12/20/2012

| |

இலங்கையில் பல உயிரினங்கள் அழிந்துள்ளன

இலங்கையில் பல உயிரினங்கள் அழிந்துள்ளனஇலங்கையில் பலவித விலங்குகள் மற்றும் தாவர வகைகள் அழிவின் விளிம்பில் உள்ளன அல்லது அழிந்து விட்டன என்று அரசின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

கிழக்குப் பகுதியில் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கண்டல் தாவரம்
இலங்கைக்கே உரிய உயிரினங்கள் குறித்து அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘சிவப்பு அட்டவணை 2012‘ எனும் கையேட்டில் இலங்கையிலிருந்து குறைந்தது 72 உயிரினங்கள் அழிந்து விட்டன அல்லது மறைந்து விட்டன என்பது கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான இனங்கள் குறித்து அரசின் அந்த சிவப்பு அட்டவணையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அந்த உயிரினங்களின் இருப்பின் அடிப்படையில், அவை பல குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அழிந்து விட்டவை, அழிவின் விளிம்பில் இருப்பவை, மிகவும் பலவீனமான நிலையில் உள்ளவை, அண்மைக் காலங்களில் அளவில் பெருகியுள்ளவை என அவை பட்டியிலடப்பட்டுள்ளன.உதாரணமாக கிழக்கே, மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடாப் பகுதியில் இருந்த ஒரு வகையான கண்டல் தாவரமும், கரடியனாறு பகுதியில் தும்பாலை எனப்படும் ஒருவகை மரமும் முற்றாக காணாமல் போயுள்ளன என்று, அரசில் அறிக்கை தயாரிப்பு வல்லுநர் குழுவில் ஒரு உறுப்பினராக இருக்கும் கலாநிதி தங்கமுத்து ஜெயசிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதேபோல ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உதாரணங்களை கண்டுபிடிக்கக் கூடியாத இருக்கும் எனவும் கிழக்கு பல்கலைகழகத்தின் தாவரவியல் பேராசிரியரான அவர் கூறுகிறார்.
இந்த சிவப்பு அட்டவணை அல்லது புத்தகமே அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அழிவின் விளிம்பில் உள்ள இனங்களை காப்பாற்ற அடுத்து என்ன செய்யலாம் எனவும் வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அபிவிருத்தி, யுத்தம் போன்ற பல காரணங்களாலேயே பல இனங்கள் அழிந்தோ அல்லது அழிந்து போகக் கூடிய நிலையிலோ உள்ளன எனவும் கலாநிதி ஜெயசிங்கம் மேலும் தெரிவித்தார்.