12/06/2012

| |

நீதிபதி வாகனத்தில் தடைசெய்யப்பட்ட மருந்து பாட்டில்கள்

தடைசெய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்கள் நூற்றுக்கணக்கானவற்றை கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வங்கதேச நீதிபதி ஒருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
ஓப்பியம் என்ற போதை வஸ்திலிருந்து தயாரிக்கப்படும் கோடீன் என்ற இரசாயனம் அடங்கிய ஃபென்ஸெடில் என்ற இந்த இருமல் மருந்து வங்கதேசத்தில் பரவலாக போதை தரும் ஒரு பானமாக பயன்படுத்தப்பட்டு வந்ததால் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
துணை நீதிபதி ஜாவேத் இமாம் செல்லும் வாகனத்தில் இந்த மருந்து கடத்தப்படுவதாக துப்பு கிடைத்ததை அடுத்து, பொலிசார் அவ்வாகனத்தை மறித்து சோதனையிட்டதில் சுமார் 340 இருமல் மருந்து பாட்டில்கள் ஒரு பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
தெரிந்தவர் ஒருவருக்காக இந்த பாட்டில்களை தான் கொண்டு சென்றதாக நீதிபதி ஒப்புக்கொண்டுள்ளார் என பொலிசார் கூறுகின்றனர்.
இந்த வேலைக்காக நீதிபதிக்கு 1200 டாலர்கள் பணம் கிடைத்திருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தடைசெய்யப்பட்ட மருந்தை கடத்தியதாக நீதிபதி மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அவரது குடும்பம் மறுக்கிறது.

இருமல் மருந்தா, போதை மருந்தா?

முஸ்லிம் நாடான வங்கதேசத்தில் முஸ்லிம்கள் மது அருந்துவதற்கு பொதுவாக அனுமதி கிடையாது என்ற நிலையில், மதுவுக்கும் போதை மருந்துக்கும் பதிலாக இந்த இருமல் மருந்தை ஆட்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த இருமல் மருந்தை மது போல அருந்தினால், கல்லீரலும், நரம்பு மண்டலமும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், தொடர்ந்து பயன்படுத்தினால் மரணமும் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வங்கதேசத்தில் ஃபென்ஸெடிலை தவறாக பயன்படுத்தும் பிரச்சினை மிகவும் பரவலாகவே 1980களின் ஆரம்பத்திலேயே இந்த மருந்துக்கு அந்நாடு தடை விதித்திருந்தது.
ஆனால் பெரும்பாலும் அண்டை நாடான இந்தியாவிலிருந்து இந்த மருந்து வங்கதேசத்துக்குள் பெரும் எண்ணிக்கைகளில் கடத்தப்பட்டு வருவது நீடிக்கிறது.
வங்கதேசத்துடனான இந்திய எல்லையில் நிறைய சட்டவிரோத தொழிற்சாலைகள் இந்த இருமல் மருந்தை தயாரிக்கின்றன என்றும் வங்கதேச அதிகாரிகள் கூறூகின்றனர்.
-BBC