யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடந்த நிகழ்வுகளுக்கு பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை அறிய ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தாம் இலங்கை ஜனாதிபதியிடம் கோரியிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்தார்.
சுமூகமாக இருக்கும் நிலைமையை தமிழ் தரப்பில் இருந்து சரிவரக் கையாளவில்லை என்ற ஒரு நடைமுறை அனுபவம் நமக்கு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.எவரும் தமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமானால், தமது சொந்த வீடுகளில் அல்லது நிறுவனங்களில் விளக்குகளை ஏற்றி முன்மாதிரியாக செயற்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய அவர், தமிழ் அரசியல்வாதிகள் மாணவர்களை பின்னால் இருந்து தூண்டி விடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அப்பாவி மாணவர்களின் உணர்வுகளை அவர்கள் தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களிலும் இதுதான் நடந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.
''ஆகவே இந்த விடயங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும்'' என்றார் அமைச்சர் டக்ளஸ்.
ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் சுதந்திரம் இருக்கின்றது என்கின்ற போதிலும், அவற்றை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும், அப்பாவி மாணவர்கள் சிலரது சுயலாப அரசியலுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.