கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலையால்; இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டம் நேற்று வெள்ளிக்கிழமையிலிருந்து வழமைக்கு திரும்பிவருகின்றது.
மழை குறைவடைந்து வெள்ளம் வடிந்தோட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்புகின்றனர்.
வெள்ளத்தால் மன்னம்பிட்டியூடாக மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்வதற்கான பாதையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகலிலிருந்து இதனூடான போக்குவரத்து இடம்பெற்றுவருகின்றது. அத்துடன், மட்டக்களப்புக்கும் படுவான்கரைக்குமிடையில் துண்டிக்கப்பட்டிருந்த போக்குவரத்தும் பட்டிருப்பு பாலம், வவுணதீவு பாலம், மண்டூர் கோஸ்வே ஆகியவற்றின் ஊடான போக்குவரத்துக்களும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் பணிச்சங்கேணிப் பாலம் நிர்மாணிக்கப்படுவதால் அப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் பயன்படுத்தப்பட்டுவந்தது. இப்பாலம் வெள்ளத்தால் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், பிரயாணிகள் பாதுகாப்பாக ஆற்றைக் கடந்து செல்வதற்கான வேலைத்திட்டத்தினை இலங்கை இராணுவத்தினரும் கடற்படையினரும் செய்து வருகின்றனர்.