12/02/2012

| |

மறைந்த முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலுடனான எனது முதல் சந்திப்பு இப்போதும் பசுமையாக நினைவிருக்கிறது *கே. வைத்தியநாதன்

இந்தியாவின் எதிர்காலம் மிகவும் பயமுறுத்துகிறது. இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்றில்லாமல் எல்லா கட்சிகளும் சமூக விரோதிகளின் கூடாரங்களாக, உட்கட்சி ஜனநாயகமே இல்லாத சர்வாதிகார தலைமையுடனோ, வாரிசுத் தலைமையுடனோ இயங்கத் தொடங்கிவிட்ட நிலைமை. மக்கள் அரசின் மீது மட்டுமல்ல, தேர்தல் முறை, ஜனநாயகம், நீதித் துறை என்று எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறார்கள். இது இந்தியாவை மீண்டும் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளி விடுமோ என்று நான் பயப்படுகிறேன்.
மறைந்த முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலுடனான எனது முதல் சந்திப்பு இப்போதும் பசுமையாக நினைவிருக்கிறது. சென்னை ஆளுநர் மாளிகையில்தான் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஆண்டு 1973. அப்போது நான் பகுதிநேரப் பத்திரிகையாளனாக எழுத்துத் துறையில் தடம் பதிக்க முயன்று கொண்டிருந்த நேரம்.
அன்றைய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் இந்தர்குமார் குஜ்ரால் சென்னையில் ஓரிரு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆளுநர் மாளிகையில் வந்து தங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. தலைவர்களையும், அமைச்சர்களையும் சந்திப்பது என்பது இப்போது போல அவ்வளவு சிரமமான விஷயமல்ல.
ஆளுநர் மாளிகை வரவேற்பறையில் அமைச்சர் குஜ்ராலை சந்திக்க நான் காத்துக் கொண்டிருந்தபோது, ஒரு இன்ப அதிர்ச்சி. அறையிலிருந்து குஜ்ராலுடன் வெளியே வந்தவர் கவியரசு கண்ணதாசன். கவிஞருக்கு என்னை முன்பே தெரியும் என்பதால், நான் வணக்கம் சொன்னவுடன் சிநேகபூர்வராக சிரித்தபடி, என்னை குஜ்ராலுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்தான். அதற்குப் பிறகு நான் குஜ்ராலை சந்திக்கும்போதெல்லாம், கவிஞர் கண்ணதாசனைப் பற்றிய பேச்சு வராமல் இருந்ததே இல்லை.
""நான் மறக்க முடியாத தில்லி நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் ஐ.கே. குஜ்ரால். 1969 காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு, என்னைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்த ஐ.கே. குஜ்ரால் சென்னை வரும்போதெல்லாம் ராஜ் பவனுக்கு டெலக்ஸ் செய்தி சொல்லி, என்னை எப்படியாவது ஏர்போர்ட்டுக்கு வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொள்வார். அல்லது ராஜ் பவனுக்கு வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொள்வார்.
மிகவும் இனிமையாகப் பழகக் கூடியவர். மிக நேர்மையானவர். பின்னாளில் ஏதோ ஒரு மனச் சங்கடம் காரணமாக, அவர் செய்தி ஒலிபரப்பு இலாகாவைத் துறந்து, ரஷியாவுக்குப் போக வேண்டியிருந்தாலும், இன்னும்கூட மந்திரிசபையிலே இருக்கின்ற யாரும் குறை சொல்ல முடியாத மிக அற்புதமான தோழர் ஐ.கே. குஜ்ரால்'' என்று 1978-ல் வெளிவந்த தனது "நான் பார்த்த தலைவர்கள்' புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் பதிவு செய்திருப்பார். ÷அப்படித் தொடங்கிய அந்த அறிமுகம் கடந்த நாற்பது ஆண்டுகளில் நெருங்கிய தொடர்பாக மாறியது என்றால் அதற்குக் காரணம் ஐ.கே. குஜ்ரால் என்கிற மாமனிதரின் மனிதநேயமும் பெரியவன், சிறியவன் என்கிற பாகுபாடு இல்லாமல் பழகும் தன்மையும்தான்.
