பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்
சாத்திரி
சாத்திரி
நவம்பர் 8ந் திகதி வியாழக் கிழைமை இரவு 9.30 தை தாண்டிய நேரம் பாரிஸ் 20 ல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் இந்த வருட மாவீரர் நாள் பற்றிய ஏற்பாட்டு விவாதங்களை முடித்து விட்டு நான்கு பேர் அலுவலகத்தை விட்டு வெளியே வருகிறார்கள்.அந்த நான்கு பேரில் மேக்தாவும் மாஸ்ரரும் வீதியால் நேராக நடந்து செல்ல பரிதியும் பார்த்திபனும் வீதியைக் கடந்து அலுவலகத்திற்கு எதிரேயிருந்த பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சிற்காக காத்திருக்கிறார்கள். பஸ் நிலையத்தில் வேறு பல வேற்று நாட்டவரும் பஸ்சிற்காக காத்திருந்த வேளை திடீரென ஒரு வெடிச்சத்தத்தோடு பஸ் நிலையத்தின் பின்புற கண்ணாடி உடைந்து நொருங்குகின்றது.எதற்காக கண்ணாடி உடைந்திருக்கலாமென பரிதி உட்பட அனைவரும் திடிக்கிட்டு பார்த்தபொழுது அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடுகள் பரிதியின் மார்பிலும் வயிற்றிலும் விழுகின்றது.பார்திபன் என்பவர் வீதியை கடந்து ஓடிப்போய் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார்களிற்கு பின்னால் ஒழிந்து கொள்ள மற்றையவர்கள் பயத்தில் கண்களை பொத்திக்கொள்கிறார்கள். கொலையாளி அருகில் வந்து பரிதிஇறந்து விட்டதை உறுதிசெய்து விட்டு தயாராய் ஒருவன் இயக்கிக்கொண்டிருந்த ஸ்கூட்டரில் ஓடிப்போய் ஏற ஸ்கூட்டர் அந்த இடத்தை விட்டு மறைந்து விடுகின்றது. கொலை நடந்த விதத்தை பாரக்கும் போது கொலையாளி உண்மையான குறிபார்த்துச்சுடும் கைதேர்ந்த கொலையாளி இல்லையென்பது மட்டும் தெளிவாகின்றது. கைதேர்ந்த கொலையாளியாக இருந்திருந்தல் ஒரு மீற்றரிற்கும் குறைவான தூரத்தில் இருந்து சுட்ட முதலாவது குண்டு குறி தவறிப் போயிருக்காது முதலாவது குண்டே பரிதியின் தலையை துளைத்திருக்கும். அல்லது அண்மையில் ஊரில் இருந்து வந்தவராக இருந்திருப்பார் வெளிநாட்டு சூழல் அவரிற்கு பதற்றத்தை கொடுத்திருக்கும். ஆனால் பரிதியோடு கூட இருந்தவர்களின் உதவியோடுதான் தகவல்களை பெற்று கொலைக்கான திட்டம் தீட்டப் பட்டிருக்கும் என்பது உறுதியாகத் தெரிகின்றது.
இது அத்தனையையும் பதற்றத்தோடு கவனித்துக்கொண்டிருந்த ஒருவர் காவல்த்துறையின் இலக்கத்தை அழுத்துகிறார். சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்த காவல்த்துறையினரிற்கு கெல்மெட் போட்டபடி முகத்தை துணியால் மூடிய இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்க. அதே நேரம் அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படை முதலுதவி பிரிவினர் பரிதியின் உயிர் பிரிந்து விட்டதை உறுதி செய்கிறார்கள். உடனடியாக அங்கிருந்தவர்களின் விபரம் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட காவல்த்துறையினர் அவர்களை அகற்றி விட்டு அந்த இடத்திற்கு யாரும் வராதபடி வீதிகளை மூடிவிடுகிறார்கள்.மேலதிக காவல்த்துறையினர் புலநாய்வுத் துறையினர் தடவியல் நிபுணர்கள் என அங்கு விரைகின்றார்கள்.
