12/20/2012

| |

இலங்கை மீண்டும் ஆசியாவின் நெற்களஞ்சியமாக மாறும்

லங்கையை மீண்டும் ஒரு தடவை ஆசியாவின் நெற்களஞ்சியமாக மாற்றும் முயற்சியில் அரசாங்கம் இன்று வீறுநடை போட்டுக் கொண்டி ருக்கிறது. எங்கள் நாட்டில் சுமார் 20 இலட்சம் குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்ள நெற்காணி களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை சிறிய துண்டுகளாக தனிப்பட்ட மக்களுக்கு சொந்தமாக இருக்கின்றது. அவர்களில் பலர் ஒரு ஹெக்டே யருக்கும் குறைந்த நெற்காணிகளுக்கே சொந்தக்காரர்களாக இருக்கின் றார்கள். இலங்கையில் நெற்செய்கை, பெரும்பாலும் கிராமப்பிரதேசங்க ளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
1950ம் ஆண்டில் நெல் உற்பத்தியின் மூலம் 51.1 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 2010ம் ஆண்டில் 12 சதவீதமாக வீழ்ச்சியடைந்தி ருக்கிறது. தனியார் துறையிலும், அரசாங்க சேவை யிலும் உயர்பதவி பெறவேண்டுமென்ற இளம் சந்ததியினரின் மோகமே இதற்குக் காரணமாக இருக்கிறது. 1950 தசாப்தம் வரையில் எங்கள் நாட்டின் விவசாயப் பெருமக்கள் பல தலைமுறைகளாக விவசாயத்தையே பரம்பரைத்தொழிலாக நடத்தி வந் தார்கள். ஆனால், இன்றைய நாகரீக மோகம் விவசாயத்தை பின்னடைய செய்வதாக அமைந்துள்ளது. இன்றும் கூட கிராமப்புறங்களில் 70 முதல் 80 சதவீதமான காணிகளில் நெற்சாகுபடி செய்யப்படுகின்றன.
பண்டைக்காலத்தில் இலங்கை அரசர்கள் நெல்லையும், அரிசியையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், தென்கிழக்கு நாடுகளுக்கும் பெருமளவில் ஏற்று மதி செய்தார்கள். அதனால் தான் ஆசியாவின் நெற்களஞ்சியசாலை என்ற பெருமை இலங்கைக்கு கிடைத்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. விவசாயிகள் பல்வேறு காரணங்களை முன்வைத்து விவ சாயத்தை கைவிடுவதும் வெளிநாடுகளில் இருந்து அளவுக்கு அதிகமாக அரிசியை இறக்குமதி செய்வதும் இந்த நிலைமைக்கு இன்னுமொரு காரணமாகும்.
1952ம் ஆண்டில் இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது எமது அயல் நாடுகளில் ஒன்றான சீனா, இலங்கைக்கு தேவையான அரிசியை கட்டுப்பாடின்றி ஏற்றுமதி செய்தது. இதனால் அன்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் விவசாயத்துறை அமைச்சராக இருந்த ஆர்.ஜி. சேனநாயக்க, சீனாவில் இருந்து கொள் வனவு செய்யும் அரிசிக்கு பணம் செலுத்தும் கஷ்ட நிலை இருந்தமையால் அரிசி - இறப்பர் பண்டமாற்று ஒப்பந்தமொன்றை செய்து சீனாவில் இருந்து வரும் அரிசிக்கு பெறுமதியான இறப்பரை ஏற்றுமதி செய்தார்.
அன்றைய காலகட்டத்தில் இனப்பிரச்சினையோ, பயங்கரவாதமோ எங்கள் நாட்டில் இருக்கவில்லை. நாட்டு மக்கள் அனைவரும் இன, மொழி, சாதி, மத, குல, பிரதேச பேதமின்றி ஒரு தாய் பிள் ளைகளைப் போன்று ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். 1952ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையில் அரசாங்கங்களை தோல்விய டையச் செய்யும் படுபயங்கரமான ஆயுதமாக அரிசி விளங்கியது. மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அன்று ஒரு கொத்து அரிசி 25 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கும் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் வந்தமையால் அன்றைய பிரதமமந்திரி டட்லி சேனநாயக்க ஒரு கிலோ அரிசியை இலவசமாக வழங்கினார்.
1970ம் ஆண்டு தசாப்தத்தில் திருமதி பண்டாரநாயக்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டில் அரிசி பற்றாக்குறையை தீர்ப்பதற்காக வாரத்திற்கு இரண்டு நாட்கள் பொது இடங்களிலும், ஹோட்டல்களிலும் மரவள்ளி க்கிழங்கு, சீனிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளையே உணவாக எடுக்க வேண்டுமென்ற கட்டுப்பாட்டு விதிமுறையை ஏற்படுத்தினார். ஒருவர் 2 கிலோவுக்கு கூடுதலாக அரிசியை எடுத்துச் செல்வதற்கு அன்றைய அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்த நடைமுறையை மக்கள் அன்று அரிசிப் பொல்லு சட்டம் என்று ஏளனம் செய்தார்கள்.
இன்று மீண்டும் இலங்கையில் பசுமைப் புரட்சி சிறப்பாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதற்கு தன்னுடைய சிறந்த தலை மைத்துவத்தை வழங்கிவரும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரை யின் கீழ் விவசாயிகளுக்கு மானிய முறையில் உரத்தை விநி யோகம் செய்து வருகிறார்.
பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர் கள் விவசாயிகளுக்கு இலகு கடன் அடிப்படையில் இரண்டு, நான்கு சக்கர உழவு இயந்திரங்களையும், நீர்பாய்ச்சும் இயந்திரங் களையும், விவசாயி களுக்குரிய பொருட்களையும் நாடெங்கிலும் குறிப்பாக வடபகுதியில் நெற்காணி அதிகமாக உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் விநியோகித்து வருகிறார்.
பயங்கரவாத யுத்தத்தில் வெற்றிக்கொடி நாட்டிய எங்கள் அரசாங்கம் இப்போது பொருளாதார யுத்தத்திலும் வீறுநடை போட்டுக் கொண்டிரு க்கிறது. இதனால் நாட்டில் உள்ள கிராமிய பொருளாதாரம் வளர்ச்சிய டைந்துள்ளது. மஹிந்த சிந்தனை எண்ணக்கருவுக்கு அமைய எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை 8 சதவீதத்திற்கு கூடுதலாக வளர்ச்சியடையச் செய்வ தன் மூலம் தனிநபர் வருமானத்தை 2014ம் ஆண்டில் வருடத்திற்கு 4,000 அமெரிக்க டொலராக உயர்த்தும் திட்டம் வெற்றிகரமாக நிறைவுபெறும் என்று நாம் அசையாத நம்பிக்கை கொள்ளலாம்.