இந்தர்குமார் குஜ்ராலின் இளமைக் காலம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாணவப் பருவத்தில் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர். பிறகு மகாத்மா காந்தியால் கவரப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
மேற்குப் பாகிஸ்தானில் பிறந்து, தேசப் பிரிவினைக்குப் பிறகு தில்லிக்கு வந்த குடும்பம் அவருடையது. பிரிவினைக் கால கட்டங்களில் இந்திரா காந்தியுடன் இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களில் இந்தர்குமார் குஜ்ராலும் ஒருவர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான பரூக்கியும், ஆரம்பத்தில் ஸ்தாபன காங்கிரஸிலிருந்து, ஜனதாக் கட்சியிலும், பாஜகவிலும் மூத்த தலைவராகவும் அமைச்சராகவும் இருந்து கடைசியில் கேரள ஆளுநராக மரணமடைந்த சிக்கந்தர் பக்த்தும், இந்தர்குமார் குஜ்ராலும் கல்லூரியில் ஒரே வகுப்பில், ஒரே பெஞ்சில் அமர்ந்து படித்த நண்பர்கள். இது குஜ்ரால் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
1994 ஆம் ஆண்டு பரூக்கி, சிக்கந்தர் பக்த், ஐ.கே. குஜ்ரால் மூவரையும், குஜ்ராலின் வீட்டில் சந்திக்க வைத்து ஒரு பேட்டி எடுத்தபோது, அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ஆச்சரியகரமானவை. பிரிவினைக்குப் பிறகு தில்லியில் நடந்த சம்பவங்களையும், அகதிகளாகப் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களின் அவலங்களையும் அப்போதுதான் நான் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
பாகிஸ்தானைப் பற்றி குஜ்ரால் கூறுவார்- ""பாகிஸ்தானில் மக்கள் எழுச்சி போராட்டம் என்று எதுவுமே நடந்தது கிடையாது. பகத் சிங், ஜாலியன்வாலாபாக் போன்ற மக்கள் எழுச்சி எல்லாமே இந்தியாவில் உள்ள கிழக்குப் பஞ்சாபில்தான் நடந்தனவே தவிர, மேற்குப் பஞ்சாப் மக்கள் என்றைக்கும் எப்போதும் எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை. இந்திய மக்கள் விரும்பி போராடியதால் சுதந்திரம் கிடைத்தது. ஆனால், பாகிஸ்தான் என்பது அந்த மக்கள் விரும்பியதால் கிடைத்ததல்ல. பிரிட்டிஷார் விரும்பியதால் கொடுக்கப்பட்டது'' என்பார் குஜ்ரால்.
ஐ.கே. குஜ்ராலும் அறிஞர் அண்ணாவும் மாநிலங்களவையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். மாநிலங்களவையில் அண்ணா பேசியதையும், அவருடன் மூன்று நான்கு தடவை குஜ்ரால் கலந்துரையாடியதையும் பல தடவை நினைவுகூர்ந்திருக்கிறார் குஜ்ரால்.
வி.பி. சிங் தனது அமைச்சரவையில் குஜ்ரால் உள்துறை அமைச்சராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் தனக்கு வெளி விவகாரத் துறைதான் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் குஜ்ரால்.
உள்துறை அமைச்சர் பதவி என்பது, பிரதமர் பதவிக்கு நிகரான அதிகாரம் பொருந்திய ஒன்று. அதை ஏன் குஜ்ரால் மறுக்கிறார் என்று எல்லோருக்குமே வியப்பு. குஜ்ரால்ஜி சிரித்துக்கொண்டே சொன்ன காரணம் என்ன தெரியுமா? ""நமக்கு நமது பலம் தெரியாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை. பலவீனம் தெரிந்திருக்க வேண்டும். வெற்றிகரமான உள்துறை அமைச்சர், கல்நெஞ்சக்காரராகவும், தயவுதாட்சண்யம் பார்க்காதவராகவும் இருக்க வேண்டும். என்னுடைய பலவீனம் எனக்குத் தெரியும்''. அதுதான் ஐ.கே. குஜ்ரால்!
