12/04/2012

| |

வடகொரிய ரொக்கெட்டை சுட்டு வீழ்த்த ஏவுகணை பாதுகாப்பு முறையை நிறுவுகிறது ஜப்பான்

வடகொரியா விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ள ரொக்கெட் தமது எல்லைக்குள் வந்தால் சுட்டு வீழ்த்த ஜப்பான் ஏவுகணை எதிர்ப்பு முறையை தயார் செய்துள்ளது.
செய்மதியை நிறுவுவதற்காக எதிர்வரும் 10ம் திகதி முதல் 22ம் திகதிக்குள் ரொக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் வட கொரியாவின் ரொக்கெட் ஏவும் திட்டம் தோல்வி அடைந்த நிலையிலேயே அது மீண்டும் ஒரு முறை அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ஆனால் இதன் மூலம் வட கொரியா ஐ.நா.வின் தடையை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை மேற்கொள்ள முயற்சிப்பதாக அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் கடலில் இருந்து வானைத் தாக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறையை தமது கடற்பகுதியில் நிறுவ ஆரம்பித்துள் ளதோடு, தமது இராணுவத்தையும் உஷார்படுத்தியுள்ளது.
இதற்காக ஜப்பான் கப்பற்படையின் படகுகள் மூலம் பி.ஏ.சி. 3 எனும் மேம்படுத்தப்பட்ட பஸ்டிக் ஏவுகணைகளை மேற்கு ஜப்பானில் இருக்கும் கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஜப்பானின் என். எச். கே. தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டது. ஏற்கனவே ரொக்கெட் ஏவுதளங்களை தயார் செய்யும்படி ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சதொஷி மொரிமொடோ கடந்த சனிக்கிழமை இராணுவத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இதில் ஜப்பானின் தென்பகுதி தீவான ஒகினாவாவுக்கு தமது கடற்படை, விமானப் படை வீரர்களை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சின் பேச்சாளர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். இது தவிர ஜப்பான் தனது யுத்த கப்பலையும் வட கொரியாவை அண்மித்த கடற்பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் வடகொரிய ரொக்கெட் தமது எல்லைக்குள் வந்தால் சுட்டு வீழ்த்துவதற்கான உத்தரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் பிறப்பிக்க ஜப்பான் அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கான அவசர கூட்டம் பிரதமர் யொஷிஹிகொ நொடா தலைமையில் இடம்பெறவுள்ளதாக ‘நிக்கெஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே வடகொரியாவின் ரொக்கெட் ஏவும் திட்டத்தை நிறுத்தும்படி ரஷ்யாவும் சீனாவும் அழுத்தம் கொடுத்துள்ளன. வட கொரியாவின் இந்த முயற்சி ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தடையை மீறும் செயல் என ரஷ்யாக கூறியுள்ளது. எனினும் வட கொரியாவுடன் நெருங்கிய உறவை பேணும் சீனா இந்த திட்டத்தை நிறுத்தும்படி நேரடியாக வலியுறுத்த வில்லை. ஆனால் இதன் மூலம் பிரச்சினை மேலும் மோசமடையும் என எச்சரித்துள்ளது.