-மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா-
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்குமிடையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்த கருத்து குறித்து தாம் உரையாற்றும் சந்தரப்பத்தின் போது சுட்டிக்காட்ட முனைந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்குடன் வாக்குவாதமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஈடுபட்டதையடுத்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்த வேண்டிய நிலைக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் தள்ளப்பட்டார்.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று மாலை மன்னார் அரசாங்க அதிபர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாருக்,செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளிட்ட திணைக்களங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டம் ஆரம்பமாகிய போது அமைச்சரும், தலைவருமான றிசாத் பதியுதீன் ‘இந்த மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களும் மாவட்டத்தின் சகல அபிவிருத்தி திட்டங்களையும் அனுபவிக்கும் உரிமை கொண்டவர்கள், இதில் இனவாதம், மதவாதம் என்ற சொல்லுக்கே இடமில்லை என்பதை தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றேன்’ என தெரிவித்து மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்களை ஆரம்பம் செய்தார்.
பல்வேறு புதிய திட்டங்களுக்கான மும்மொழிவுகளை அதிகாரிகள் சமர்பித்த போது அதற்கு உடனடியாக அனுமதியளித்தார். அப்போது தாம் கருத்து தெரிவிக்க நேரம் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமது தரப்பு சார்பில் சந்தர்ப்பம் கோறியதும், அமைச்சர் அதற்கான சந்தரப்பத்தை வழங்கினார். உரையாற்ற ஆரம்பித்த செல்வம் எம்.பி, சில மாதங்களாக மன்னார் மாவட்டத்தில் தமிழ் –முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு வளப்பகிர்வு காரணம் என்று கூறியதுடன், வேறு சில விடயங்களையும் பேசினார்.
அதன் பிறகு தனது நேரத்தில் ஹூனைஸ் எம்.பி.உரையாற்றும் போது இடையூறுகளை செய்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை நீங்கள் உரையாற்றும் போது நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன், அதே போன்று எமது உரையினை கேட்குமாறும் கூறி, தொடர்ந்து தமது கருத்தை வெளிப்படுத்தினார்.
மன்னார் மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எந்த பிளவுகளும், சண்டைகளும் இல்லையென்றும் சில அரசியல் வாதிகள் தங்களது அரசியல் இருப்புக்களுக்காகவும்,பிரசாரங்களுக்காகவுமே பொய்யான கட்டுக்கதைகளை கூறிவருவதாகவும், அவர்களுடன் சில மதவாதிகளும் இணைந்துள்ளதாக கூறிய போது, மீண்டும் இடை மறித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஹூனைஸ் எம.பியின் பேச்சுக்கு தடங்களை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்ற நேரம் கேட்ட போது தான் வழங்கியதாகவும், அதே போன்று பாராளுமன்ற உறுப்பினருக்கும் சந்தரப்பம் வழங்கப்பட்டதாகவும் கூறினார். ஜனநாயக நடை முறைக்கு யாவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறி கூட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்தார்.
இது குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கருத்துரைக்கும் போது-
1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் இன்றும் புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழந்த பிரதேசங்கள் காடுகளாக காட்சியளிக்கின்றன. இருந்த போதும், இந்த மாவட்டத்தில் வாழும் சகோதர சமூகமான தமிழ் சமூகத்திற்கு இம்மியளவேனும் அநியாயம் இழைக்காமல், அவர்களது தேவைகளை நாங்கள் பெற்றுக் கொடுத்து வருகின்றோம், முசலி பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவராக நான் இருக்கின்றேன். அங்குள்ள சவேரியார்புரம், கொக்குபடையான், காயா நகர், முள்ளிக்குளம், அரிப்புத் துறை உள்ளிட்ட பல தமிழ் கிராம மக்களின் தேவைகளை மனித நேயத்துடன் செய்துவருகின்றோம். அதே போல் தான் அமைச்சர் றிசாத் பதியுதீனும் இனம், மதம் கடந்து பணியாற்றுகின்றார்.
இன்று முசலி பிரதேசத்தில் மட்டும் 4 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேறவந்துள்ளன. அவர்களுக்கு இதுவரைக்கும் நிரந்தர காணி உறுதிகள் கூட கிடைக்கவில்லை, ஏன் நான் பிறந்து வளர்ந்த தம்பட்ட முதலியார் கட்டு கிராம மக்களுக்கு கூட காணி உறுதியினை பெற்றுக் கொடுக்க முடியாத நிலைவுள்ளது, ஏனெனில் சட்டத்தை மதித்து அதனை பெறும் பணிகளை முன்னெடுப்பதால், இவ்வாறு இருக்கும் பொழுது இந்த மண்ணில் வாழும் முஸ்லிம் மக்களை இனவாதியாக காண்பித்து அவர்களை மீளக் குடியமர விடாத பணியினை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தலைமையில் மேற்கொள்கின்றனர்.
அன்று ஆயுதத்தை வைத்து மக்களை அச்சுறுத்திப் பார்த்தனர்.இன்று அது இல்லாத நிலையில் இன ரீதியான முறையில் தாக்குவதற்கு முனைகின்றனர். அதற்கு தமிழ் பேசும் மக்கள் ஒரு போதும் இடம் கொடுக்கமாட்டார்கள்,ஏனெனில் நாமும் தமிழ் பேசும் மக்களுடன் ஒன்றித்து வாழ்பவர்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்.
நன்றி -காத்தான்குடி .இன்போ