கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் நீளமான காற்சட்டை அணிவதற்கும், வைத்தியசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் இஸ்லாமிய ஆடையை அணிவற்கும் கிழக்கு மாகாணசபை அங்கீகரித்து அனுமதியளிக்குமாறு காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதியடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பான வேண்டுகோள் கடிதமொன்றை காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அக்டிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகள் தற்போது கட்டை சட்டை அணிந்து செல்கின்றனர்.
இது இஸ்லாமிய பார்வையில் இஸ்லாமிய பெண்களுக்கான ஆடை ஒழுங்கில் பிழையானதாகும் என்பதுடன் மாணவிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இதனால் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகள் நீளமான காற்சட்டை அணிந்து பாடசாலைக்கு செல்வதற்கு கிழக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றி அதற்கான அங்கீகாரத்தையும் அனுமதியையும் வழங்குமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்.
அத்தோடு கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் தாதியர்கள் மற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்களும் கட்டையான வெள்ளை சட்டை அணிந்தே தமது கடமைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் இஸ்லாமிய மார்க்க ரீதியான ஆடை ஓழுங்கு மீறப்படுகின்றது.
வைத்தியசாலைகளில் முஸ்லிம் பெண்கள் கட்டையான வெள்ளை சட்டை அணிந்தே கடமையாற்ற வேண்டுமென்பதற்காக எத்தனையோ முஸ்லிம் பெண்கள் தமது வேலையைக் கூட விட்டு விட்டு சென்றுள்ளனர். எனவே இதுவும் முஸ்லிம் பெண்களை பாதிக்கும் விடயமாகும்.
ஆகவே கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான ஆடைகளை அணிவதற்கும் கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு அங்கீகாரத்தையும் அனுமதியையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கடிதத்தின் பிரதிகள் கிழக்க மாகாண சுகாதார,இளைஞர் விவகார, சிறுவர் பராமரிப்பு நன்நடத்தை அமைச்சா. எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண விவசாய அபிவிருத்தி கால்நடை, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.