அதற்கிடையில் பரிதியோடு நின்றிருந்த பார்த்திபன் பரிதி கொல்லப் பட்டு விட்டதாக தனது கைத்தொலைபேசி மூலம் செய்தியை மற்றையவர்களிற்கு தெரிவிக்கின்றார். செய்தி பாரிசில் தமிழர்களிடம் வேகமாகப் பரவுகின்றது. மறுபக்கம் காவல்துறையினர் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் போதே கொலை நடந்த ஒரு சில நிமிடங்களிலேயே தாங்களே தமிழ்த்தேசிய ஊடகம் என்று தங்களைத் தாங்களே பிரகடனம் செய்த சில இணையத்தளங்கள் கொலையாளிகளை கண்டு பிடித்து சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் பரிதி படுகொலை என்கிற செய்தியை வெளியிடுகிறார்கள். அதற்கடுத்த நிமிடங்களிலேயே கொலையாளிகளையும் கண்டு பிடித்து கே.பி. மற்றும் வினாயகம் ஆகியோரின் படங்களைப் போட்டு இவர்கள்தான் கொலையாளிகள் என்றும் செய்திகள் வெளியாகின்றது. இத்தனைக்கும் அப்பொழுதுதான் தடவியல் பரிசோதனைகள் முடிந்து பரிதியின் உடலை பிரெஞ்சு காவல்த்துறையினர் மேலதிக பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
000000000000000000000000000
பரிதியை றேகன் என்கிற பெயரில் 84 ம் ஆண்டு இறுதிகளில் புலிகள் அமைப்பின் அன்றைய பிரதித் தலைவர் மாத்தையாவின் பாதுகாப்பு பிரிவு பொறுப்பாளராக எனக்கு அறிமுகம் ஆகின்றான். பின்னர் 85 ம் ஆண்டு கிளிநொச்சியில் ஒரு முகாம் பொறுப்பாளராக இருந்தவேளை கிளிநொச்சி இராணுவ முகாம் பகுதியில் நானும் நின்றிருந்ததால் எங்கள் அறிமுகம் நட்பாகி கடந்த ஆண்டு வரை தொடரவே செய்தது.கடந்த வருடம் வரை தமிழர் வாழும் உலகநாடுகள் அனைத்திலும் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயவக அமைப்பு ஒரு இடத்தில் நடாத்திவந்த மாவீரர் நாளானது கடந்த வருடம் இரண்டு அமைப்புக்களால் இரண்டு இடங்ககளில் நடப்பதற்கான ஏற்படுகள் நடந்து கொண்டிருந்த போதுதான் நான் பரிதியை சந்தித்து கதைத்திருந்தேன். இரண்டாவது மாவீரர் நாள் ஏற்பாடுகளை செய்திருந்தவர்கள் புலிகளின் தலைமைச் செயலகம் என்று தங்களை பிரகடனப் படுத்தியிருந்தார்கள். இந்த தலைமைச் செயலகம் என்பவர்கள் யாரென கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விடலாம். இறுதி யுத்தத்தின் போது யுத்தப் பிரதேசத்திலிருந்தும் மற்றும் யுத்தப் பிரதேசங்கள்ளிற்கு வெளியே அதாவது வடக்கு கிழக்கிற்கு வெளியே நின்றிருந்த இலங்கையிலிருந்து தப்பியோடி இந்தியா மலேசியா . சிங்கப்பூர்.இந்தோனிசியா. தாய்லாந்து ஆகிய நாடுகளிற்கு வந்து சேர்கிறார்கள்.இதில் பெரும் பாலானவர்கள் புலிகளின் புலனாய்வு பிரிவைச சேர்ந்தவர்கள். புலிகளின் முடிவிற்கு பின்னரும் புலிகளின் பெயரில் தொடர்ந்து ராமு சுபன் என்னும் பெயரில் மலேசியாவில் இருந்து வெளியான அறிக்கைகள் இவர்களுடையதுதான்.இப்படி வந்து சேர்ந்தவர்கள் தாங்கள் வெளி நாடுகளிற்கு வருவதற்காகவும் மற்றும் முகாம்களில் தங்கியிருக்கும் தங்கள் குடும்பங்களை மீட்கவும் வெளிநாடுகளில் இருந்த அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு பண உதவிகளை கோருகின்றனர்.
