10 அமைச்சர்கள்: 02 திட்ட அமைச்சர்கள்: 06 பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்
* 4 புதிய அமைச்சுக்கள் உருவாக்கம்
* ப'Pர் சேகுதாவு+துக்கு அமைச்சரவை அந்தஸ்து
* காதர், ஹிஸ்புல்லாஹ், பைஸர் முஸ்தபா உட்பட 6 பிரதி அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் பத்து அமைச்சர்களும், இரண்டு திட்ட அமைச்சர்களும், ஆறு பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பத்து அமைச்சர்களில் ஐவர் அமைச்சரவைக்கு புதியவர்களாவர்.
இதேநேரம், இந்த அமைச்சரவை மறுசீரமைப்பில் புதிதாக இரு திட்ட அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அமைச்சுக்களுக்குப் பொறுப்பானவர்களாக ஐ.ம.சு.முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பி.க்களான ரோஹித அபேகுணவர்தனவும், நிர்மல கொத்தலாவலவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதேவேளை, சீனிக்கைத்தொழில் அபிவிருத்தி, கல்வி சேவைகள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொதுப் பொழுதுபோக்கு, வன விலங்கு வளப் பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளுக்கும் புதிதாக நான்கு அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இதேநேரம் பிரதியமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஆறு பேரில் மூவர் முஸ்லிம்களாவர். அதேவேளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்களாக இந்த அமைச்சரவை மறுசீரமைப்பில் மூவர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
அமைச்சர்களான பiர் சேகுதாவூத், லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜயரட்ன ஹேரத், துமிந்த திஸாநாயக்க, காமினி விஜித் விஜயமுனி சொய்ஸா ஆகிய ஐவருமே அமைச்சரவைக்குப் புதியவர் களாவர்.
இந்த அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் ஏற்கனவே பெற்றோலிய கைத்தொழில் அமைச்சராகப் பதவி வகித்த சுசில் பிரேமஜயந்த் சுற்றாடல் மற்றும் மீள் சுழற்சி எரிசக்தி அமைச்சராகவும், சுற்றாடல் அமைச்சராகப் பதவி வகித்த அநுர பிரியதர்ஷன யாப்பா தற்போது பெற்றோலிய கைத்தொழில் அமைச்சராகவும் ஏற்கனவே மின்சக்தி, எரிசக்தி அமைச்சராகப் பதவி வகித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சராகவும், அவ்வமைச்சுப் பதவியை ஏற்கனவே வகித்த பவித்ராதேவி வன்னியாராச்சி மின்சக்தி, எரிசக்தி அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
ஏற்கனவே உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சராகப் பதவி வகித்த லக்ஷ்மன் செனவிரட்ன தற்போது சீனி கைத்தொழில் அமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.