இன்னொரு மறக்க முடியாத நிகழ்வு, அவர் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தது. ஜெயின் கமிஷன் அறிக்கை வெளிவந்த நேரம் அது. வெளியிலிருந்து ஆதரவு தந்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, அவரது அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்களைப் பதவி விலகக் கோரி நிர்பந்தம் கொடுத்து வந்தது. திமுக சார்பில் அமைச்சர் முரசொலி மாறன், ஆட்சி கவிழாமல் இருக்கத் தாங்கள் பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்று பிரதமர் குஜ்ராலிடம் உறுதி அளிக்கிறார். ஆனாலும், பிரதமர் குஜ்ரால் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
""எனது அமைச்சரவை சகாக்களைவிட எனக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் காங்கிரஸ் முக்கியமாகப் படவில்லை. மேலும், பிரதமர் பதவி என்பது அச்சுறுத்தலுக்கும், வெளியிலிருந்து ஆட்டிப் படைப்பதற்கும் உட்படுத்தப்படுமேயானால் அதைவிட அவமானம் இந்திய ஜனநாயகத்திற்கு எதுவும் கிடையாது. பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தனது அமைச்சரவை சகாக்களை பலி கொடுத்தவர் குஜ்ரால் என்கிற அவப்பெயரைப் பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை. அப்படிச் செய்வதை எனது மனசாட்சி ஒப்புக் கொள்ளவில்லை, அதனால்தான் ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்று பதவியை ராஜிநாமா செய்து விட்டேன்'' என்று சற்றும் கவலையோ, ஏமாற்றமோ இல்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னார் அவர். அதுதான் குஜ்ரால்!
2003-ல் முரசொலி மாறன் உயிருடன் இருக்கும்வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பதவி வகித்து, அவரது மரணத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக இணைந்தது குஜ்ரால்ஜிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரது வருத்தம் திமுக மீதல்ல. எந்தத் திமுக தனது அமைச்சரவையில் இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் வற்புறுத்தியதோ, அந்தத் திமுகவை எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல் தங்கள் தலைமையிலான கூட்டணியில் சேர்த்துக் கொண்ட காங்கிரஸ் மீதுதான் அவருக்குக் கோபம். அதைப் பற்றி குஜ்ரால்ஜி அடித்த கமெண்ட்- காங்கிரஸ்காரர்களுக்கு மனசாட்சி கிடையாது!
குஜ்ரால்ஜி பதவியில் இருந்ததை விடப் பதவி இல்லாமல் இருந்தபோதுதான் எனக்கு அவரிடம் நெருக்கம் அதிகமாக இருந்தது. அவரது வீட்டிற்குச் சென்று மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பேன். குறைந்தது நாற்பது ஐம்பது ஒலிநாடாக்கள் பத்திரமாக இருக்கின்றன.
இன்று உலக அரசியல் பற்றி எனக்கு ஏதாவது தெரிந்திருந்தால், அது ஐ.கே. குஜ்ரால் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம். அவரை சந்திக்க வரும் பல வெளிநாட்டுத் தலைவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
"டிப்ளமசி' (வெளியுறவு ராஜதந்திரம்) என்ன என்பதற்கு குஜ்ரால்ஜி ஒரு வழிமுறை சொன்னார். அது நாடுகளுக்கு இடையே மட்டுமல்ல, மனிதர்களுக்கு இடையேயும்கூட உள்ள கருத்து வேறுபாடுகளை அகற்றும் அருமையான யோசனை.
""எந்தப் பிரச்னையாக இருந்தாலும், நீ உனது தரப்பு நியாயத்தை மட்டுமே பார்க்காதே. எதிர்த்தரப்பு நியாயத்தை அவர்களது பார்வையில் சிந்திக்கப் பழகு. அப்படி இரண்டு தரப்பினரும் சிந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தலைப்பட்டால், உலகில் எத்தனை சிக்கலான பிரச்னையாக இருந்தாலும் அதற்கு சுலபமாக விடை கண்டுபிடித்து விடலாம். இதுதான் குஜ்ரால் டாக்ட்ரைனின் அடிப்படை'' என்று விளக்கினார் அவர்.
1998 மார்ச்சில் அவர் பதவி விலகிய பிறகு எனக்கும் அவருக்குமான நெருக்கம் மிகவும் அதிகரித்தது என்பது மட்டுமல்ல, அடுத்த நான்கைந்து வருடங்கள் வாரத்துக்கு ஒருமுறையாவது அவரை சந்திப்பது, அவர் எழுதும் புத்தகங்களைப் பிழை திருத்திக் கொடுப்பது என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் தில்லி ஜன்பத் 5 ஆம் எண் இல்லத்தில்தான் எனது பொழுது கழியும்.
