காத்தான்குடி நகர சபையின் முப்பெரும் எழச்சி விழா வெள்ளிக்கிழமை (21.12.2012) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி நகரசபை 2010, 2011ஆம் ஆண்டுகளில் உள்ளூராட்சி செயலாற்றுகை திறன் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டமைக்காகவும் காத்தான்குடி நகர சபையை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டும் உள்ளூராட்சி வார நிகழ்வுகளை முன்னிட்டும் இந்த முப்பெரும் எழுச்சி விழா கொண்டாடப்பட்டது.
காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சத்தியானந்தி, காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் உட்பட நகர சபை உறுப்பினர்கள், முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 'எழுச்சிக் கதிர்' எனும் சிறப்பு மலர் வெளியிடப்பட்டதுடன் சாதணையாளர்கள் மற்றும் அதிதிகளுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.