ஆனால் புலிகள் அமைப்பு முடிவிற்கு வந்துகொண்டிருக்கின்றது என்கிற செய்தி 2009 ம் ஆண்டு ஏப்றல் மாதமளவில் அறிந்து கொண்ட அனைத்துகத்தை சேர்ந்தவர்கள் இறுதி யுத்தத்திற்கு என சேகரித்த நிதியில் கிடைத்ததை சுருட்டவும் புலிகளின் அசையும் அசையா சொத்துக்களை பங்கு போடும் போட்டியில் பிரிந்து நின்று சண்டை பிடிக்கத் தொடங்கியிருந்தனர். ஆனால் யாரும் பெரிய வன்முறைகளில் இயங்காமல் புத்திசாலித் தனமாக நடந்து கொண்டார்கள் காரணம் வன்முறைகள் பின்னர் வழக்காகி காவத்துறைக்கு போனால் அவர்கள் நோண்டியெடுத்து உள்ளதையும் பிடுங்கி விடுவார்கள் என்கிற பயம் அவர்களிற்கு. ஏனெனில் புலிகள் இயக்கத்திற்கு உலகம் முழுவதும் உள்ள வர்த்தக வியாபரங்களால் மாதம் ஒன்றிற்கு சுமார் 300 மில்லியன் டெலர்களை வருமானமாகப் பெறும் அமைப்பாக இருந்தது. இலங்கையரசே கடன் வாங்கி ஆயுதம் வாங்கி சண்டை பிடித்தக் கொண்டிருந்தபோது புலிகள் அமைப்பு தங்கள் பணத்திலேயே நவீனரக ஆயுதங்களாக இறக்கி சண்டை பிடித்துக்கொண்டிருந்தார்கள். 2001ம் ஆண்டிற்கு பின்னர் அவர்களால் ஆயுதங்களை வன்னிக்குள் கொண்டு சேர்க்க முடியாமல் போனது வேறு கதை..அப்படி உலகம் முழுவதும் சொத்து சண்டைகள் நடக்கத் தொடங்கியிரந் போது பிரான்சில் பிரிந்து சண்டை பிடித்தவர்களில் முக்கியமாக பரிதி மேக்தா சுக்குளா போன்றவர்கள் ஒரு புறமும் ஆதித்தன் சாம்ராஜ் போன்றவர்கள் மறுபுறமுமாக பங்கு பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். சாம்ராஜ் என்பவரே புலிகள் அமைப்பின் பணத்தை உண்டியல் முறை மூலம் மற்றைய நாடுகளிற்கு பரிமாற்றம் செய்பவர். இறுதி யுத்தத்திற்கென சேகரித்த பெருமளவு நிதி இவரின் கைகளிலேயே இருந்தது. பரிதி கொலை செய்யப் பட்ட பின்னர் இவரும் பிரான்சு காவல்த்துறையால் விசாரிக்கப்பட்டிருந்தார். விசாரணை முடிந்து வெளியில் வந்ததும் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். இவர் தென்னாபிரிக்கா சென்றிருக்கலாம். அதற்கிடையில் பினாமிகளாக தனியார்கள் பெயரில் இருந்த வர்த்தக நிலையங்களின் பினாமிகள் சிலரை மிரட்டியும் பார்தார்கள். அவரகளோ போலிசுக்கு போனடித்து விடுவோம் என்றதும் பயத்தில் விட்டு விட்டார்கள். எனது நகரத்திலும் அப்படி புலிகளின் பினாமி உணவகம் ஒன்று ஈழம் றெஸ்ரோரனற் என்கிற பெயரில் ஒருவரால் இயக்கப் பட்டுக்கொண்டிருந்தது ஆனால் கடந்த வருடத்திலிருந்து அதன்பெயர் இந்தியன் றெஸ்ரோறன்ராக மாறி விட்டது.
