கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்களால் எழுதப்பட்ட 'வெல்லாவெளி வரலாறும் பண்பாடும்' நூல் வெளியீடு 05.01.2013 சனிக்கிழமை மு.ப 9.30 மணிக்கு வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய கலையரங்கில், வித்தியாலய அதிபர் த.விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்றது.
வெல்லவூர் கோபால் நிதானமான பல்துறை ஆய்வாளர், பன்னூலாசிரியர், அவர் தனது நிதானமான தளத்தில் நின்றுகொண்டு, தான் பிறந்த ஊரை, தன்னை அடையாளப்படுத்திய ஊரை, அதன் இரத்தமும் சதையுமான வரலாற்றையும் பண்பாட்டையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
இந்நிகழ்வின் முதன்மை அதிதிகளாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன், கலாநிதி கோ.கோணேசபிள்ளை, கிழக்கு பல்கலைக் கழகத்தின் முன்னாள் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.மௌனகுரு, கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலைப் பீடாதிபதி பேராசிரியர் மா.செல்வராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மட்டக்களப்பின் தெற்கே, போரதீவுப் பற்று செயலகப்பிரிவின் முக்கிய மையப்புள்ளியாகத் திகழும் வெல்லாவெளிக் கிராமத்தை பறைசாற்றி நிக்கும் இந் நூலானது வரலாறு, வழிபாடும் பண்பாடும், பண்பாட்டுச் சொந்தக்காரர்கள் என மூன்று இயல்களைக் கொண்டமைந்துள்ளது.
இற்றைக்கு இரண்டாயிரத்து நூறு (2100) ஆண்டுகளுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை இங்கே காணப்படும் கற்சாசனங்களில் ஒன்றான குடைவரைக் கல்வெட்டினை ஆய்வு செய்து, ஆதாரப்படுத்தி, நூலாசிரியர் இந்நூலிலே பதிவு செய்துள்ளார். மேலும் தற்போதைய வெல்லாவெளி நாற்சந்தியை சூழவமைந்துள்ள பகுதியை உள்ளடக்கியதாக முன்னர் காணப்பட்ட 'நாதனை' யில் கோலாட்சி இடம்பெற்றதற்கான பல சான்றுகள் இந் நூலிலே உள்ளடக்கப்பட்டுள்ளன. "Vellavely is a small town in Batticaloa Distric" என விக்கிப்பீடியா இணையத் தளத்திலுள்ளதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 30 வருட காலமாக இவ் வெல்லாவெளிக் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் 16 தடவைகள் இடம்பெயர்ந்து. கிராமம் சின்னாபின்னமமாக சிதைக்கப்பட்டு தற்போது 25 குடும்பங்களோடு வெறிச்சோடிக் கிடக்கும் இக்கிராம நிலை கண்டு அவர் எழுதியுள்ள
' எங்கே எனது அழகிய கிராமம்
கண்டால் யாரும் சொல்லி விடுங்கள்
அல்லும் பகலும் கண்ணீர் மல்கச்
சில்லாண் டாகத் தேடி யலைகிறேன்...........'
எனத் தொடரும் கவிதை மெய்சிலிக்க வைக்கிறது.
கண்டால் யாரும் சொல்லி விடுங்கள்
அல்லும் பகலும் கண்ணீர் மல்கச்
சில்லாண் டாகத் தேடி யலைகிறேன்...........'
எனத் தொடரும் கவிதை மெய்சிலிக்க வைக்கிறது.
இந் நூலுக்கான வெளியீட்டுரையினை இறைவரித்திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் மு.கணேசராசா அவர்களாலும், ஆய்வுரை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் எஸ். மோசஸ் அவர்களாலும் நிகழ்த்தப்பட்டது.
இந்நூல் வெளியீட்டு நிகழ்விலே சிறப்பு அதிதிகளாக போரதிவுப்பற்று பிரதேசசெயலாளர் ந.வில்வரெத்தினம், இறைவரித்திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் மு.கணேசராசா,கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை விரிவுரையாளர் செல்வி. நிலாந்தி பொன்னுத்துரை, ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ம.தங்கையா, பாலம் வடிவமைப்புப் பிரிவு பொறியியலாளர் த.இராமச்சந்திரன் பட்டிருப்பு வலய ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.