12/04/2012

| |

அனைத்து தகுதிகளும் இருந்தும் சாதியின் பெயரால்வஞ்சிக்கப்படும் அதிபர் திருமதி. நவமணி சந்திரசேகரம்;

திரு. நடராஜா தமிழ் அழகன்

வடமாகாண இணைப்பாளர் - விஞ்ஞான அலுவல்கள் அமைச்சர்
இணைச் செயலாளர் – அ.இ.சி.த. மகாசபை

அண்மைக் காலமாக உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அதிபரை முடிவு செய்வது தொடர்பாக பல பிரச்சனைகள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் தரம் குறைந்த அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பாடசாலை சமூகத்தின் பெரும் பகுதியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற
அதேவேளை தகுதி உள்ளவர் சாதியத்தின் அடிப்படையில் நியமனம் பெறமுடியாது போன துர்ப்பாக்கிய செயல்களும் அரங்கேறியுள்ளது.

தற்போது உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு திருமதி.கௌரி சேதுராஜா நியமிக்கப்பட்டுள்ள போதும் இவரிற்கு அதிபர் தகுதி குறைவாகவே உள்ளதாகவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் திருமதி.நவமணி சந்திரசேகரம் அனைத்து தகுதிகளும் இருந்தும் தனக்கு ஏன் அதிபர் நியமனம் கிடைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இப் பிரச்சனையோடு அவர் என்னிடம் வந்த போது நான் உடனடியாக இப்பிரச்சனையை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இது குறித்து நாம் அவரிடம் கேள்வி எழுப்பிய போது கடந்த 16ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆளுநர்களுக்கான 15வது மகாநாடு இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும் கூட பெரும் முயற்சி எடுத்து ஆளுநரினடம் குறித்த பிரச்சனை பற்றி பேசி ஆளுநரை சந்திப்பதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டேன். இதன்படி கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஆளுநர் அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். அந் நேரத்தில் தற்செயலாக மாவட்ட கல்விப் பணிப்பாளர் திரு.செல்வராஜா அவர்களையும் சந்திக்க முடிந்தது. 

அதிபர் திருமதி. நவமணி சந்திரசேகரம்; அனைத்து தகுதிகளும் இருந்தும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாக இருந்தும் அவருக்கு நியமனம் வழங்க முன் வராதது குறித்து நான் கேள்வி எழுப்பிய போது ஓய்வுபெறுவதற்கு குறைந்தது 3 வருடங்கள் இருந்தால் மட்டுமே மாற்றம் பெற முடியும் என்று சுற்றறிக்கையில் உள்ளதாக முன்வைத்துள்ளார். ஆனால் வடமாகாண பாடசாலைகளின் அதிபர் இடமாற்றத்திற்கான சுற்றறிக்கையின் படி குறித்த அதிபர் விரும்பின் மாற்றம் செய்யலாம் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந் நேரத்தில் எதேர்ச்சையாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. சத்தியசீலன் அவர்களும் அங்கு வருகை தந்தார். இவர்களின் பதில்களில் திருப்தியின்மையால் இப் பிரச்சனையை ஆளுநருக்கு விளக்கிக் கூற முடிவெடுத்தேன்.

முன்னர் சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஓய்வு பெறுவதற்கு 3 வருடங்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி அதிபர் பதவியை கொடுக்க மறுத்த அதிகாரிகள் அதே சுற்றறிக்கையில் ஒரு பாடசாலையில் தொடர்ந்து 7வருடங்கள் சேவையாற்றிய அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது தெளிவாக சட்டமூலமாக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த அதிபர் இமையாணன் அரச தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராக கடந்த 1995ம் ஆண்டு முதல் இன்று வரை அதாவது 17வருடங்கள் அதிபராக இருந்தும் இடமாற்றம் செய்யப்படாதது ஏன்?.... 

அத்தோடு அதிபர்களை நியமிப்பதற்கு நேர்முகப் பரீட்சை பத்திரிகை விளம்பரம் என்பன செய்யப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள போதும் எந்தவிதமான பத்திரிகை விளம்பரங்களோ நேர்முகப் பரீட்சைகளோ இன்றி ஒரு அதிபர் நியமிக்கப்பட்டது எப்படி?

அத்தோடு அதிபர் நியமனம் பெறமுடியாமல் இருக்கும் திருமதி. நவமணி சந்திரசேகரம் அவர்கள் தகுதியுடையவரே என்பதற்கான சான்றுகள் பின்வருமாறு.

உடுப்பிட்டி நாவலர் சனசமூகத்தைச் சேர்ந்த இவர் 1978ம் ஆண்டு தனது ஆசிரியர் பணியை இமையாணன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக ஆரம்பித்தவர். அதன்பின் 1982-1989 வேறு பாடசாலைகளில் பணியாற்றி பின் 1989ம் ஆண்டு மீண்டும் இமையாணன் அரச தமிழ் கலவன் பாடசாலைக்கு வந்தார்.

பின்னர் 1993ம் ஆண்டு உப அதிபராக பதவியுயர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து 1995ம் ஆண்டு 4ம் மாதம் 17ம் திகதியிலிருந்து அதே பாடசாலையில் அதிபர் நியமனம் பெற்றார். அத்துடன் 1997ல் அதிபர் தரம் 2-1 இனை பெற்றுள்ளார். அதன் பின் 2004ம் ஆண்டு அதிபர் தரம் 1 இனை பெற்றுள்ளார். 