இப்படி இவர்களது சண்டையில் தப்பி வந்தவர்களது உதவிக் கோரிக்கைகளை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை.ஆனால் தப்பி வந்தவர்கள் தங்கள் தனிப்பட்ட நண்பர்கள் உறவுகளின் உதவிகளுடன் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஜரோப்பாவிற்குள் வந்து விடுகிறார்கள். அப்படி வந்து சேர்ந்தவரகளில் பலர் தாங்கள் தங்கள் விசாப் பிரச்சனை வேலை என்று இருந்துவிட்டார்கள். ஆனால் பெருமளவு பணத்தை பதுக்கி வைத்துக்கொண்டு தங்களிற்கு உதவவில்லையென்கிற கோபம் வெளிநாடுகளிற்கு வந்து சேர்ந்தவர்கள் நேரிலும் சென்று பண உதவி செய்யுமாறும் தாயகத்தில் பாதிக்கப்பட்ட போராளிக்குடும்பங்களிற்கு உதவுமாறும் கேட்டுப் பார்க்கிறார்கள். அதுவும் அனைத்துலகத்தை சேர்ந்தவர்களால் மறுக்கப்படவே புதிதாய் வந்து சேர்ந்தவர்கள் சிலர் இணைந்து தாங்களே தலைமைச் செயலகம் தாங்கள்தான் தாங்கள் தான் புலிகள் அமைப்பின் அனைத்து விடயங்களையும் முடிவெடுக்கும் அதிகாரம் உடையர்கள் என அறிக்கையொன்றையும் விடுகிறார்கள். அப்படி தலைமைச் செயலகம் என்வர்களில் இலண்டனில் சுரேஸ்.ராமு சுபன்.மற்றும் சங்கீதன் . பிரான்சில் தமிழரசன்.கனி. ஜெர்மனியில் தும்பன் புலவர் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
இவர்களது வருகையும் அறிக்கையும் ஏற்கனவே வெளிநாடுகளில் அனைத்துலகச் செயலகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு அல்லது துரத்தப் பட்டவர்களிற்கு புதிய உற்சகத்தை கொடுக்க அவர்களும் தலைமைச் செயலகத்தோடு கைகோர்த்துக் கொள்கிறார்கள். இது இப்படியாக போய்க்கொண்டிருக்கும் போது புலிகளின் முடிவில் தொடங்கப் பட்ட நாடு கடந்த தமிழீழ அரசையும் இயங்க விடாமல் மிக மோசமாக அனைத்துலகச் செயலகத்தினர் எதிர்த்துக்கொண்டிருந்தனர். அனைத்துலகத்தின் ஜெர்மனிய பொறுப்பாளர் வாகீசன் என்பவர் தான் இருக்கும் வரை நாடு கடந்த தமிழீழ அரசை இயங்க விடமாட்டேன் ஒரு இடத்தில் கூட்டம் நடாத்த விடமாட்டேன் என பகிரங்கமாக சவால் விட்டிருந்ததோடு மட்டுமல்லாமல் ஜெர்மனி பிரான்ஸ் சுவிஸ் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நா.க.அரசின் கூட்டங்களை குளப்பிக்கொண்டும் இருந்தார்கள். கே.பி கைதாகிய பின்னர் நா.க அரசை இயக்கியவர்கள் அனைவருமே கோட்சூட் போட்ட கனவான்கள். யாராவது வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சண்டை என்று இறங்கினால் ஒதுங்கி ஓரமாய் போய் விடுகிறவர்கள். அவர்களது கூட்டங்களில் அனைத்துலகச் செயலகத்தினர் வேட்டியை மடித்துக் கட்டியபடி வாடா வா..என்கிற மிரட்டல்களால் பயந்து போய் கையை பிசைந்து கொண்டு நின்றவர்களிற்கு இந்த புதிய தலைமைச் செயலக வரவுகள் தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டவே அப்படியே பாய்ந்து பற்றிக் கொண்டார்கள். இப்படியான புது கூட்டணி இன்னொரு மாவீரர் தினத்தை கடந்த வருடம் அறிவித்தபோதுதான் நானும் வேறு சில முன்னைநாள் போராளிகளும் ஒரு சமரசத் திட்டத்தோடு பரிதியை சந்தித்திருந்தோம்.
