு பிரிவினர் பொலநறுவையிலுள்ள சோதனைச் சாவடி ஒன்றை குறித்த வாகனம் கடந்து செல்ல முற்பட்டபோது மாட்டியுள்ளது. இவர்களிடமிருந்து கொள்ளiயிடப்பட்ட பொருட்களில் ஒரு தொகுதி மீட்டுக்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.