கல்வி மாணிப்பட்டத்தை 1.3.2010ல் பெற்றுக் கொண்டார். 2010 ஆம் ஆண்டு வெற்றிடம் வந்தவுடன் தனது விருப்பத்தையும் விண்ணப்பத்தையும் தெரிவித்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் இவரை நேர்முகத்தேர்விற்கு அழைக்கவில்லை. அங்கிருந்த உதவி அதிபரை 'performing Principal' ஆக நியமித்தார்கள். அதிகாரிகள் இவரை நேர்முகத்தேர்விற்கு அழைத்திருந்தால் திருமதி நவமணி சந்திரசேகரம் அவர்களுக்கு 4 வருட சேவை இருந்திருக்கும். இது வடமராட்சி வலய பணிப்பாளர் திரு. செல்வராஜாவின் திட்டமிட்ட புறக்கணிப்பாகும். 

அதேவேளை தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் திருமதி.கௌரி சேதுராஜா வின் தகுதிகள் பின்வருமாறு. இவர் உடுப்பிட்டி மெதடிஸ் கல்லூரியின் பகுதித் தலைவராக கடமையாற்றியவர். இவருக்கு அண்மையில் தான் அதிபர் தரம் 2-2 கிடைக்கப் பெற்றுள்ளது என்பதோடு அதிபராக சேவையாற்றிய அனுபவம் இவருக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் முதன் முதல் அதிபராக பதவி ஏற்கும் இவருக்கு 1AB தரம் உள்ள பாடசாலை கிடைத்திருப்பது எப்படி?

இப்படி பலவகைப்பட்ட சட்டத்திற்கு புரள்வான செயற்பாடுகள் நடைபெற்றிருப்பதை அறிந்தபின்பே இதற்குள் அரசியல் தலையீடு இடம்பெற்றது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

அதிபர் இடமாற்றத்திற்கான சுற்றறிக்கையின் பிரகாரம் திருமதி. கௌரி சேதுராஜாவிற்கு இரு தகுதிகள் தான் உள்ளன. அவையாவன அவரின் சேவைக்காலமும் பட்டதாரியும். ஆனால் 
திருமதி. நவமணி சந்திரசேகரம் 3 வருட சேவைக்காலத்திற்கு பதிலாக இன்னும் 20 மாதங்கள் உள்ளன. இதைத் தவிர மற்ற எல்லா தகுதிகளும் உள்ளன.

செய்யவேண்டிய வேலைகளை குறித்த நேரத்தில் சரியாக செய்து முடிக்காத அலட்சியப்போக்கும் இப்போதும் சாதியத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு திரியும் அசமந்தப்போக்கு மட்டுமே எனது அரசியல் தலையீட்டிற்கு காரணம். அது மட்டுமல்லாது அரசியல் வாதிகள் சுயநல வாதிகள் என்ற போக்கே மக்கள் மத்தியில் காணப்படுகின்ற போது நாம் பொது நலத்திற்காக செய்கின்ற செயல்களும் ஒரே கண்ணோட்டத்தில் நோக்கப்படுகின்றது. அதிகாரிகள் தமது கடமைகளை சரியாக நியாயமான முறையில் செய்யுமிடத்து எமது அரசியல் தலையீடுகள் ஒரு போதும் ஏற்படப் போவதில்லை. நாம் தலையிட்டு பிரச்சனைகளை தீர்த்து வைத்த பின் அரசியல் தலையீடு அதிகார ஆதிக்கம் என்றெல்லாம் அரசியல் வாதிகளை குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இருக்காது. எது எப்படி இருப்பினும் இந்தக் காலத்திலும் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்ற ஒரு நிலை துர்ப்பாக்கியமானதே.. இருப்பினும் தகுதியுடைய ஒரு அதிபருக்கு உரிய பதவி கிடைக்கப் பெறுவதில் சாதியம் எந்த வகையிலும் தலையீடு செய்ய முடியாது.

இறுதியாக எனது ஆளுநரின் சந்திப்பில் ஆளுநர் அவர்கள் திரு.சத்தியசீலனை அழைத்து திருமதி. நவமணி சந்திரசேகரத்தை 23.11.2012 ற்கு முன்னர் அவரை நியமிக்கும் படி கூறியிருந்தார். அப்படி இருந்தும் இதுவரை திரு.சத்தியசீலன் அவர்கள் நியமிக்கவில்லை. 

எனவே மக்களே இன்று ஆளுநர் ஒரு சிங்கள இனத்தவராக இருந்து எம் குறைகளை நிவர்த்தி செய்கையிலும் இந்த ஆதிக்க சக்தியாளர்கள் வழிவிடுவதாகத் தெரியவில்லை. எனவே இவர்கள் கையில் முழு அதிகாரங்களும் வந்தால் எமது சமூகக் குறைபாடுகளையும் சமூக நீதிகளையும் யார் தீர்த்து வைப்பார். இந்தப் போராட்டம் தொடரும் மக்களின் பூரண ஒத்துழைப்புடன்.....
நன்றி