எங்கள் சந்திப்பானது மாவீரர் தினத்தை பிரிக்காது ஒற்றுமையாக நடத்துமாறும் அதே நேரம் இயக்கத்தின் வர்த்தக நிறுவனங்களை நடாத்துபவர்கள் அதன் வருமானத்தில் 20 வீதத்தை மாதா மாதம் பாதிக்கப்பட்ட போராளிக் குடும்பங்களிற்கு கொடுக்குமாறும் கோரிக்கை வைத்தோம். சிலர் 5 வீதத்தை தருவதாக ஒத்துக் கொண்டார்கள். ஆனால் மாவீரர் நாள் இணைந்து செய்யமுடியாது என்று மறுத்ததோடு அதற்கு அவர்கள் கூறிய காரணம். இறுதி யுத்தத்தில் இருந்து தப்பிவந்தவர்கள் அனைவரும் இலங்கை புலனாய்வு பிரிவால் அனுப்பப் பட்டவர்கள் அவர்களுடன் இணைய முடியாது அவர்களிற்கு வருமானத்தில் பங்கும் கிடையாது என்றுவிட்டார்கள். புதிதாய் வந்தவர்கள் சிலரில் எனக்கும் சில சந்தேககங்கள் இருக்கத் தான் செய்தது அதனை கட்டுரைகளாகவே கடந்து ஆண்டு எழுதியிருக்கிறேன். ஆனால் உண்மையில் அவர்கள் இலங்கை இந்திய புலனாய்வுத் துறையால் இயக்கப் பட்டாலும் நாங்கள் இனியென்ன அடுத்த ஆயுதப் போராட்டமா நடாத்தப் போகிறோம் மாவீரர் தினம் தானே. இரண்டாம் உலக யுத்தத்தில் கொல்லப் பட்ட ஜெர்மனிய இரணுவத்தினரிற்கே பிரான்சு அரசு நினைவுத் தூபி கட்டி அஞ்சலி செலுத்தியிருக்கிறபோது எங்கள் மாவீரர்கள் தினத்தை இலங்கை இந்திய புலனாய்வு துறை என்று சந்தேகப் படுபவர்களோடு இணைந்து செய்வதில் எவ்வித நட்டமும் இல்லை அவர்கள் மாவீரர் தினத்தை உளவு பார்த்து என்ன செய்யப் போகிறார்கள் என வாதாடியிருந்தோம். ஆனால் அவங்களா நாங்களா என மோதிப் பார்த்து விடுவோம் என்று அனைத்துலக செயலகத்தினர் சவால் விட்டார்களே தவிர இணக்கத்திற்கு வரவில்லை. அதன் பின்னர் மாவீரர் தினமும் இரண்டாக நடந்து முடிந்தது. கடந்த வருடம் பரிதியும் தாக்குலிற்குள்ளாகியிருந்தார். அது மட்டுமல்ல அனைத்துலக செயலக இலண்டன் பொறுப்பாளர் தனம் மீதும் தாக்குதல் நடாத்தப் பட்டிருந்தது.
இந்த வருடம் பரிதி கொலை செய்யப் பட்டு விட்டார். கொலை நடந்த மறுநாள் பரிதிக்கு தளபதி. லெப்.கேணல். கேணல் என்று அவரவர் தங்கள் விருப்பத்திற்கு பதவிகள் கொடுத்து இணையத்தளங்களில் அஞ்சலி வெளியிட்டிருந்தார்கள். தற்சமயம் விடுதலையாகி வவுனியாவில் வசிக்கும் முன்னை நாள் போராளியொருவர் பரிதி பற்றி கதைத்தபோது அவர் சொன்னது எங்கடை தலைவர் தளபதி கேணல் எல்லாரையும் வெளிநாட்டிற்கு அனுப்பிப் போட்டு வெறும் சப்பையள் எங்களை வைச்சு சண்டை பிடிச்சதிலைதான் தோத்து போனவர் என்று சொல்லி சிரித்தான். இது இப்படியிருக்க கொலை நடந்து நான்குநாட்கள் கழித்து நடராசா மகீந்திரன் (பரிதி)கொலைச் சந்தேக நபர்கள் இருவர் கைது என்கிற செய்தி பிரெஞ்சு ஊடககங்களில் வெளியாகின்றது. றமேஸ் மற்றும் பிறேம் என்பவர்களே கைதானவர்கள் இவர்கள் பெயர்களை இதுவரை காவல்த்துறையினர் இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.அதற்கடுத்ததாக தாஸ் என்கிற மன்னைநாள் ரெலோ உறுப்பினர் ஒருவரும் கைதாகிறார். இந்தக கைதுகளும் தமிழ் இணையத் தளங்கள் தங்கள் கற்பனைகளை செய்திகளாக்கி கொண்டும் இருக்கும் போது ஏற்கனவே இரண்டு மாவீரர் தினத்திற்கான இடங்கள் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்த வேளை திடீரென வேறு சிலர். தாங்களே உண்மையான புலிகள் தங்களிற்குத்தான் தலைவர் மாவீரர் தினத்தை நடாத்துமாறு கட்டையிட்டிருக்கிறார் என்றபடி இலண்டனில் மூன்றாவது மாவீரர் தினத்தை இந்த வருடம் அறிவித்திருக்கிறார்கள்.
கொலை தொடர்பாக கைது செய்யப் பட்டவர்கள் யார்?? இந்த திடீர் மூன்றாவது மாவீரர் தினத்தை நடாத்துவது யார் என்கிற விபரங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நன்றி தொடரும்..................நன்றி அவலங்கள்