அண்மைக்காலமாக யாழ் மண்ணில் சர்ச்சைக்குரிய விடயமாகப் பேசப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அதிபர் நியமனம் என்னால் (நடராஜா தமிழ் அழகன்) வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையில் ஆளுநர் அவர்கள் குறித்த அதிபருக்கு உடனடி நியமனம் வழங்க பணிப்புரை விடுத்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதவிடத்து நான் அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு இப் பிரச்சனை பற்றிய விளக்கங்களையும் நடந்த உண்மைகளைப் பற்றியும் ஓர் அறிக்கையை அனுப்பியிருந்தேன். இது அனுப்பப்பட்டு பல நாட்களாகியும் எந்த ஒரு யாழ் ஊடகமும் இதனை கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. ஒரு சில இலத்திரனியல் ஊடகங்கள் மட்டுமே எனது செய்தியை வெளியிட்டுள்ளன அவர்களுக்கு நன்றிகள். ஏனைய ஊடகங்களுக்கு நாம் தொடர்பு கொண்டு வினவிய போது அவர்கள் எமக்கு அளித்த பதில் பொறுப்பற்றதாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததுமாக இருந்தன.
அதாவது இது சாதியத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனையாக இருப்பதால் இதனை வெளியிடுவதால் பிரச்சனைகள் பெரியதாகிவிடும் என்றும் யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சனை முடிவுற்ற நிலையில் இதை பிரசுரிப்பது மீண்டும் எமது மக்களுக்கு சாதியத்தை நினைவுபடுத்துவதாக அமைந்துவிடும் என்றும் கூறினார்கள். நான் உங்களிடமே கேட்கின்றேன் நீங்கள் என்ன முடிவு சொல்கிறீர்கள் உண்மையிலேயே யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சனை ஓய்ந்திருந்தால் குறித்த பிரச்சனை எப்படி வந்தது? சரி அது போக இப்படி ஒரு பிரச்சனை நடைபெற்றது. இறுதியில் அதன் முடிவு இதுவே என்பவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டிய கடமை ஊடகங்களுக்கு இல்லையா?
அத்தோடு சாதாரணமாக ஓர் ஆணும் பெண்ணும் ஓர் இடத்தில் பேசிக் கொண்டிருப்பதை படம் பிடித்து கலாசாரம் சீரழிகின்றது என்றும் சாதாரண செய்கைகளுக்குக் கூட கவர்ச்சி மிக்க பூதாகாரமான தலைப்புக்களையும் படங்களையும் வெளியிடும் ஊடகங்கள் உண்மையிலேயே யாழ்ப்பாணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்தப் புற்று நோயை சாதாரணமாக எடுத்துக்கொள்வது ஏன் என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.
அத்தோடு ஆளுநர் அவர்களால் உடனடியாக குறித்த அதிபருக்கு நியமனம் வழங்க பணிப்புரை விடுக்கப்பட்டும் இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை. அப்படியாயின் ஆளுநரின் கட்டளையைக் கூட எமது அதிகாரிகள் மதிப்பதாக இல்லை. ஒட்டு மொத்தத்தில் என்னைப் பொறுத்தவரை யாழின் சீரழிவிற்கு யார் காரணம் என்கின்ற போது பொறுப்பற்ற ஊடகங்கள் தானோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஏனென்றால் விழிப்புணர்வு விழிப்புணர்வு என்று வெளியே பேசிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் கூட உண்மையிலேயே விழிப்புணர்வு தேவைப்படும் விடயங்களை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனவே. எது எப்படி இருப்பினும் சாதியம் என்கின்ற வெறித்தனம் அடங்கும் வரை எமது சமுகத்தை யாராலும் கட்டி எழுப்ப முடியாது.