தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் மேச்சேரி அருகே செங்காட்டூர் பிரிவு என்ற இடத்தில், பட்டாசு தயாரிக்கும் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (25.12.12) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் ஏழு பேர் அடங்கலாக எட்டு பேர் உயிரிழந்தனர்.
உரிமம் பெற்று பட்டாசு தயாரிக்கும் அந்த ஆலையில், வானவெடிகள் உள்பட திருவிழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
இன்று, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சாந்தியும் அவர்களது உறவினர்கள் சிலரும், அவர்களது குழந்தைகள் உள்ளிட்டோரும் பட்டாசு உற்பத்திக் கூடத்தில் இருந்தனர். பிற்பகல் 2 மணியளவில், பட்டாசு தயாரிக்கும்போது திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. அதில், அங்கிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.காயமடைந்த அனைவரும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், சாந்தி உள்பட நான்கு பெண்களும், சிறுவன் ஒருவனும் உயிரிழந்துவிட்டனர்.
மேலும் காயடமடைந்த ஏழு பேர் சிகிச்சை பெற்று வருவதாக சேலம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்டீஸ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் சிவகாசியில் ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாவதென்பது தொடர்கதையாகவே உள்ளது.