அந்தக் காலகட்டத்தில்தான் ஒருநாள் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் செüத் அவென்யூ மூன்றாம் இலக்க இல்லத்தில் முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவெ கெüட, குஜ்ரால் ஆகிய ஐந்து பேரும் சந்தித்துப் பேசினார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து 1977-ல் ஜனதா கட்சி தொடங்கியதுபோல, காங்கிரஸýக்கும் பாஜகவுக்கும் மாற்றாக ஒரு கட்சி தொடங்கப்பட வேண்டும் என்பது சந்திரசேகரின் எண்ணமாக இருந்தது. குஜ்ராலுக்கும் அதில் உடன்பாடு இருந்தது. ஆனால் பி.வி. நரசிம்ம ராவ், தான் கடைசி வரை காங்கிரஸ்காரனாகவே இருந்து மரணமடைய விரும்புவதாகக் கூறி, அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
நாடாளுமன்றக் கூச்சல் குழப்பத்தால் முக்கியமான அலுவல்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஐ.கே. குஜ்ரால் முன்மொழிந்த திட்டம்தான், பாராளுமன்றக் குழுக்களில் மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு, ஒப்புதலுக்கு அவையில் வைக்கும் இன்றைய நடைமுறை. இதனால்தான் இத்தனை குழப்பங்களுக்கு நடுவிலும், பல சட்ட திட்டங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. இதன் பின்னணியில் குஜ்ரால் இருந்தார் என்பது பலருக்கும் தெரியாது. அவரும் அதைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை.
சமூக விரோதிகளும், குற்றப் பின்னணி உள்ளவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகும் போக்கு, குஜ்ரால்ஜியை மிகவும் வேதனைப்படுத்தி வந்தது. எனக்குத் தந்திருக்கும் பல பேட்டிகளில் அதைப் பற்றித்தான் அதிகமாகக் கவலை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது முயற்சியின் பேரில் "நேர்மைக் குழு' (எதிக்ஸ் கமிட்டி) ஒன்று நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பிறகு யாரும் அதைப் பற்றிக் கவலைப்படாததால் அது செயல்படாமலே போய்விட்டது.
""இந்தியாவின் எதிர்காலம் மிகவும் பயமுறுத்துகிறது. இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்றில்லாமல் எல்லா கட்சிகளும் சமூக விரோதிகளின் கூடாரங்களாக, உட்கட்சி ஜனநாயகமே இல்லாத சர்வாதிகாரத் தலைமையுடனோ, வாரிசுத் தலைமையுடனோ இயங்கத் தொடங்கிவிட்ட நிலைமை. அரசின் மீது மட்டுமல்ல, தேர்தல் முறை, ஜனநாயகம் என்று எல்லாவற்றிலும் மக்கள் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறார்கள். இது இந்தியாவை மீண்டும் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளி விடுமோ என்று நான் பயப்படுகிறேன்!'' - சென்ற வருடம் எனக்களித்த பேட்டியில் குஜ்ரால் சொன்ன வார்த்தைகள் இவை.
அநேகமாக அதுதான் அவர் அளித்த கடைசிப் பத்திரிகைப் பேட்டியாக இருக்க வேண்டும். அடுத்த ஓரிரு மாதங்களில் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, யாரையும் சந்திப்பதையே நிறுத்திவிட்டார்.
"இந்தியாவுக்கான வெளிவிவகாரக் கொள்கை', "தொடர்ச்சியுடனான மாற்றம்- இந்தியாவின் வெளிவிவாகரக் கொள்கை', "சுயசரிதம்', "தேர்ந்தெடுத்த குறிப்புகள்' என்று அவர் எழுதியிருக்கும் சில புத்தகங்களை எனக்குத் தந்து, "இதை நீங்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுங்களேன் என்று கேட்டுக் கொண்டார். கலைஞன் பதிப்பகம் நந்தாவும் அதை வெளியிடத் தயாராக இருந்தார். என்னால்தான் குஜ்ரால்ஜியின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
அந்தக் கடைசிச் சந்திப்பின்போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் தான் விடைபெறுவதற்கு முன்னால் சொன்ன வார்த்தைகள், நான் ஒவ்வொரு முறை பேனாவைப் பிடிக்கும்போதும் என் காதில் ஒலிக்கிறது-
""எல்லா நம்பிக்கையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தகர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்காகவா நாம் சுதந்திரத்திற்காகப் போராடினோம் என்றுகூடச் சில வேளை சலிப்பு ஏற்படுகிறது. இப்போதைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ஒரு சில பத்திரிகையாளர்கள்தான். அவர்கள் மட்டும் சரியாக இருந்துவிட்டால், இந்திய மக்களையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றி விட முடியும். நீதித் துறையும், பத்திரிகைகளும்தான் இந்தியாவைக் காப்பாற்றியாக வேண்டும்!''
÷இந்தர்குமார் குஜ்ரால் ஒரு தீர்க்கதரிசி!