“பல்கலைக்கழக மாணவர்களின் இரத்தத்தை சூடேற்றி அரசியல் இலாபம் தேட வேண்டாம்”
கூட்டமைப்பினருக்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சுதந்திரமாகப் படிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்கவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பெற்றோர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் இரத்தங்களைச் சூடேற்றி அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடக் கூட்டமைப்பு முயற்சிக்கக் கூடாது. எமது பிள்ளைகள் சுதந்திரமாகப் படிப்பதற்கு கூட்டமைப்பு இடமளிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். நேற்று முற்பகல் 10 மணிக்கு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ-9 வீதியில் இரு மருங்கிலும் இருவேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் மாணவர்களின் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழ் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி பிரதேச மக்களும், பெற்றோரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை வீதியின் இரு மருங்கிலும் நடத்தியிருந்தனர்.
‘சிறிதரன் ஐயா எங்கள் பிள்ளைகளைப் பல்கலைக்கழகம் செல்லவிடாது பிள்ளை பிடிகாரர் பிடித்தபோது எங்கே போனீர்கள்?, எங்கள் பிள்ளைகள் மண்ணின் மடியில் உங்கள் பிள்ளைகள் மாடி வீட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே படிக்கவிடு படிக்கவிடு எங்கள் பிள்ளைகளைப் படி க்கவிடு, மாவை அய்யா இளம் இரத்தங் களைச் சூடேற்றிவிட்டு இந்தியாவில் போய் நீங்கள் ஒளிந்ததை நாம் மறக்க வில்லை, விக்ரமபாகு ஐய்யா வெளிநாட்டுப் பணயத்திற்கு விசுவாசமா? நாங்கள் முள்ளிவாய்க்காலில் இருந்தபோது நீங் கள் எங்கிருந்தீர்கள்?’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட் டக்காரர்கள் கூட்டமைப்பினருக்கு எதிரான தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.